விடுதலையா?
என்ன சொல்றீங்க நீங்க?
எப்படி சாத்தியம்?
வாய்ப்பே இல்லையே!
ஏன்? 40-ல்
ஒன்று கூடவா சிக்கவில்லை?
இதெல்லாம் நம்புற
மாதிரியா இருக்கு?
இப்படி நம்மில்
கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஏராளமான கேள்விகள் இன்று.
(பரவாயில்லையே,
நீதிமன்ற வழக்கொன்றை அந்த அளவுக்கு நாம் அணுக்கமாகக் கண்காணித்திருக்கிறோமே)
நாடே எதிர்பார்த்திருந்த ஊழல் வழக்கில் இன்று வெளியான தீர்ப்பை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்….
“அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை”
அதனால், வெளிநாட்டு
விசா முறை ஒப்பந்தத்தை நீட்டித்த விஷயத்தில், அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோ
ஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடியை, அனைத்து 40 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, வழக்கில்
இருந்தே ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார்.
அப்படி என்னதான் குற்றச்சாட்டு?
இன்றைய அம்னோ தலைவர் - அப்போதைய உள்துறை அமைச்சர், 2014-2017 வரையிலான காலக்கட்டத்தில் UKSB-யிடம் இருந்து 4 கோடியே 36 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றது. அதே நிறுவனத்திடம் இருந்து வெவ்வேறு நாணயங்களில் லஞ்சம் பெற்றது தொடர்பில் 7 பணச்சலவைக் குற்றசாட்டுகள் வேறு.
சீனாவில் ஓரிட சேவை மையம் (OSC) மற்றும் VLN முறையைக் கையாளும் குத்தகையை நீட்டிக்க UKSB-யிடம் இருந்து லஞ்சம் வாங்கியது.
ஒருமுகப்படுத்தப்பட்ட VLN முறையைத் தருவிக்க உள்துறை அமைச்சுடனான குத்தகையை நீட்டிக்கவும் அந்நிறுவனத்திடம் இருந்து கையூட்டு வாங்கியது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்?
2009 மலேசிய
ஊழல் ஒழிப்பு ஆணையச் சட்டத்தின் 16-ஆவது உட்பிரிவின் கீழ், 20 ஆண்டுகள் சிறை, லஞ்சப் பணத்தில் 5 மடங்குக்கும் குறையாத தொகையில்
அபராதம் அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் ( எது அதிகமோ, அது )
நீதிபதியின் தீர்ப்பு:
அரசு தரப்பு கொண்டு வந்த 3 முதன்மை சாட்சிகளும் நம்பகத்தன்மையற்றவர்கள்.
அந்த மூவரின்
வாக்குமூலங்கள் பலவீனமானவை; நம்பும்படியாக இல்லை. அவர்களையும் நம்ப முடியவில்லை. (
ஏம்பா ஆரம்பமே அடியா )
ஆதாரமான ஆதாரங்கள் இல்லை! ( கடல்லயே கிடையாதாம் )
சாஹிட்டுக்கு
பணம் கைமாறியதாகக் கூறும் அரசு தரப்பு, CCTV காட்சிகள் எதனையும் நீதிமன்றத்திடம் காட்டவில்லை.
முதன்மை சாட்சி ( காரோட்டுநர்) அழைக்கப்படவில்லை.
வீட்டு பாதுகாவலரும் தான். காவல் வீரர்களும் சாட்சிகளாக அழைக்கப்படவில்லை.
பணம் கைமாறியதற்கான
Touch ‘n Go சீட்டு, குற்றம் சாட்டப்பட்டவருடனான தொலைபேசி அழைப்பு பதிவுகள், குறுஞ்செய்தி
பறிமாற்றங்கள் என எதுவுமே நீதிமன்றத்திடம் காட்டப்படவில்லை.
நீதிபதி அதோடு
விடவில்லை. டத்தின் ஸ்ரீ ரொஸ்மா வழக்கையும் ஒப்பீடாக எடுத்துக் கொண்டார். அதாவது, ரொஸ்மாவுக்கு
கைமாறியதாகக் கூறப்படும் 50 லட்சம் ரிங்கிட்டில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் சாட்சிகளாக
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஆனால், இந்த வழக்கில், சாஹிட்டுக்கு கிடைத்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்தவர்கள் என நம்பப்படும் எவரும் ( ஹாங் காங்கைச் சேர்ந்த தொழில் அதிபர் நிக்கோல் உட்பட ) சாட்சிகளாக
அழைக்கப்படவில்லை; ஆக, அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரப் பூர்வமாக முன்வைக்கவில்லை.
நிக்கோல், பணம் மாற்றுபவர் இருவர் என
எல்லாரிடத்திடலும் விசாரணை செய்யப்பட்டிருக்கிறது, வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன;
ஆனால் குற்றசாட்டுகளை வலுவாக்க, அவர்கள் எவரையும் சாட்சியாக அரசு தரப்பு முன் நிறுத்தவில்லை.
அதே சமயம், கணக்கில் உள்ளபடி 15 பேருக்கு பணம் கைமாறியிருக்கிறது; ஆனால் யார் அந்த 15 பேர் என்பது ஓர் இடத்தில் கூட விளக்கப்படவில்லை. அவர்களுக்கும் இந்த பணப்பட்டுவாடாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் அரசு தரப்பின் சாட்சிகள் தெரிவிக்கவில்லை.
ஆக, வலுவான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படாத நிலையில், கைமாறியதாகக் கூறப்படும் பணம் அன்றைய உள்துறை அமைச்சருக்கு தான் சென்றது என தம்மால் முடிவுக்கு வர முடியாது என்கிறார் நீதிபதி. குற்றம் சாட்டப்பட்டவருக்கு தான் பணம் கைமாறியது என்பதை வெறுமனே லேஜர் புத்தகத்தில் உள்ளதை வைத்து முடிவுக்கு வர முடியாது என நீதிபதி சுட்டிக் காட்டுகிறார்.
ரொஸ்மா வழக்கில் அரசு தரப்பு, பணத்தை எடுத்தவர், வங்கிப் பணியாளர் உள்ளிட்டோரை சாட்சிகளாக நிறுத்தியது; வங்கிக் காசோலையும் ஆதாரமாக ஒப்படைக்கப்பட்டது. புகைப்படங்களும் ஒப்படைக்கப்பட்டன. வரைப்படம் கூட நீதிமன்றத்திடம் காட்டப்படது; ஆனால் இது எதுவுமே இங்கு இல்லை.
காலையில் ஆதரவாளர்கள் புடை சூழ உற்சாகமாக நீதிமன்றம் சென்ற அம்னோ தலைவருக்கு இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய நிம்மதியைத் தந்திருக்கும்.
14 நாட்களில் அத்தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்யலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அது அடுத்தக் கதை.... தற்போதைக்கு சாஹிட் ஹமிடி பெரும் கண்டத்தில் இருந்து தப்பியுள்ளார்.
வாழ்த்துகள்!
உச்ச நாற்காலியில் அமர அவருக்கு பெரும் தலைவலியாக இருந்த தடை நீங்கியுள்ளது.
வரும் நாட்களிலோ, வாரங்களிலோ இன்னும் சுவாரஷ்யமான நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம்.
#வியன் என்றும் நாட்டின் நீதிபரிபாலனத் துறைக்குத் தலை வணங்குபவன்.
பலருக்கும் பலவித கருத்துகள் இருக்கலாம்; ஆனால், கடைசியில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது; அதை மதிப்பவன் நான்.
சொல்லி முடிப்பது என்னவென்றால்.... இன்னிக்கு சரினா, அன்னிக்கும் சரிதாங்கோ! 😎
- நன்றி பெர்னாமா, FMT, The Vibes
No comments:
Post a Comment