அண்மையக் காலமாக எனக்கு அடிக்கடி ஒருவர் அதனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, இந்த நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி அவர்களே.
கிட்டத்தட்ட 13 மாதங்களுக்கு முன் அப்பதவிக்கு வந்தவரா இவர் ? என என்னையே நான் பலமுறை கேட்டுக் கொள்கிறேன். குரலை உயர்த்தி பேசாதவர், கோப முகத்தைக் காட்டாதவர், புன்முறுவலோடு கடந்து செல்பவர் என்ற அளவில் தான் அவரைப் பற்றிய அறிமுகம் இருந்தது.
இன்று அது மெல்ல மெல்ல மறைந்து அவரின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. அது தீவிர அரசியல் பார்வையாளனான எனக்கு மட்டுமல்ல. அவரின் கட்சிக்காரர்களுக்கே அவர் இன்று புதிய மனிதராகத் தான் தெரிகிறார்.
அவரின் நடவடிக்கைகள் அப்படி இருக்கின்றன. கடந்த வாரக் கடைசியில் நியூ யார்க் சென்றவர், அங்கு ஐநா மேடையை அதகளப்படுத்தி வந்திருக்கிறார். 2-3 நாட்களாக அதைப் பற்றிய பேச்சுக்கள் தான் சமூக ஊடகங்களில்.
அவர் எங்கு போனார், எதற்கு போனார் என்றே தெரியாதவர்கள், கண்டுகொள்ளாதவர்கள் எல்லாம், அவர் அப்படி என்னதான் பேசினார்? என்று கேட்கும் அளவுக்கு 'சம்பவத்தை ' சாதித்திருக்கிறார் மனிதர்.
பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடிய இடத்தில் மைக்கைப் பிடித்து ஐநா பாதுகாப்பு மன்றத்தையே விளாசி எடுத்து விட்டார். உரையைக் கேட்டவர்களுக்குத் தெரியும். ஏதோ தாங்கள் தான் மன்னாதி மன்னர்கள் என்ற தோரணையில் வல்லரசு நாடுகள் போடும் ஆட்டத்தைத் தோலுரித்து விட்டார்.
தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, ஊர் எப்படி போனால் என்ன, நமக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற மனநிலையில் ரத்து அதிகாரத்தை வைத்து தகிட தத்தோம் தாளம் போடுவதாக அந்த "உலக போலீஸ்கார" நாடுகளை ஒரு பிடி பிடித்தார்.
உங்கள் நாடகம் போதும், ரத்து அதிகாரத்தையே ரத்துச் செய்யுங்கள் என ஒரே போடாய் போட்டார். அதுவரை மேடையில் இருந்தவரின் பேச்சை ஏதோ ஒரு கடமைக்காக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நிச்சயம் சற்று தலை நிமிர்ந்துப் பார்த்திருப்பார்கள்.
அதற்கும் கால அவகாசம் கொடுக்காமல் அடுத்த அம்பை எய்தினார் ஒன்பதாவது பிரதமர். ரஷ்யா உக்ரேய்ன் போரில் ஊரை முந்திக் கொண்டு பஞ்சாயத்துக்கு வந்த வல்லரசுகள், இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் வக்கனையாக ஜகா வாங்கியது ஏன்? அந்த நேரத்தில் டீ குடிக்கப் போனீர்களா என்று கேட்காமல் கேட்பது போல் இருந்தது அவரின் கேள்வி.
2014-ஆம் ஆண்டு மலேசிய விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷ்யா அரங்கேற்றிய நாடகத்தையும் அவர் மறக்கவில்லை. தவறு செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த அனைத்துலக நடுவர் மன்றத்தை அமைக்க மலேசியா வைத்த கோரிக்கையை, ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அலேக்காக அபேஸ் செய்த ரஷ்யாவின் செயலை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.
மியன்மார் விவகாரம் இன்னும் மோசம். ஏதோ மாற்றான் தாய் பிள்ளை என்பது போலத்தான் ஐநாவின் நடவடிக்கை அதில் இருக்கிறது. மியான்மார் ராணுவ அரசின் மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க வக்கில்லை, வந்து விட்டீர்கள் வியாக்யானம் செய்வதற்கு என்று! ஆசியானிடம் அதை ஒப்படைத்து விட்டால் பிறகு எதற்கு பன்னாட்டு அமைப்பு என பீற்றிக் கொள்கிறீர்கள் என வெளுத்து விட்டார். ரத்து அதிகாரத்தை மறந்தே போனவர்களுக்கும் அதனை நினைவூட்டி விட்டார்.
குனிய குனிய கொட்டியவர்களுக்குக் கொட்டு வைத்ததோடு விடாமல் நிதி நிர்வாகம் குறித்த ஆலோசனைகளையும் முன் வைத்து விட்டு வந்திருக்கிறார். குறிப்பாக உலக நாடுகளை வாட்டும் பணவீக்கப் பிரச்னைக்குத் தீர்வாக அனைத்துலக நிதிய ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். பொருளாதாரத்தில் ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருக்கிறது. சிலரின் தந்திரமான தன்னிச்சைப் போக்கால் பாதிக்கப்படுவது என்னமோ மற்ற நாடுகள் தான் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
'மலேசியக் குடும்பம்' இவரில் தயவால் இப்போது 'உலகக் குடும்பம்' ஆகியிருக்கிறது. Inclusive என்ற பொதுவான வார்த்தையைக் குடும்பமாக்கி அதன் அர்த்தத்தை ஆழமாக்கி விட்டிருக்கிறார் பிரதமர்.
மகா தீரருக்குப் பிறகு மலேசியாவின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்திருக்கிறது என்பதை எதிராளிகளும் தாராளமாக ஒப்புக் கொள்ளலாம்.
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் பெயர் ஐநா மாநாட்டுக்கு முன்பு வேண்டுமானால் நிறைய பேருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மாநாட்டுக்குப் பிறகு தெரியாதோர் சொற்பமே.
இப்படி சந்தடி சாக்கில்லாமல் சம்பவத்தை நிகழ்த்தி விட்டு சர்வமும் சாந்தமாக வலம் வருகிறீரே…..
யாரு சாமி நீங்க?
#வியன் வியந்தான்!
No comments:
Post a Comment