அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Thursday, 16 July 2020

நம்மிலும் தான் எத்தனைப் 'படையப்பர்'கள்?


ருட்டெனக் கூறி இல்லை என வாய் மாறியவர், இருட்டடி வாங்காதக் குறையாக, இருட்டு விவகாரம் இருட்டுவதற்குள் இருட்டாகியிருக்கிறது!

நாலா பக்கமும் நார் நாராக கிழித்துத் தொங்கப் போட்டது தான் மிஞ்சம்.

அப்போதும் அடங்காத 'படையப்பரின்' வாய் மன்னிப்புக் கேட்பது போல் கேட்டு விவகாரத்தை இழுத்து மூடியிருக்கிறது.

மக்களவையில் இந்தக் கூத்து அரங்கேறி, பரபரப்பு ஒரு வழியாக அடங்கி வரும் நிலையில், ஓரமாக ஓய்ந்திருந்த வியனுக்கு. பழைய ஞாபகங்கள் வந்து கண் முன்னே நின்றன. 



"மேகங்கள் உங்களை முகத்தைப் போல் கருத்துப் போயிருக்கின்றன. மழை வர போகிறது!"

"மண்டேலாவின் மகனா நீங்கள்? ஆனால் அவர் கூட கொஞ்சம் வெளிச்சமாக இருப்பாரே!"

"நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், நீங்கள் தொலைக்காட்சியில் வர ஆசைப்படலாமா?"

" நீங்களே வெளிச்சம் இல்லை, இதில் கேமராவின் வெளிச்சைக் கூட்டு எங்கிறீர்களே?"  


#வியன் தன் தோல் நிறத்தால் வாழ்க்கையில் சந்தித்த அவமானச் சொற்கள் அவை. மொத்தத்தையும்  போட்டால் பட்டியல் பக்கம் பக்கமா நீளும்; நாகரீகம் கருதி வார்த்தைகளின் 'சூட்டை' தணித்திருக்கிறான் வியன்.

பள்ளிப் பருவம் தொட்டு வியனுக்கு மாமூலாகி போன விஷயம் அது.
அத்தகையச் சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதெல்லாம் கூனிக் குறுகி நின்றிருக்கிறான்; கடைத் தெருவுகளுக்குப் போவதைக் கூட தவிர்த்திருக்கிறான், அங்கும் கசப்பான அனுபவங்கள் இருப்பதால்!

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது, பழக்கமே இல்லாத பக்கத்து வகுப்பு மாணவி திடீரென ஓடி வந்து 'கருப்பா!' எனக் கூறி விட்டு ஓடி விட்டாள். அதனை வெளியில் காட்டிக் கொள்ளாத வியன், "படிப்பில் நான் எங்கே,  கடைசி வகுப்பில் இருக்கும் இவள் எங்கே? திருப்பிக் கேட்டால் என்ன செய்வாள்?" தன்னைத் தானே சாமாதானம் செய்துக் கொண்டான்.

"மண்டேலாவின் மகனா நீ" எனக் கேட்டவனின் தந்தை, வியன் நிறத்தை விட படு 'வெளிச்சமானவர்'. 

அப்போதே திருப்பிக் கேட்டிருப்பான் வியன். கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? " என்ன தைரியம் இருந்தா எங்கப்பாவ தப்பா பேசுவ?" எனக் கூறி வியன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விழுந்திருக்கும். நட்பாகி போனதால் வழக்கம் போல சிரித்துக் கொண்டான் வியன்.     

இடைநிலைப் பள்ளிப் பருவம்.......

கடைக்கு நடந்துச் செல்லும் வழியில், எதிரே மனநலம் பாதிக்கப்பட்ட மூத்தவர் ஒருவர் வியனைப் பார்த்து " ஏய் கருப்பன் போறான் பாரு!" என்று வேகமாகச் சொல்லி சிரித்த போது........

" உங்கள் கண்களுக்குக் கூடவா நான் அறுவறுப்பாகத் தெரிகிறேன்?" என வேதனையில் வெம்பினான் வியன். 

இதையெல்லாம் விட வியனைச் சுற்றியிருந்தவர்களே கூட, சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் வியன் நிறத்தைப் பற்றி கேலி செய்து சாய்த்து விடுவார்கள்.

அதானாலேயே, சுற்றம்  சூழ சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் வியன் உள்ளுக்குள் alert-டாக இருப்பான். எந்த நேரத்தில் அம்பு பாயும் என தெரியாது என்பதால்...

யார் எந்த நேரத்தில் என்ன பேசுவார்கள்? அருகில் இருப்பர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என பயந்து பயந்தே வீட்டில் முடங்கிக் கிடப்பதையே வியன் விரும்பினான்.  

நீங்கள் நம்ம மாட்டீர்கள். அப்படி மனம் நோக நடந்து கொண்டவர்களின் பெயர்களை அப்போது ஒரு பட்டியலாகவே எழுதி வைத்திருக்கிறான் வியன். 😎

மனதுக்குள் ஒரு நெருப்பு எரிந்துக் கொண்டே இருந்தது...

"எப்பாடுப் பட்டாவது ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும். நன்றாகப் படிக்கும் போதே கருப்பன் என ஏளனம் செய்தவர்கள், ஒரு வேளை படிப்பில்லாமல் நல்ல வேலை கிடைக்காமல் போனால், இன்னும் என்னவெல்லாம் சொல்லுவார்களோ ?" என்ற எண்ணம்...

இப்படி வாழ்க்கையில் பட்ட அவமானங்களால் கருப்பென்றாலே வெறுப்பு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான் வியன். 

ஒத்த நிறத்திலிருப்பவர்கள் எவரைக்  கண்டாலும் வியனுக்குப் பிடிக்காது. அது நிறவெறியால் அல்ல, வேதனையால்.... 
" நான் தான் கறுப்பாகப் பிறந்து இவ்வளவு அவமானங்களைச் சந்திக்கிறேனே, நீங்களுமா?" என்ற வேதனையால்.

இதெல்லாம் இளமைக் காலத்தில்....

ஆனால், யாரிடத்திலும் வியன் வஞ்சம் வைக்கவில்லை

என்றாவது ஒரு நாள் புரிந்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு விட்டு, கனவு நோக்கி நகர்ந்தான். 

படிப்பெல்லாம் முடிந்து, வேலையில் செட்டிலாகி, ஒரு  பொறுப்பான இடத்திற்கு வந்தப் பிறகு... " நல்ல வேளை, நீங்கள் சிவப்பாகப்  பிறக்கவில்லை, இல்லையென்றால் உங்களைக் கையில்  பிடிக்க முடியாது!" என்று பேசும் அளவுக்கு உள்ளத் திடத்தில் உயர்ந்து நின்றான் வியன். 

அதற்கு திமிரென்றும் பெயர். 👀😛

இருட்டாக உள்ளவரே இன்னொருவரை இருட்டெனக் கூறிய போது தான் (அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என சமாளித்தாலும்) வியன் மனதில் அக்கேள்வி ... 

நம்மிலும் தான் எத்தனைப் 'படையப்பர்'கள்?

என்னடா இது, வியன் அனுதாபம் தேடுகிறானோ என சிலர் மனதில் நினைப்பது கேட்கிறது...

ஆமாம், இதை எல்லாரும் படித்து, மனம் வெடித்து, அனுதாப அலை அடித்து,  வியன் ஆட்சியைப் பிடித்து..... அட போங்க! 😆

ஞாபகம் வந்தது, எழுதினான், அவ்வளவு தான்!


நீங்கள் அரவிந்தசாமியையே கூட்டி வந்து பக்கத்தில் நிறுத்தினானும், அவரை விட 1 whats அதிகமாக 'பிரகாசிக்க' முடியும் என அசாத்திய நம்பிக்கைக்  கொண்டவன் வியன். 

இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவருங்க என்றால், இருந்து விட்டு போகட்டுமே, வியன் என்ன உங்களிடம் ஓசியில் பவுடரா கேட்டான்? 😛


#வியன் டா.....

No comments: