அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Sunday, 5 July 2020

ஏங்க, பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

"அவரே அவரா? "

"ஆமாம், அவரே அவரே தான் ! 

யாரந்த அவர்?

எங்களுக்கு அவர் தான் வேண்டும் என ஒரே போடாய் போட்டிருக்கிறது மத்திய அரசுக்கு புது வரவான பாஸ் கட்சி.

வேறு யார், இன்றையத் தேதிக்கு மலேசியர்களின் #Abah -வாக வலம் வரும் அவரே அவரே தான்...

பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் 15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகும் #PerikatanNasional அரசுக்குத் தலைமையேற்ற வேண்டும் என பாஸ் கட்சி மறு உறுதிப்படுத்தியிருக்கிறது. 

யாரோ கடைநிலை தொண்டன் சொல்லவில்லை. கட்சியின் இரு  பெரு தலைகளும் அடுத்தடுத்து முகிதினுக்கான வற்றாத ஆதரவை புலப்படுத்தியுள்ளனர்.

நாட்டிற்கு அவரே சிறந்தத் தேர்வு என்கிறார் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான். அதனால் தான் UMNO-PAS கூட்டணியான #MuafakatNasional முகிதின் பிரதமராகத் தொடர இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் சொன்னார்.

" அவரை நாங்கள் ஆதரிப்பது எதைக்  காட்டுகிறது? நாங்கள் பேராசை பிடித்தவர்கள் அல்ல என்பதை! நாட்டுக்கும் மக்களுக்கும் எது நல்லதோ அதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களிடமும் தகுதி வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை விட இப்போது முக்கியம் என்னவென்றால் முகிதின் மக்களால் ஏற்றுக்  கொள்ளப்பட்டிருக்கிறார். இந்த குறுகியக் காலத்தில் அவரின் தலைமைத்துவம் அவருக்கும் எங்கள் கூட்டணிக்கும் செல்வாக்கைப் பெற்றுத் தந்திருக்கிறது. இது தொடர வேண்டும்!"

- துவான் இப்ராஹிம் துவான் மான் 


#PN கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முகிதின் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் தகுதி வாய்ந்த தலைவர்கள் இல்லை போலும் என #PartiPutraMalaysia கட்சித் தலைவர் டத்தோ இப்ராஹிம் அலி 'கிழித்து தொங்க விட்ட' நிலையில் துவான் இப்ராஹிம் விளக்கமளிக்க வந்துள்ளார்.

முகிதினே பிரதமர் வேட்பாளர் என்பதை முதன் முறையாக பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ Abdul Hadi Awang  கடந்த வாரம் முதன் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். மறுநாள் அம்னோ பொதுச் செயலாளர் தான் ஸ்ரீ அனுவார் மூசாவும் அதனை மறு உறுதிபடுத்தினார். 

பின்னே?

வேறு யாரைத் தான் அவர்களும் களமிறக்குவார்கள்?

அம்னோவைச் சேர்ந்த முன்னாள் பிரதமரும் துணைப் பிரதமரும் நீதிமன்ற படிக்கட்டிகளில் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். 


நடப்புத் துணைத் தலைவரோ, நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல! அப்படியே பொதுத் தேர்தலில் MP சீட்டு வாங்கி வெற்றிப் பெற்றாலும் பிரதமர் பதவியில் தூக்கி உட்கார வைக்கும் அளவுக்கு அவருக்கு மத்திய அரசில் அனுபவம் போதாது. 

பிரதமர் பதவி என்பது அரசுத் துறைகளில் ஒவ்வொரு 'இண்டு இடுக்கிலும்' என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். #TokMat  முதலில் அமைச்சராக தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே மற்றதெல்லாம்.

மூத்தவர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேய்ன் இருக்கிறார். ஆனால், அவரை நிச்சயம் மேலே போக விட மாட்டார்கள். ஏன் என்பதை இன்னொரு முறை பார்க்கலாம்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்த்தால் நம்ம stylish king கைரி ஜமாலுடின் தெரிகிறார். ஆனால், அவருக்கு வயதை போலவே அனுபவமும் சிறியது. இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர், இப்போது அறிவியல் துறைக்கு வந்திருக்கிறார். அவர் கற்றுக்  கொள்ள வேண்டியதும் நிரூபிக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் பிரதமர் நாற்காலி அவருக்கு உறுதி என்பதை தாராளமாகச் சொல்லலாம். 

பாஸ் கட்சியோ, இப்போது தான் அமைச்சரவைக்கே வந்திருக்கிறது. ஆக, தலைமைப் பொறுப்புக்கு இப்போது கனவு காண்பது நடக்காத காரியம். அதனை அக்கட்சியின் தலைமையும் நன்கு உணர்ந்திருக்கிறது.

ஆக, #வியன் பார்வையில் அம்னோவும் பாஸ் கட்சியும் எடுத்த முடிவு சரியே! உள்ளபடியே மனதுக்கு பிடித்து தான் அம்முடிவுக்கு அவர்கள் இணங்கினார்களா என்றால், சின்னக் குழந்தைக் கூட சொல்லி விடும் பதிலை...இல்லையென்று!

ஆனால், விவேகமான முடிவை எடுத்திருக்கின்றன. 2018 பொதுத் தேர்தலின் போது பக்காத்தான் பக்கம் இருந்த ஆதரவு இப்போது அதற்கு இல்லை. இல்லை என்று சொல்வதை விட, ஒன்றரை ஆண்டு காலத்தில் ஆதரவு பெரும் அதிருப்தியாக மாறி அதனால் ஏற்பட்ட ஆத்திரம் இன்னும் தணியவில்லை. #TanjungPiai நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகளில் படுதோல்வியைக் கொடுத்தார்களே அப்போதே தெரிந்திருக்க வேண்டும். பிடிக்காவிட்டாலும் இதை ஏற்றுக்  கொண்டு தான் ஆக வேண்டும்.

இந்த நிலையில் தேர்தல் நடந்தால் கண்டிப்பாக அம்னோ-பாஸ் கூட்டணிக்கே அதிக வாய்ப்பு. ஆனாலும், 2018 பொதுத் தேர்தலுக்கு முன் அம்னோ தலைவர்கள் மீது மக்கள் கொண்ட கோபம், அவநம்பிக்கை முழுமையாகப் போய் விட்டதாக கூறி விட முடியாது.


என்னதான் ஆட்சி மாறி, அம்னோ மத்திய அரசில் இடம் பிடித்திருந்தாலும், மக்களும் 'நாட்டின் ஒற்றுமை/நலன் கருதி ஏற்றுக்  கொண்டாலும்', முந்தையத் தவறுகளுக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருப்பவர்கள், அதை எதிர்கொண்டே ஆக வேண்டும். தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள்  மீதான கறை நீங்கும். 

எனவே, நடப்புத்  தலைமைத்துவத்தை நம்பி களமிறங்குவது பகீரத பிரயத்தனம். இருந்தாலும் ஆட்சி வேண்டுமே, அதிகாரம் வேண்டுமே! அதற்கு ஒரே வழி 'சிங்கப் பாதை'யான 😊 வெற்றிப்  பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியது. 

ஆக முகிதின் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது  என்பதே அவ்விரண்டு மலாய் - மூஸ்லீம் கட்சிகளின் சிறந்தத் தேர்வாக உள்ளது. 

முகிதின் தலைமைத்துவமும் மக்கள் அறிந்ததே! அவர் கொல்லைப் புறமாக வந்தார், எல்லையில் நின்றார் என்பதெல்லாம் இனியும் எடுபடாது. பதவிக்கு வந்த 4 மாதங்களில் அதுவும் அரசியல் - சுகாதாரம் - பொருளாதாரம் என்ற 3 நெருக்கடிகளை ஒரே நேரத்தில் அவர் நிதானமாக எதிர்கொண்ட விதம் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது.

அரசியலுக்கு இன்று நேற்று  வந்தவர் அல்ல. 40 ஆண்டுகளுக்கும் மேல் 'பழம் தின்று கொட்டைப் போட்டவர்'. ஜொகூர் மாநில Menteri Besar-ராகவும், மத்திய அரசாங்கத்தில் கால் நூற்றாண்டு காலம் அமைச்சராக அனுபவம் வாய்ந்தராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தவர். ஆகவே, ஆட்சிக்கு வந்த வேகத்தில் அவரால் சுழன்று வேலை செய்ய முடிகிறது.

முகிதின் வசமுள்ள நிர்வாகத் திறமையும் தலைமைத்துவமும் மகாதீருக்கே பிடித்த போனது ஒன்று என்றால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள். 

ஆம், 1996 அம்னோ தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முகிதின், எதிர்பாராவிதமாக நஜீப்-படாவி-முகமட் தாயிம் மூவரிடமும் தோல்வி கண்டார். கட்சியில் ஆதரவு இல்லாத தமக்கு அமைச்சரவையில் பணியாற்றத் தகுதியில்லை எனக் கூறி மகாதீரைச் சந்தித்து இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுதாக அறிவித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட மகாதீர், போய் வேலையைப் பாருங்கள் எனக் கூறி அனுப்பி விட்டார். முகிதின் மேற்பார்வையின் கீழ் தான் 1998-ஆம் ஆண்டு மலேசியா காமன்வெல்த் போட்டியை வெகு சிறப்பாக நடத்தி முடித்தது. 

ஆக, முகிதினின் தேர்வு புரிந்துக் கொள்ளக் கூடிய ஒன்றே!

மகாதீரா அன்வாரா என்ற 20 ஆண்டு கால போட்டி மறைந்து இனி மலேசிய அரசியல், முகிதீனா அன்வாரா என நகரவிருக்கிறது.

90-களில் ஒரே பக்கம் நின்றவர்கள் பின்னர் எதிரிகளாகி, 2018-ல் மீண்டும் நண்பர்களாகி, இப்போது மீண்டும் சண்டைக்காரர்களாகி நிற்கிறார்கள்.

ஒருவர் பிரதமர் - இன்னொருவரு எதிர்கட்சித் தலைவர்!

ஆனால், பலருக்குத் தெரியாது.....

அன்று, முகிதின் அன்வாரின் தீவிர விசுவாசி என்று!


#வியன் வில்லங்கமான நாட்களை எதிர்பார்த்துக்  காத்திருக்கிறான்!   


#PRU15, #GE15 #PH #PN #TokAbah #Muhyiddin #MuhyiddinYassin #Najib #Zahid #TokMat 

No comments: