அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 17 January 2017

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்!



வணக்கம். நம் சமயம் தொடர்பாக அண்மைய காலமாக சமூக வலைத்தளங்களில் முக்கியத்துவம் பெற்று வரும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே! சமய விழாக்கள் - அவற்றின் நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு அதிலும் இளையத் தலைமுறையினர் மத்தியில் மேலோங்கியிருப்பதை இது காட்டுகிறது. உள்ளபடியே இது மன மகிழ்ச்சியைத் தருகிறது.

தைப்பூசத் திருவிழாவில் மாற்றங்கள் வராதா என ஆங்காங்கே ஏக்கக் குரல்கள் ஒலித்து வந்த நிலையில், முகநூல் இம்முறை பிரதான இடத்தைப் பிடித்து விட்டது. முறையாக உடையணியாதவர்களுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் தொடங்கி இன்று எங்கோ வந்து நிற்கிறது.

நமது நோக்கம் எல்லாம் சரி தான், ஆனால் அணுகுமுறை தான் வழக்கம் போல் சறுக்கி விடுகிறது. அதனால் தான் எதிர்வினைகளும் அதிகமாகி விடுகின்றன. நல்ல நோக்கமென்றாலும், அணுகுமுறையில் தடுமாறியதால் ஏட்டிக்குப் போட்டியான சம்பவங்கள் நடந்து விட்டன ; இன்னும் நடந்து வருகின்றன. அறிக்கைப் போர், காணொளிக்கு காணொளி, எச்சரிக்கைக்கு எச்சரிக்கை என நீண்டு கொண்டே போகிறது. நீயா நானா தொடங்கி ஆணா பெண்ணா என்ற ரீதியில் வந்து நிற்கிறது. கடுஞ்சொற்களின் பயன்பாடும் சற்று அதிகமாகவே உள்ளது.

தைப்பூசத்திற்கு ஒரு மாதம் கூட இல்லை. பன்னீர், சந்தனம் என கேட்க வேண்டிய காதுகளில் Spray இன்னும் என்னென்னவோ கேட்கின்றன. இது தொடர்ந்தால் தைப்பூசத்தின் வழக்கமான 'களைக்கட்டு' இவ்வாண்டு பாதிக்கவே செய்யும். முருகன் அருள் வேண்டி வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரு வித அச்ச உணர்வோடு தான் இருப்பர். இதைத் தான் நாம் பார்க்க விரும்புகிறோமா?

தன் சன்னதிக்கு வருபவர்களை முருகன் பார்த்துக் கொள்வார். நாம் நம்மைப் பார்த்துக் கொள்வோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியும் ஏட்டிக்குப் போட்டியாக காணொளிகள் வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். சமய விழா திசை மாறி விடக் கூடாது.

அனைவருமே என் சொந்தங்கள் என்ற உரிமையில் இக்கருத்தை பதிவிடுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சமயம் வளர்ப்போம், அதன் மாண்பைக் காப்போம்!

-மோகனதாஸ் முனியாண்டி #சிந்தித்தவேளை

No comments: