அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 24 January 2017

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!



மெரினாவில் வரலாறாய் தொடங்கிய ஒரு வரலாறு மாபெரும் வரலாறாய் முடிவுற்றிருக்கிறது.
உலகத் தமிழன் ஒவ்வொருவனும் மார்தட்டிக் கொள்ளும் தருணம் இது.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடியதைக் காண நம்மில் பலருக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
ஆனால், 70 ஆண்டுகளில் காணக் கிடைக்காத அது போன்றதொரு மாபெரும் அமைதிப் புரட்சியை கடந்த 7 நாட்களில் கண்ட பெருமை நமக்கெல்லாம்.
அந்த அறப்போராட்டத்தை மாணவ-இளைஞர் சமுதாயம் முன்னெடுத்துச் சென்றதே கூடுதல் பெருமை.
சில நூறில் தொடங்கி 7 லட்சம் பேர் வரை எட்டி 8 கோடி உலகத் தமிழினத்தைக் கட்டிப் போட்ட ‘யாகம்’ அது!


அரசியல்வாதிகளையும், திரைப் பிரபலங்களையும் கடைசி வரை அருகில் வர விடாது, எடுத்த கொள்கையில் உறுதி காத்த தனித்துவவாதிகள் நீங்கள்.
இத்தனை நாளும் அரசியல் கட்சிகளாலும், சாதி சங்கங்களாலும் பிரிந்திருந்த, பிரித்து வைக்கப்பட்ட தமிழினம் ‘ தமிழண்டா’ என்ற ஒரே குரலில் அதுவும் உரத்த குரலில் ஓரணியில் திரண்ட அதிசயம்!
உங்களைப் பிரித்து வைத்தவர்கள் இனி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் உங்களை மனதில் வைத்து தான் அமையும்.
தன்னிச்சையாக செயல்பட்டால் பிறகு என்ன நடக்கும் என்பதை இந்நேரம் அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
சொந்த நாட்டிலேயே பல நூறு பிரச் னைகள், இதில் தமிழ்நாட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என்று வரிந்து கட்டியவர்களையும், ஒரு கட்டத்தில் பின் வாங்கச் செய்த வலிமை இந்த மெரினா புரட்சிக்கு உண்டு!
வெறும் போராட்டமா அது? இல்லை, கலாச்சாரத் திருவிழா! கண்ணியமான பெருவிழா!
ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய கூட்டம், இன்னொரு பக்கம் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் என களைக் கட்டியது.
கட்டிளம் காளைகளுக்கு ஆதரவாக பெருந்திரளாக குவிந்த பெண்களைச் சகோதரியாக, தாயாக, மகளாக பாவித்து, பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து கண்ணியத்துக்கு அர்த்தம் கூறியது இளைஞர் பெரும்படை!


இதாண்டா தமிழன் என்று மார்தட்டியதை விட, நம் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்த காட்சி அது.
உலகில் 7 வயது பிள்ளை முதல் 70 வயது மூதாட்டி வரை கலாச்சார மீட்டெடுப்புக்காக கரம் கோர்த்த காட்சி வேறு ஏது?
ஜல்லிக்கட்டு விவகாரம் உலகத் தமிழினத்திற்கு உணர்த்தும் பாடம் பல….
மொத்தமாக இல்லையென்றாலும் அவற்றில் எடுத்துக் கொள்வோமே சில!
நிலத்தால் தேசத்தால் வேறுப்பட்டாலும் பலத்தால் நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம்!
என்றும் இல்லாத அளவுக்கு உலகத் தமிழினம் அசுர வலிமைப் பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன்.


மெரினா சிங்கங்களே,
உங்களால் தான் இது சாத்தியம், இது தமிழின ஒற்றுமையின் சத்தியம்!
வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட உங்களை #சிந்தித்தவேளை சிரம் தாழ்த்தி வணங்குகிறது!

No comments: