அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 26 April 2017

வதனி சீக்கிரமே வெள்ளித் திரைக்கு ‘வர நீ’ !





நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் நான் பார்த்த குறும்படம்!

கதை என்ன?...

எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்ட இருவர் எதிர்மறையான சூழ்நிலையில் சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவன் பணக்காரத் தோற்றத்தில் இருக்கும் ‘முரட்டுக்காளை’. இன்னொருவன் பக்கத்து வீட்டு பையன் சாயலில் பயம் கலந்த ‘பாலகன்’. அடுத்தச் சந்திப்பும் மோதலில் முடிய, இரண்டாமவன் பழித் தீர்க்கத் துடிக்கிறான். அவனுக்கான வாய்ப்பு வந்து வாய்க்கிறது. உள்ளே போனால், பணக்காரனின் பின்னால் ஏதோ மர்மம்! அடுத்து என்ன நடந்தது என்பது தான் அந்த 17 நிமிட குறும்படத்தை பரபரப்பாக கொண்டுச் செல்லும் அம்சம்….

ஒரே வரியில் சொல்வதென்றால் ஒரு பழிவாங்கலை தற்காலத் தொழில்நுட்பத்துடன் பின்ணி சுவைக் குன்றாமல் தந்திருக்கிறார் இயக்குநர் வதனி.


அடுத்து கதாபாத்திரங்களைப் பார்ப்போம்


ஸ்ரீ குமரன் முனுசாமி

SRI KUMARAN MUNUSAMY

புது வரவான ஸ்ரீ குமரன் இதில் SK என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். வானொலி பிரபலமாக வலம் வந்தவரின் கலையுலக பிரவேசத்திற்கு முக்கிய முகவரி குறுஞ்செயலி. வயதுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவராய் ‘குழந்தை நட்சத்திரமாகவே' தெரியும் SK தேவையான இடத்தில் பயம், படபடப்பு, பழிவாங்கத் துடிக்கும் நேரத்தில் குரோதம் என மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.  இவருக்கான வசனங்களில் கூடுதல் ‘நச்’ இருந்திருந்தால் சிறப்பு.


 
நிவாஷன் கணேசன்

NEEVASHAN GANESON

ஹனுமானாக அதிரடித்தவரை வில்லனாகப் பார்க்கையில் வியந்து தான் போனேன். நிவாஷனின் வளர்ச்சியில் மற்றொரு பரிமாணம். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் மனிதர். பொருத்தமான முக பாவணை, வசன உச்சரிப்பு, உடல் மொழி நிவாஷனுக்குள் ஒளிந்திருக்கும் மிகச் சிறந்த நடிகனை நமக்கு வெளிக்காட்டியிருக்கிறது. நிவாஷன் வெகு சீக்கிரத்தில் உச்சத்தைத் தொடுவார் போலிருக்கிறது.  


கதிர் கிராங்கி

KATIR CRANKY

காதல் கொண்டேன் தனுஷை ஞாபகப் படுத்தினாலும், இரசிக்க வைக்கிறார். அமைதியின் உருவமானவர் மௌனம் கலையும் இடம் அருமை. அதிக வசனங்கள் இவருக்குத் தேவைப்படவில்லை. கண்களே பாதி வேலையை முடித்து விடுகின்றன. “ நம்ப பசங்க login பண்ணா, log out பண்ண மாட்டாங்க” வசனம் யதார்த்தம். கடைசிக் காட்சியில் மிமிக்ரி சபாஸ் ரகம்.


ரிக்கு

RIKNAVEEN MANIARASU

மனதில் இடம் பிடித்த முக்கிய கதாபாத்திரம். சிம்பு குரலில் வசனம் பேசுவதிலும், அதற்கேற்ப உடல் மொழியில் வித்தியாசம் காட்டுவதிலும் அவ்வளவு இயல்பு. நடிகர் பிரேம்ஜியின் சாயல் தெரிந்தாலும் ஈர்க்கிறார். இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இயக்குநர்களுக்கு நலம். 



குமரேஷ்  
KUMARESH ELANGOK

ஓரிரு காட்சிகளில் வந்து போனாலும் நகைச்சுவைக் கலந்த குரலில் திருப்திப்படுத்தியிருக்கிறார்.



ஜாலி

ZALLEE

பின்னணி இசையா, ஒளிப்பதிவா, படத்தொகுப்பா ? ஜாலி உங்களுக்கு தெரியாத துறை எதுவும் உண்டா? என கேட்கத் தோன்றுகிறது. இயக்குநரின் கதைக்கும் கற்பனைக்கும் உயிர் கொடுத்திருக்கிறது இவரின் கைவண்ணம். தொடக்கக் காட்சியிலேயே ஒளிப்பதிவில் பிரமாண்டத்தை காட்டி விடுகிறார். Jolly-யாகக் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நமது அடுத்த வாரிசாக இவரை தாராளமாக கோலிவூட்டுக்கு அனுப்பி வைக்கலாம்….பெருமையுடன் !



குறைகளே இல்லையா? ண்டிப்பாக இருக்கின்றன. 

* மனதில் நிற்கும் அளவுக்கு பெண் கதாபாத்திரங்களுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. வந்து போகிறார்கள் அவ்வளவு தான்!

* வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், சில இடங்களில் வடி கட்டியிருக்கலாம், 

* இன்னும் பரபரப்பை கூட்டியிருக்கலாம்….   

ஆனால், இருக்கும் நிறைகளை பெருமையாகக் கொள்வோம்.

வதனியை வாழ்த்தி வரவேற்போம்!

வதனி



தனி சீக்கிரமே வெள்ளித் திரைக்கு ‘வர நீ’ !



 **************  **************   **************   *************   **************   **********

“ உன்னை அழிக்க ஒரு குறுஞ்செயலி, அதை பதிவிறக்கம் செய்கிறேன்….” பாடல் தியேட்டரை விட்டு வெளியேறிய பிறகும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது….. 

களம் மாறினாலும் நண்பர் ஃபீனிக்ஸ்தாசனின் ஆழம் மட்டும் குறையாது.  
மணி வில்லன்ஸும் தான்! 

குறுஞ்செயலி பாடல் இப்போது எனது கைப்பேசி Ringtone!



- மோகனதாஸ் முனியாண்டி
( M.N.Morgan )

 #சிந்தித்தவேளை


No comments: