எல்லாரும் புகழ்ந்து
விட்டார்கள், நான் புகழ இனி என்ன இருக்கிறது,
18 தடவை பார்த்து விட்டேன் என்பதை விட!
18 தடவை பார்த்து விட்டேன் என்பதை விட!
நேரடியாகத் தலைப்புக்கு வருவோம்…..
முதல் பாகத்தில்
கதாநாயகர்களையே பின்னுக்குத் தள்ளி வான் என உயர்ந்து நின்ற சிவகாமி, இந்த இரண்டாம்
பாகத்தில் அப்படியே தலைக் குப்புற விழுந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இந்தியத் திரையுலக
வரலாற்றில் அப்படி ஒரு வலிமையான பெண் கதாபாத்திரத்தை அதுவரை யாரும் கண்டதில்லை என அனைவராலும் புகழப்பட்டவர்
சிவகாமி.
தனது ஆளுமையால் மகிழ்மதி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆண்ட ராஜமாதா , கணவனின்
சதி வலைகளைப் பிய்த்தெறிந்த பெண், புத்திக்கூர்மை, ராஜதந்திரம், அடுத்த அரசனை அறிவிப்பதில் நீதி தவறாமை,
போர் தந்திரம் என பெண்களையே பெருமைப் படுத்தும்
அளவுக்கு அமைந்திருந்தது அன்றைய சிவகாமி கதாபாத்திரம்.
ஆனால், இரண்டாம்
பாகத்திலோ லாரி குடை சாய்ந்தது போல், ஏறக்குறைய முழுவதுமாக சரிந்து விட்டார் ராஜமாதா. பின்னே, பாத்திரப் படைப்பு அப்படி!
இரண்டாம் பாகத்தின்
தொடக்க காட்சியில் அதே பழைய கெத்துடன் அறிமுகமானவர், பாகுபலியை திக்விஜயம் மேற்கொள்ள
பணிக்கும் காட்சியில் சொல்லும் விளக்கங்கள்
மூலம் தனக்குண்டான மரியாதையை மேலும் கூட்டிக் கொள்கிறார்.
ஆனால், எப்போது தன் வயிற்று மகன் பல்வாள்தேவன்
மணமுடிக்க விரும்பும் குந்தலதேச இளவரசி தேவசேனாவுக்கு பொன்னையும் பொருளையும்
அனுப்பி வைத்து பெண் கேட்க கட்டளையிடுகிறாரோ, அப்போதே தொடங்கி விட்டது அவரின் சரிவு….
உலகமே வியக்கும்
சிவகாமி தானும் சாதாரண பெண் தான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விடும் தருணம் அது. அதுவும் தனக்கு மருமகள் வயதில் உள்ள பெண்ணிடம்
பதில் மடல் வாயிலாக அவமானப்பட்டு வாங்கிக் கொள்ளும் கட்டம் இன்னும் மோசம். கோபத்தின்
உச்சியில், குந்தலதேசத்தின் மீது போர் தொடுக்கக் கட்டளையிடுவதும், தேவசேனையைக் கைது
செய்து வர பாகுபலிக்கு தூது அனுப்புவதும் என அடுத்தடுத்து தடுமாறி விழுகிறார்.
தேவசேனையை பாகுபலி
மகிழ்மதி அரசவைக்கு அழைத்து வரும் காட்சியில், ‘ இந்த சிவகாமியின் மருமகளுக்கு கொஞ்சம்
அகந்தையும் அழகுதான்’ என கெத்தாகக் கூறி டென்ஷனைக்
குறைத்த அடுத்த நொடியில் மீண்டும் சறுக்கல்.
தேவசேனை குரலை உயர்த்தியதும் அவர் பேசும் வசனம் – மாமியார் ரகம்!
பல்வாள்தேவனுக்கு
வாக்குக் கொடுத்து விட்ட ஒரே காரணத்திற்காக பாகுபலியின் முடிவை மாற்றச் சொல்வதும், பாகுபலியே
தன்னை எதிர்த்து பேசுவதை ஏற்க முடியாமல் சீறிப் பாய்வதும், தேவசேனையை ‘வஞ்சகி’ எனக்
குறிப்பிடுவதும், தடாரென்று, ஏற்கனவே அறிவித்த
முடிவை மாற்றி பல்வாள்தேவனை புதிய அரசனாக அறிவிப்பதிலும் வில்லத்தனம் தெரிந்ததே தவிர,
நாம் முன்பு பார்ந்து வியந்த புத்திக் கூர்மையைக் காணவில்லை.
பட்டாபிஷேகத்தின்
போது பாகுபலிக்கு பாராமுகம் காட்டி ஒரு ‘வெட்டு வெட்டுவாரே’ அது கூட பரவாயில்லை. சீமந்த
நிகழ்வில் தேவசேனையின் மீது பூ தூவி ஆசி வழங்கும் காட்சியில் லோக்கல் மாமியாராகவே மாறி
விடுகிறார்.
துணிச்சல், வீரம்,
ஈகோ என்ற பெயரில் சிவகாமியும் தேவசேனையும் மோதிக் கொள்வது நாம் பார்த்துப் பார்த்துப்
புளித்துப் போன மாமியார் மருமகள் சண்டை தான்.
ராஜமாதா சொல்லித்
தான் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்பதை மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியே,
சிவகாமி அடுத்தடுத்து சரிவதைப் போல் காட்டப்பட்டதற்கான காரணமோ என யோசிக்க வைக்கிறது.
முதல் பாகத்தில்
கையில் குழந்தையை வைத்துக் கொண்டே துரோகம் செய்த சேனாபதியை வதம் செய்வதும், கணவர் நாசர் தனது மகனுக்கே
அரியாசனம் கிடைக்க வேண்டுமென தூபம் போடும் போது,
“ என் இரு மகன்களுக்கும் இந்த அரியாசனத்தில் அமர சம உரிமை உண்டு. அவர்கள் வளர்ந்த பின்
வீரத்தில் சிறந்தவன் எவனோ, மக்களின் மனதை வெல்பவன்
எவனோ, அவனே மகிழ்மதியின் அரசன். அதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்”
என கம்பீரம்
காட்டி கைத்தட்டல் பெற்ற சிவகாமி, பிள்ளைகள் பெரிதானதும் எப்படி பிங்கலத் தேவரின்
தூபங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிபணிந்தார்...?
பாசம் கண்களை மறைத்து விட்டது என்று சொல்வதற்கில்லை.
காரணம் யாருமே கண்டிராத துணிச்சலும், அறிவுக் கூர்மையும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டவர்
சிவகாமி. கணவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பாகுபலியைப் பிடிக்காது என தெரிந்திருந்தும்,
தன் காதுகளுக்கு ‘விஷங்கள்’ எட்டும் ஒவ்வொரு சமயமும் சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்தது
ஏன்? சிவகாமி அப்படி முடிவெடுக்கக் கூடியவர் அல்ல.
அரசனையே கொல்லத்
துணிந்தான் என கண்ணில் கண்டதை வைத்தும், கணவன் சொன்னதை கேட்டுமே வைத்து பாகுபலிக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு பலவீனமானவரா?
தேவசேனையை துணிச்சல்
மிக்கவராகக் காட்டத்தான் சிவகாமி டம்மி ஆக்கப்பட்டாரோ? ஆக, தொடக்கம் முதல்
தேவசேனாவின் பிடி இறுகுவதும், சிவகாமி அடுத்தடுத்து சரிவதுமாக காட்சிகள் நகர்ந்திருக்கின்றன.
தன் தவற்றை
உணர்ந்து தேவசேனாவின் காலில் விழுந்து மனமுருகும் போது ஏறக்குறைய எல்லாம் முடிந்து
விட்டது.
பார் புகழ் மகிழ்மதி
சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத ராஜமாதா சிவகாமி,
சாதாரண மாமியாராக மாறி மன்னிப்புக் கேட்கிறார்.
கடைசியில் குட்டி பாகுபலியைத் தலைக்கு மேல் தூக்கி புதிய அரசன் என அறிவிக்கும் போது, கொஞ்சம் நிமிருகிறார் சிவகாமி. மொத்தமாக சாய்ந்து விட்ட தனது இமேஜை பிடித்து நிறுத்த ராஜமாதாவுக்குக் கிடைத்த வாய்ப்பு அது.
பாகுபலியைக் குத்திக்
கொன்ற கட்டப்பா மனதில் நின்று விட்டார்.
ஆரம்பத்தில் இருந்தே
அரியாசனத்திற்கு ஆசைப்பட்டனாகக் காட்டப்பட்ட பல்வாள்தேவனும், கொம்பு சீவி விடுவதையே
வாடிக்கையாக் கொண்ட தந்தை பிங்கலதேவரும் கூட ஸ்கோர் செய்து விட்டனர்.
மதன் கார்க்கியின்
வசனத்தால் தேவசேனாவும் தனித்து தெரிந்து விட்டார்.
ஆனால், மாபெரும்
சரிவைச் சந்தித்து சிவகாமி சுக்கு நூறாகி விட்டார்.
ராஜமாதாவாகே வாழ்ந்துக் காட்டிய ரம்யா கிருஷ்ணனால் சிவகாமி பாத்திரத்தின்
தலைத் தப்பியிருக்கிறது. மகாரணிக்குண்டான
அனைத்து மிடுக்கு, கம்பீரம், துணிச்சல், அறிவுக்கூர்மை, என உடல் மொழியிலேயே குறிப்பாக
கண்களாலேயே நேர்த்தியாகக் காட்டி விட்டார் ‘நீலாம்பரி’.
வேறு யாராவது நடித்திருந்தால்
நிச்சயம் சிவகாமி ‘அடிபட்டிருக்கும்’
பாகுபலி 2-டில்
நடிப்பில் எல்லாரையும் ரம்யா கிருஷ்ணன் தூக்கிச் சாப்பிட்டு விட்டாலும், பாத்திரம்
என வரும் போது படு பாதாளத்தில் விழுந்தது என்னவோ சிவகாமி தான் !
முற்பாதியில் ஓவர் கெத்தாக வந்த போதே நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், சிவகாமியின் முடிவு என்னவாக இருந்திருக்குமென்று !
எது எப்படி இருந்தாலும் மகிழ்மதி பேரரசின் அதி சக்தி வாய்ந்த ராஜமாதாவாக காலத்துக்கும் சிவகாமி நிலைத்திருப்பார்!
ஜெய் மகிழ்மதி
!
- மோகனதாஸ் முனியாண்டி
#சிந்தித்தவேளை
No comments:
Post a Comment