வழி பிறக்க வேண்டிய மாதத்தில் கலகம் பிறக்கிறதோ? நடக்கும் சம்பவங்கள் அப்படித் தான் சொல்ல வைக்கின்றன. தடுக்கி விழுமிடமெல்லாம் சர்ச்சைகள்.....
ஆகக் கடைசியாக மொழிப் பிரச்னையில் வந்து நிற்கிறது. ஏற்கனவே அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். அதை விட மோசம் - சாதி என்ற பிணியால் பிளவுப் பட்டு கிடப்பது. இவற்றில் இருந்து மீள்வதே கேள்விக்குறி தான், இதில் புதிதாக இன்னொன்றா? தாங்காதப்பா சமூகம்!
அவரவர் மொழி, அவரவர் பண்பாடு அவரவர்க்கு ஒசத்தி! அது தொடர்பில் கோரிக்கை வைப்பது அவரவர் உரிமை. மற்றவர் உரிமைக்குச் சொந்தம் கொண்டாடுவதும் அதனைத் தட்டிப் பறிப்பதும் தான் தவறு. மற்றபடி இந்நாட்டு சூழ்நிலைகளுக்கு அக்கோரிக்கைகள் நியாயமானதா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். ஜனநாயக நாட்டில் கேட்க உரிமை இருக்கிறது, கேட்டிருக்கிறார்கள்!
இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டுமொத்தமாக அவர்களை எதிரியாகப் பார்க்க வேண்டுமா? அவர்களும் நம் சகோதரர்களே! சகோதரர்களால் நம் மொழிக்கும் பள்ளிகளுக்கும் ஆபத்து வந்து விடுமா? அந்த அளவுக்கு நாம் பலவீனம் அடைந்து விட்டோமா ? இல்லையே! பின் எதற்காக?
தமிழர், தெலுங்கர், மலையாளிகள் என மொழிவாரியாகவும் கலாச்சாரம் வாரியாகவும் வேறுபட்டிருந்தாலும் இந்நாட்டைப் பொருத்தவரை நாமெல்லாம் ஒன்றே! நமது ஒட்டு மொத்த மக்கள் தொகையே 7% விழுக்காடு தான். தொடர் பிளவுகள் நம்மை அநியாயத்துக்கு வலுவிழக்கச் செய்து விடும்.
சமூக வலைத் தளங்களின் சக்தி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யார் கொளுத்திப் போட்டாலும் உடனே பற்றிக் கொள்ளும். பதிலடி என்ற பெயரில் நம் சகோதரர்களும் ஆளாளுக்கு # தொடங்கி விட்டால் நிலைமை என்னாகும்? நினைக்கவே பயமாக இருக்கிறது. மனம் வலிக்கிறது!
சமூகவலைத் தளவாசிகளே, சினமூட்டும் நடவடிக்கைகளைத் தவிர்ப்போம்,
சகோதரத்துவத்தைப் பேணுவோம்,
மனமாச்சர்யங்களை விட்டொழிப்போம்!
சகோதரத்துவத்தைப் பேணுவோம்,
மனமாச்சர்யங்களை விட்டொழிப்போம்!
ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் வளமிகு எதிர்காலத்திற்கு இப்போதே நம் கரங்களை வலுப்படுத்துவோம்.
வேண்டாம் நமக்குள் பிரிவினைவாதம்.
நம்பிக்கைத் தளராத #சிந்தித்தவேளை
No comments:
Post a Comment