2017 மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகள் (
SUKIM 2017 ) பேராக், தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக் கழக விளையாட்டு வளாகத்தில் இனிதே
நடைபெற்று முடிந்திருக்கின்றது.
நான்காம் முறையாக அவ்விளையாட்டுத் திருவிழா அரங்கேறியிருக்கிறது.
சிறப்பாக ஏற்று நடத்திய மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார
அறவாரியத்திற்கும், உபசரணை மாநிலமான பேராக்கிற்கும்
முதலில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்க வேண்டும்….
போட்டியைப் பற்றி என்ன சொல்வது?
“ எங்க காலத்தில் இப்படியெல்லாம் இல்லையே” என அங்கலாய்த்துக்
கொள்வதைத் தவிர ?
ஆம், இருந்திருந்தால்
நாங்கள் எல்லாம்……. என ஏக்க பெருமூச்சு விடும்
நிலைக்கு எங்களைத் தள்ளியிருப்பதே இப்போட்டியின் வெற்றி!
இம்முறை ஈராயிரம் விளையாட்டாளர்கள் பங்கெடுக்க உப்சியே
கலகலத்து போனது.
பள்ளிகள், பொது அமைப்புகள், விளையாட்டுச் சங்கங்கள் என
அனைவரும் திரளாகப் பங்கேற்றது, தொடக்க விழாவின் போதே ஏதோ நம்பிக்கையை விதைத்தது என்றே சொல்லலாம்.
வழக்கமான திடல் தடப் போட்டிகள், கால்பந்து, கராத்தே,
தேக்குவாண்டோ, கபடி, சிலம்பம் போட்டிகளைத் தவிர்த்து டென்னிஸ், ஸ்குவாஷ், உடல் கட்டழகர் போன்ற போட்டிகளும்
நடத்தப்பட்டது பாராட்டுக்குரியது.
ஒவ்வொரு களத்திலும்
விறுவிறுப்புக் குறையாத போராட்டங்கள்,
மூலையெங்கும் வெற்றி முழக்கங்கள்,
பரபரப்புமிக்க பதக்க வேட்டை!
பதக்கங்களை வாரிக் குவித்து ஒட்டுமொத்த வெற்றியாளராக
சிலாங்கூரும் வாகை சூடி விட்டது!
இதோடு
முடிந்ததா?
இல்லை….
இனிமேல் தான் பயணமே!
மற்ற இனத்தவர் ஆதிக்கம் செலுத்தி வரும் போவ்லிங், நீச்சல்,
முக்குளிப்பு, ஜிம்னாஸ்திக் போன்ற விளையாட்டுகளிலும் வரும் காலங்களில் கவனம் செலுத்தினால் சிறப்பு.
உரிய தளமும் களமும் கிடைத்தால் நம்பிக்கை நட்சத்திரங்கள் நிச்சயம் அடையாளம் காணப்படுவர்!
அடுத்தடுத்து வரும் போட்டிகளில், சுக்மா சாதனைகளும்
உடைக்கப் பட வேண்டும்.
முடிந்தால் தேசிய சாதனைகளையும் முறியடிக்க வேண்டும்.
அப்படி நடந்தால் SUKIM-மின் தரம் தானாக உயரும்.
நம்மினத்தவர் மட்டுமின்றி நாட்டு மக்களின் கவனத்தையே
ஈர்த்து, விளையாட்டு நாள்காட்டியில் யாரும்
தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக உருவாகிவிடும்.
ஈராண்டுகளுக்கு
ஒரு முறை சீ விளையாட்டுப் போட்டிக்கும்,
நான்காண்டுகளுக்கு
ஒரு முறை ஒலிம்பிக் போட்டிக்கும்,
உலகக்
கிண்ணக் கால்பந்து இறுதிச் சுற்றுக்கு காத்திருப்பது போல….
இனி
இந்த SUKIM விளையாட்டுப் போட்டிக்காக நமது
நம்பிக்கை நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமுதாயமே காத்திருந்து கொண்டாட வேண்டும்!
SUKIM,
SUKMA வரை மேம்பட்டு தேசிய அளவு உயர வேண்டும்!
சீ
போட்டிக்கும் ஆசியப் போட்டிக்கும் ஏன் என்றாவது ஒருநாள் ஒலிம்பிக்/ உலகப் போட்டிகளிலும்
பங்கேற்கும் அளவுக்கு இவர்கள் உயர வேண்டும்.
மின்னல்
வேக ஓட்டக்காரர் டான் ஸ்ரீ டாக்டர் எம் ஜெகதீசன், டத்தோ எம். இராஜாமணி, பூப்பந்து சகாப்தம்
மறைந்த டத்தோ பஞ்ச் குணாளன், கால்பந்து ஜாம்பவான் டத்தோ எம்.கருத்து, போவ்லிங் ஜாம்பவான்
டத்தோ பி.எஸ்.நாதன், பறக்கும் பாவை ஜி.சாந்தி, நெடுந்தூர ஜாம்பவான் எம்.ராமச்சந்திரன்,
சைக்கிளோட்ட சிங்கம் எம். குமரேசன் , கோல் காவலர் வீ.ஆறுமுகம், இன்னும் எத்தனையோ நம்மின
தங்கங்கள் வலம் வந்த விளையாட்டரங்கை அடுத்தத் தலைமுறையும் வலம் வர வேண்டும்!
நாம்
இல்லாத விளையாட்டோ, களமோ இல்லையென்ற நிலை உருவாக வேண்டும்!
விளையாட்டரங்கை
ஆக்கிரமித்த நமது வரலாறு திரும்ப வேண்டும்;
திரும்பும்!
நம்புங்கள்
…..
அந்த
நம்பிக்கையை இந்த SUKIM விளையாட்டுப் போட்டி விதைத்திருக்கிறது.
அதை
வலுப்படுத்த வேண்டியது நமது கடமை.
ஏற்பாட்டுக்
குழுவினரை #சிந்தித்தவேளை தலை வணங்குகிறது!
- மோகனதாஸ்
முனியாண்டி
No comments:
Post a Comment