அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Friday, 6 October 2017

எங்களூர் பாகுபலி!




ர்ப்பரிப்புகள் சற்று அடங்கிய பிறகே அதாவது தாமதமாகத் தான் இம்முறை படத்தைப் பார்த்தேன்,  அதிர்ச்சியில் வேர்த்தேன்!

படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிறைவேறியதா?


நிறைவேறியது மட்டுமல்ல , என் எதிர்பார்ப்பையும் மீறியது என நிச்சயம் உரக்கச் சொல்வேன்...

உள்ளபடியே மர்மக் கதைகள், பேய்ப் படங்கள், திகில்  கதைகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால், எனது அந்த மனப்போக்கை 'என் வீட்டுத் தோட்டத்தில்' மாற்றியிருக்கிறது.


படத்தின் கதை எல்லாருக்கும் தெரியும் !

ரு வரியில் சொல்வதென்றால்..... ஓநாய் மனிதனால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படும் மாற்றுத் திறனாளி பெண்ணொருவருக்கு என்ன ஆனது? யாரந்த ஓனாய் மனிதன்?

அதன் கேள்விக்கான விடையைத் தான் சுமார் 2 மணி நேர விறுவிறு பயணத்தில் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாய் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஷாமளன்.

வழக்கமான காதல், நகைச்சுவை, சண்டை படங்கள் பாணியில் இல்லாமல் ஒரு புது அனுபவத்திற்கு படம் நம்மை தயாராக்குகிறது என்பது ஆரம்பத்திலேயே ஆறுதல் அளித்து விடுகிறது.

ஒரு அரை மணி நேர படத்திற்குப் பிறகு நாற்காலியின் நுனியில் அமர்ந்து பார்க்கும் நிலைக்குச் சென்றேன் என்பது எனக்கே அதிசயமான ஒன்றுதான்.



நடிப்பு

ஏறக்குறைய அனைத்து நடிகர்களுமே இதுவரை இல்லாத அளவுக்கு நடிப்பில் கைத்தேர்ந்தவர்களாக நம் கண்களுக்குத் தெரிகின்றனர்.  


ஜெயா கணேசன்
அனைவரையும் முந்தி நிற்பது கதாநாயாகியாக வந்து எல்லோரின் பாராட்டையும் அள்ளிக் கொள்ளும் ஜெயா கணேசன் தான்.  கேட்கும் - பேசும் திறன் இழந்த பெண்ணாக தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார்.  சோகம், பயம், படபடப்பு, அழுகை, மகிழ்ச்சி என அத்தனை அம்சங்களையும் அளவோடு கொடுத்திருக்கிறார். கொலையாளியிடம் படும் துன்பங்களின் போது அவர் வெளிப்படுத்தும் பாவணைகள் அடடா ரகம்.  இவரின் நடிப்புக்கு விருதுகள் வரிசைக் கட்டி நிற்கப் போவது திண்ணம்.



மகேசன் பூபாலன்

துடிப்புமிகு காவல் வீரர் கபிலனாக மனுசன் ஆச்சரியப்படுத்துகிறார்.  பழைய தோல்வியின் தாக்கம், கொலையாளியை தேடி பிடிப்பதில் காட்டும் ஆர்வம், மேலதிகாரியின் உத்தரவை செவ்வனே செய்து முடிக்க காட்டும் தீவிரம் என கலந்தடிக்கிறார். அசப்பில் தமிழ் பட நடிகர் அதுல் குர்கர்னியை ஞாபகப்படுத்துகிறார்.  காணாமல் போன பெண்ணின் காதலனை விசாரிக்கையில் 'How do you feel now?' என்ற வசனத்தின் மூலம் தியேட்டரில் கைத்தட்டல் பெறுகிறார். மகேசனுக்கு இனி அடுத்தடுத்து கனமான- கம்பீரமான பாத்திரங்கள் வரும் என நம்பலாம்.


மோகனராஜ்

'புன்னகை செய்திடும்' இசைக் காணொளியில் இராணூவ வீரராக பார்த்த முகம்.   இதில்மாற்றுத் திறனாளிகளுக்கான  பள்ளியில்  Tutor-ராக வருகிறார்.  காது கேளா-வாய் பேச முடியா இளம் பெண்ணுக்கு நம்பிக்கையைக் கொடுத்து கடைசியில் வில்லனாகிறார்.  வில்லனாக  மாறுவார் என நம்மால்  யூகிக்க முடியாத வண்ணம்
கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு அப்பாவியான தோற்றம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. திறமையாளராகத் தெரியும் இவரை இயக்குநர்கள் பயன்படுத்திக் கொண்டால் நலம்.


கே.எஸ். மணியம்

வழக்கமாக பாசமிக்க தந்தையாக வலம் வருபவருக்கு இம்முறை சற்று வித்தியாசமான வேடம். தனது அனுபவத்தின் மூலம் ஏற்ற கதாபாத்திரத்திற்கு கனம் சேர்க்கிறார். ஆனால், தொடக்கக் காட்சிகளின் போது பெண்கள் விஷயத்தில் வேறு மாதிரியானவர் என்ற அறிமுகத்தை என்னவோ என் மனம் ஏற்க மறுக்கிறது. இதுவரை பண்பட்ட கதாபாத்திரங்களில் பார்த்தவரை அப்படி பார்க்கையில் அது இயல்புதானே! இருந்தாலும் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் நடித்தாரே அது தான் மூத்த கலைஞருக்கு அழகு.


ஹரிதாஸ்

நம்ம ஊரு 'சாமி'க்கு ஏற்ற கம்பீரத் தோற்றம் - கதாபாத்திரம். தேவையானதை கணக்காகச் செய்திருக்கிறார். ஆனால், அவரின்  நடிப்பாற்றலுக்கு தீவிர ரசிகன் என்ற முறையில் இன்னும் வலுவான கதாபாத்திரங்கள் அவரை நாடி வரும் என நம்புகிறேன்




திலீப் குமார்

படத்தின் உண்மை கதாநாயகன்! ஓநாய் மனிதனாக அலற வைக்கிறார். அங்க அசைவில் அவ்வளவு நேர்த்தி. கத்தி, கோடரி, இரும்புக் கம்பி என ஆயுதங்கள் சகிதமாக வலம் வந்து, கண்ட மேனிக்கு அடித்து வீழ்த்துகிறார், வெட்டி சாய்க்கிறார். ஆனாலும் இந்த 'ஓநாய் மனிதனை' ஏனோ வெறுக்க தோன்றவில்லை. கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப உடலமைப்பை ஏற்றியிருக்கிறார் என தெரிகிறது. ஓநாய் மனிதனின் பின்னால் நமக்கொரு புதியத் திறமையாளர் கிடைத்திருக்கிறார்.



இசை மற்றும் பின்னணி இசை


ஷமேஷன் மணிமாறன் பின்னியெடுத்திருக்கிறார் ! தொடக்கத்தில் இருந்து கடைசி வரை கதையை விறுவிறுப்புக் குறையாமல்  நகர்த்திச் செல்கிறது அவரின் பின்னணி இசை. ஒரு தமிழ்ப் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை என்ற அளவுக்கு மிக நேரத்தியாக அமைந்திருக்கிறது. திகிலூட்டுவதிலும், பரபரப்பை கூட்டுவதிலும் பல்லாங்குழி ஆடியிருக்கிறார். நம்மிடையே மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரம் உருவாகியிருக்கிறது.



பாடல்

ஒளி விழா பாடல் மனதில் நிற்கிறது.  ஷமேஷனின் இசையில் யுவாஜியின் வரிகளுக்கு பிரசன்னாவின் குரல் வலு சேர்க்கிறது. காட்சியமைப்பும் அருமை.



ஒளிப்பதிவு 

ஒளிப்பதிவாளரின் மெனக்கெடல் படத்தை தூக்கி நிறுத்த பெரிதும் உதவியிருக்கிறது.  தொடக்கக் காட்சிகளுக்கு ஏற்றவாறும், அடுத்தடுத்து வரும் அதிரடி காட்சிகளுக்கு உகந்தவாறும்
இயக்குநரின் கற்பனைக்கு ஈடாக ஒளிப்பதிவாளரின் கேமரா வேலை செய்திருக்கிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில காட்சிகள் வியக்க வைக்கின்றன. இதை அகன்ற திரையில் பார்த்தால் தான் அதன் அருமை புரியும்.


மொத்த படத்தில் 30 விழுக்காடு வசனங்களே இருப்பது படித்து தான் தெரிந்து கொண்டேன். படம் பார்த்த போது அந்த உணர்வே இல்லை. அந்த அளவுக்கு கதையோடு நாம் ஒன்றி போய் விடுகிறோம்.


ரு சில இடங்களில் குறிப்பாக முதல் அரை மணி நேர காட்சிகளில் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.  பரவாயில்லை, கதை செல்லும் வேகத்திலும் விறுவிறுப்பிலும் அது அவ்வளவு பெரிதாக தெரியவில்லை. ஏன் தமிழ்ப் படங்களில் நாம் பார்க்காததா....


ங்காங்கே சில குறைகள் இருந்தாலும், மிகச் சிறந்த மலேசிய
படைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



இயக்கம்.....

கார்த்திக் ஷாமளன்

கார்த்திக் ஷாமளன்....  #சிந்தித்தவேளை உங்களைத் தலை வணங்குகிறது!


மலேசியத் தமிழ் திரைப்பட துறையின் எதிர்காலம் உங்களைப் போன்ற இளைஞர்களின் கையில் தவழுவது காலத்தின் கட்டாயம். எந்த சமரசமும் இன்றி இது போன்ற மிகச் சிறந்த படைப்புகளைத் தரும் முயற்சியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.


மீதியை நேரில் பாராட்டுகிறேன்!

அதுவரை 'என் வீட்டுத் தோட்டத்தில்' மொத்த படக் குழுவுக்கே எனது பெரிய salute!


" அசலூர் பாகுபலியையும் பத்து முறை பார்ப்போம், 
உள்ளூர் பலசாலிகளையும் முத்து போல காப்போம்! "


- மோகனதாஸ் முனியாண்டி 
#சிந்தித்தவேளை 




No comments: