அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 14 November 2017

இன்னொரு பஞ்ச் குணாளன் வருவார்; வந்தே தீருவார்!

ஸ்ரீ முருகன் நிலையம் (SMC)-யின் இளைஞர் படை Youth Core ஏற்பாட்டிலான தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசியப் பூப்பந்து போட்டியின் அண்மைய இறுதிச் சுற்றைக் காணும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. வேலைப்பளுவினால் கடந்தாண்டு தவறவிட்ட வாய்ப்பை இம்முறை  நன்குப் பயன்படுத்திக் கொண்டேன்.

மாபெரும் இறுதிச் சுற்று என்ற முத்திரையுடன் நவம்பர் 4-ங்காம் தேதி கோலாலம்பூர் செராஸ் பூப்பந்து அரங்கில் போட்டி களைக்கட்டியது. டத்தோ பஞ்ச் குணாளன் , டத்தோ ஜேம்ஸ் செல்வராஜா உள்ளிட்ட நமது ஜாம்பவான்கள் களம் கண்ட வரலாற்று இடம் அது.

பூப்பந்து அரங்கில் இந்தியர்களின் வசந்தகாலத்தை மீட்டெடுக்கும் முயற்சியே இப்போட்டியின் தலையாய நோக்கமாகும். அதிலும், ‘ உலகச் சாதனையாளரைத் தேடும் தருணம்’ என்ற பொருத்தமான கருப்பொருளுடன் போட்டியை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் பாராட்டுக்குரியது.

மொத்தம் 142 தமிழ்ப் பள்ளிகள் இம்முறை போட்டியில் பங்கேற்றன. இறுதியாட்டத்தில் வெற்றிப் பெற்ற சிலாங்கூர் காஜாங் தமிழ்ப் பள்ளிக்கு ஐயாயிரம் ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்பட்டதோடு, இந்தியா பெங்களூருவில் உள்ள உலகப் புகழ்ப் பெற்ற பிரகாஷ் படுகோன் பூப்பந்து பயிற்சி மையத்தில் 5 நாட்கள் இலவச பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதும் இவ்வாண்டு போட்டியில் முத்தாய்ப்பாய் அமைந்தது. மலேசிய இந்தியப் பூப்பந்து சங்கத்தின் தனா அரிகிருஷ்ணன் முயற்சியில் அக்கனவு நனவாகியுள்ளது.

5 நாட்கள் என்பதை வெறும் குறுகிய காலமாக மட்டும் பார்த்தல் கூடாது; மாறாக அரிய வாய்ப்பாக பார்த்திடல் வேண்டும். அவ்வாய்ப்பை மாணவர்கள் தங்களின் உற்சாகத்தைப் பெருக்கிக் கொள்ளவும், ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் , அடுத்தக் கட்டத்திற்கு தங்களை உயர்த்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். தீவிர விளையாட்டு ஆர்வலன் என்ற முறையில் எனது எதிர்பார்ப்பு அது!

மூன்றாவது நான்காவது இடங்களைப் பிடித்த கெடா, சரஸ்வதி தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும், ஜொகூர் மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் வாழ்த்துகளைக் கூறியே ஆக வேண்டும்.  


றுதியாட்டத்தின் போது பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் 
தமிழ்ப் பள்ளியை வீழ்த்தி காஜாங் தமிழ்ப் பள்ளி கிண்ணத்தை வாகை சூடிய போது , மாணவர்களும் ஆசிரியர்களும் வெற்றிக் களிப்பில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆரவாரம் புரிந்தது அரங்கில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே காட்சியை, நாளை தேசிய அளவிலோ, ஆசிய அளவிலோ ஏன் உலக அளவிலோ காணும் வாய்ப்பு வந்தால்….எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே தித்திக்கிறதே!   

லேசியப் பூப்பந்து சங்கத் BAM தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்சா ஜக்காரியா நேரில் வந்து இறுதியாட்டத்தை முழுவதுமாக கண்டு களித்து, பரிசுகளை எடுத்து வழங்கிச் சென்றார். BAM-மின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்திருப்பது இப்போட்டிக்கான அங்கீகாரம்.

ஒரு படி மேலாக, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடினும் தனது வற்றாத ஆதரவை வழங்கி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.

ல தமிழ்ப் பள்ளிகளில் பூப்பந்து பயிற்சி என்பதே கிடையாது. ஆயினும், கடந்தாண்டு போட்டிகளின் தாக்கமாக சில பள்ளிகள் இப்போட்டிக்காக தங்களைத் தயார் படுத்தவே சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டு போட்டியில் பங்கேற்றதாக Youth Core தலைவர்  க.சுரேந்திரன் கூறிய போது, கண்டிப்பாக அவர்களின் நோக்கம் சரியான பாதையில் செல்வதைப் பறைசாற்றியது.

னி அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்ப் பள்ளிகளின் பங்கேற்பு மேலும் அதிகரிக்க வேண்டும். மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை ஏற்பாடு செய்வதில் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் துணை நிற்க வேண்டும். வட்டார பொது அமைப்புகளும் கைக் கொடுத்து இது போன்ற உன்னத முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ப்படி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து தங்களின் அரிய முயற்சிக்கு உரிய அங்கீகாரத்தைப் பெறுவதில் சுரேந்திரனும் அவர்தம் படையினரும் மேற்கொண்டு வரும் மெனக்கெடல் ஒருநாளும் வீண் போகாது!

இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் நமக்கெல்லாம் இன்னொரு பஞ்ச் குணாளன் நிச்சயம் கிடைப்பார். நம்புங்கள்! அந்த நம்பிக்கையை  SMC Youth Core-ரின் #smcsmash விதைத்திருக்கிறது. வாய்ப்பு இல்லையே என இனியும் யாரும் சப்பைக் காரணங்களைக் கூற முடியாது.

ற்கனவே கால்பந்து துறையில் இந்தியர்களை வளர்க்கும் பணியில் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் MIFA, ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையில் இந்தியர்களின் வரலாற்றை மீட்டெடுக்க SUKIM போட்டியின் மூலம் மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவை ஆகியவை உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்நிலையில் பூப்பந்துத் துறையிலும் நாம் மீட்சிப் பெறுவதற்குண்டான நடவடிக்கைகளை இந்த SMC கிண்ணம்  முன்னெடுத்துச் செல்வது பாராட்டுக்குரியது மட்டுமல்ல போற்றுதலுக்குரியது. அதையெல்லாம் விட ஆதரவளிக்கப்பட வேண்டியது.

யாருக்குத் தெரியும், நாளை மலேசியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை, பூப்பந்து போட்டியின் வழி நம்மவர் பெற்றுத் தரலாம்!

-மோகனதாஸ் முனியாண்டி
#சிந்தித்தவேளை  தலை வணங்கிய வேளை 



No comments: