அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 14 July 2020

முதல் நாளில் 'மாஸ்' காட்டிய முகிதின் !


ந்த ஜூலை 13-ஆம் நாள் மலேசிய நாடாளுமன்றத்தில் நாம் பார்த்து, ரசித்து, புல்லரித்துப் போன காட்சிகளிடத்தில், குழாயடி சண்டை கூட தோற்று போயிருக்கும்!

அவ்வளவு அதகளம் அரங்கேறி முடிந்திருக்கிறது, அதுவும் ஒரே நாளில், முதல் நாளில்.

முதல் நாளில் 'மாஸ்' காட்டிய முகிதின்
சபாநாயகர் சர்ச்சையில் இரு பக்கமும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதை வாய்ச் சண்டையில் நிரூபித்திருக்கிறார்கள்.

அவர்கள் நியாயம் அவர்களுக்கு, இவர்கள் நியாயம் இவர்களுக்கு!

வழக்கம் போல் நடுவில் ( நாமம் வாங்காதக் குறையாக) நாம்!

சரி, #வியன் கேட்பதெல்லாம்.....
    
தீர்மானத்தைத் தோற்கடித்து விடுவோம் என உண்மையிலேயே நீங்கள் நம்பியிருந்தீர்களா?

உங்களிடம் பெரும்பான்மை இருந்திருந்தால் தீர்மானம் தோற்றிருக்கும் அல்லவா?

புதிய சபாநாயகராக Azhar Harun தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயம் என தொடக்கம் முதலே வியன் கூறி வந்தான்.

வியன் என்ன வியன், விஷயம் அறிந்த நயனுக்கும் கூட தெரிந்திருக்கும், அது தான் 13-ஆம் தேதி நடைபெறப் போகிறதென!

உலக அதிசயம் எதுவும் நடந்தால் ஒழிய அதில் மாற்றம் இருக்கப் போவதில்லை. இப்படி ஒரு நிலை வரும் என்பதை உங்களில் , அதாவது நேற்றிரவு சொன்னீர்களே உங்கள் வசம் 108 பேர் இருப்பதாக, அவர்களில் ஒருவர் கூட அறிந்திருக்கவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்.

பிரதமருக்கு பெரும்பான்மை இல்லை, பெரும்பான்மை இல்லை என இதுநாள் கூறி வந்த உங்களால், உங்களுக்கு அக்கூடுதல் பலம் இருப்பதை ஏன் நிரூபிக்க முடியவில்லை?

ஏன் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை! அது தான் விஷயம்.

முகிதின் கூடுதலாக ஓர் இடத்தை மட்டுமே வைத்திருக்கிறார், 2 ஓட்டில் வெற்றிப் பெற்றதெல்லாம் ஒரு வெற்றியா? எந்த நேரத்திலும் கவிழ்ந்து விடும் அரசாங்கம், இப்படி ஒரு நிலைத் தன்மையற்ற அரசு தேவையா என பக்கம் பக்கமாக பேசினீர்களே தவிர, அரசாங்கத்தை விட உங்களிடம் பலம் இருப்பதை எந்த இடத்திலும் நீங்கள் நிரூபித்ததாகத் தெரியவில்லை.

எத்தனை மாநிலங்களில் ஒரே சீட்டு வித்தியாசத்தில் ஐந்தாண்டுகளை அரசுகள் பூர்த்திச் செய்திருக்கின்றன? இவ்வளவு ஏன், 2 சீட்டு வித்தியாசத்தில் கவிழும் வரை கெடாவில் முக்ரிஸ் தாக்குப் பிடிக்கவில்லையா?

நீங்கள் செய்த பில்டப்பில், கடைசியில், 13-ஆம் தேதி என்ன நடக்கப் போகிறதோ, முகிதின் கவிழ்வாரா, மகாதீர் வெல்வாரா. அன்வார் தான் அடுத்தப் பிரதமரா, நாடாளுமன்றம் கலைக்கப்படுமோ என உங்கள் தொண்டர்கள் மத்தியில் ஆர்வக் கோளாறு ஏற்பட்டது தான்  மிச்சம்!

இப்பொழுதும் கூட உங்களை விட்டுக் கொடுக்காமல் தான் அவர்கள் பேசுவார்கள், ஏன் என்றால் உங்கள் மீது அவர்கள் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் அளவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

ஆறாம் படிவத்தில் Pengajian AM படித்த மாணவருக்கே தெரியும், இன்று மக்களவையில் நடந்தது, அரசியல் சாசனத்தின் படி சட்டப்பூர்வமானதே என்று! விவாதத்தின் போது உள்ளே உங்களால் என்ன பேச முடிந்தது ?

" மிகச் சிறப்பாக, சாதுரியமாக, சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்த ஒருவரை சபாநாயகர் பொறுப்பில் இருந்து காலி செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்பதைத் தவிர?

அமளி துமளி ஓய்ந்ததும், எதிர்கட்சித் தலைவர் சொன்னதும் அது தான்.

தார்மீக அடிப்படையில் கேள்வி எழுப்பலாம் என்றாலும், சட்ட அடிப்படையில் பிரதமர் கொண்டு வந்தத் தீர்மானத்தை நீங்கள் பிழையென்று சொல்ல முடியாது. ( இது உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்!)

சரி, நிலைமைக் கை மீறி விட்டது! இனி சம்பவத்தன்று என்ன செய்யலாம், என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அல்லவா நீங்கள் யோசித்திருக்க வேண்டும்? உங்களிடம் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், தீர்மானத்தை தோற்கடிக்க முடியாது என்ற சூழ்நிலையில், என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருக்க வேண்டும்?

சபாநாயகர் பதவி காலி என அறிவிக்கப்பட்டதும், அரசு சார்பில் கண்டிப்பாக புதியவரின் பெயர் பரிந்துரைக்கப்படும். அப்போது வழக்கமாக எல்லா நாடுகளிலும், நாடாளுமன்றங்களிலும் என்ன நடக்கும்? எதிர்கட்சிகள் போட்டிக்கு தங்கள் சார்பில் ஒருவரை நிறுத்துவர். தோற்போம் என தெரிந்தாலும் கூட, ஒரு வீம்புக்காவது போட்டியை ஏற்படுத்தி, எளிதில் வெற்றிப் பெற்று விட முடியாத வகையில் அரசாங்கத்தின் தூக்கத்தைக் கெடுப்பர்.

Azhar Harun  நிறுத்தப்படுகிறார் என்பது ஏற்கனவே தெரிந்து விட்டது. அதிகாரப்பூர்வமாக இல்லையென்றாலும், அரசல் புரசலாக என்றோ வெளி வந்து விட்டது. ( தயவு செய்து, உங்கள் வட்டாரங்களில் அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை, தெரியவே தெரியாது என்றெல்லாம் சொல்லாதீர்கள்!)

உடனே என்ன செய்திருக்க வேண்டும், நீங்கள் இன்று தற்காத்து தற்காத்து ஓய்ந்துப் போன சபாநாயகர் Tan Sri Mohamad Ariff Md Yusof -பின் பெயரை சட்டென முன்மொழிந்திருக்க வேண்டாமா? அல்லது வேறு யாரையாவது போட்டிக்கு நிறுத்தியிருக்க வேண்டாமா? ( கடைசி நேரத்தில் தான் எங்களுக்குத் தெரியும், 14 நாட்கள் கால அவகாசம் அதற்குள் முடிந்து விட்டது, என்றெல்லாம் சொல்லித் தப்பிக்காதீர்கள்) 

முகிதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழியத் தெரிந்த உங்களுக்கு, இது தெரியாமல் போய் விட்டதா? 

உங்கள் சார்பில் ஒருவரை போட்டிக்கு நிறுத்தியிருந்தால், இன்று நடந்த அமளி துமளிகளுக்குப் பிறகு, போட்டியை உருவாக்கி, சபாநாயகருக்கான வாக்கெடுப்பை நடத்தியிருக்கலாம்.

அவ்வளவு ஏன், இன்றே கூட, கேட்டிருக்கலாம், சரி, உங்கள் தீர்மானம் வெல்லப் போகிறது, பரவாயில்லை, நாங்களும் ஆளை நிறுத்துகிறோம். யார் வெல்கிறார்கள் என்று பார்த்து விடுவோம் என சவால் விட்டிருக்கலாம்.

இழுத்துப் பிடித்து ஒரு காட்டு காட்டியிருக்கலாம், தோல்வியெல்லாம் இரண்டாம் பட்சம்.  

ஆனால், எல்லாம் அமளித் துமளியிலேயே முடிந்து விட்டது.

கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் என்ன அறிவிப்பு வந்தது?

" சபாநாயகர் பதவி காலியாகியிருக்கிறது. அதனை நிரப்ப இன்னாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு யாரும் இல்லாததால், அவரே பதவியில் அமருகிறார்!" என்று தானே?

சட்டப்படி அப்படித்தான் நடக்க வேண்டும், நடந்திருக்கிறது.

சரி, உங்கள் பக்க நியாயத்திற்கே வருகிறான் வியன். 

'கொல்லைப் புறமாக' வந்த அரசு, புத்திசாலித்தனமாக அதை விட கமுக்கமாக உங்களை 'வைத்து செய்து விட்டார்கள்!" என்றே வைத்துக் கொள்வோம். அதனையும் வியன் ஏற்றுக்  கொள்கிறான். 

ஆனால், நீங்கள் எல்லாம் எங்களைப் போல் ஒன்றும் தெரியாதவர்களா? அரசியல் சித்து விளையாட்டு, அரசியல் தந்திரம் என்பதெல்லாம் நீங்கள்  கேட்டிராத ஒன்றா? உங்களில் ஒருவரின் காதுகளுக்குக் கூடவா அங்கே என்ன நடக்கிறது என்று சேதி வரவில்லை?

ஆமாம், உங்களுக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் இருக்கப் போகிறது? நீங்கள் தான் பிரதமர் வேட்பாளர் தேர்விலேயே மூழ்கிப் போய் கிடந்தீர்களே, கிடக்கிறீர்களே?

நீங்கள் " நீயா நானா?" என உங்களுக்குள்ளே மோதிக்  கொண்டீர்கள், அரசாங்கம் சந்தடி சாக்கில் சங்கை ஊதி விட்டது.

அரசியலில் வேகமும், விவேகமும் முக்கியமல்லவா? 

அல்லது, இப்போதும் 'இது எங்களின் விவேகம், இனிமேல் தான் ஆட்டமே இருக்கு!' என சப்பைக் கட்டு கட்டுவீர்களா?

 சரி, போகட்டும் விடுங்கள்.

அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கவனமாக இருங்கள்.

ஓர் ஆளுங்கட்சியைச் சாய்ப்பதில் நீங்கள் எவ்வளவு நேர்த்தியாக செயல்படுகிறீர்களோ, அதை விட இரு மடங்கு அது alert-டாக இருக்கும். நீங்கள் நினைப்பது போல் சுலபம் அல்ல.

மலேசிய அரசியல் வரலாற்றில் அமைந்த மிகப் பெரிய எதிர்கட்சி நீங்கள். இன்றையத் தேதிக்கு 109 பேரை வைத்திருக்கிறீர்கள். பெரும்பான்மைக்கு 3 இடங்களே குறைவு. நீங்கள் நினைத்தால் ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தைக் கிடுகிடுக்க வைக்க முடியும். வீண் பிரச்னைகளுக்காக அல்ல, மக்கள் பிரச்னையை முன் நிறுத்தி!

அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி applause-சை அள்ள முடியும்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், எஞ்சிய நாட்களில் "எங்களைப் போல் எதிர்கட்சியொன்றை மலேசியா இதுவரை பார்த்ததில்லை!" என்ற அளவுக்கு செயல்படுங்கள்.

இன்னும் காலம் தாழ்ந்திடவில்லை.

முடிக்கு முன், 

மீண்டும் எதிர்கட்சித் தலைவராகியுள்ள அன்வாரைப் பாராட்ட விரும்புகிறான் #வியன். கட்சித் தாவல் மூலம் தன் பதவிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்ட துணை சபாநாயகருக்கு எதிராக சீறிய போதும், முகிதீனை நேருக்கு நேர் எதிர்கொண்டு, "இனி உனக்கு நான் தான்டா வில்லன்!" என்ற தோற்றத்தை உருவாக்கிய போதும், வாருங்கள் வெளிநடப்பு செய்யலாம் எனக் கூறி தவறான முன்னுதாரணத்தைக் காட்டாத அந்த முதிர்ச்சியின் போதும், மிளிர்ந்தார்.


" இதை, இதைத் தான் வியன் எதிர்பார்த்தான்!"

அவர் தலைமையை ஏற்று பக்காத்தான் செயல்பட்டால் நன்று.

என்றாலும், இன்றைய முதல் நாள் நிலவரத்தின் படி கோல் எண்ணிக்கை...

பெரிக்காத்தான் 1 பக்காத்தான் 0

1 comment:

Christopher Charles said...

Nerkonda parvai,seeriya parvai. Nandru Saar. ✌️��