அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Friday, 3 July 2020

"பீசு போன பல்பு, பிஞ்சு போன கத்தி !"

" ஐயோ, உங்களை நெனச்சாலே, எனக்கு சிப்பு சிப்பா வருது!" என வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே.... 
அப்படித்தான் இருக்கிறது தற்போதைய ஆளும் கூட்டணிக் கட்சிகளான அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் நேர்ந்த நிலை. 
இதில் என்ன கூத்து என்றால் அவர்களைக் கலாய்த்தவர் வேறு யாருமல்ல... 
தமிழகத்தில் நம்ம TR மாதிரி அவ்வப்போது 'பேட்டி அரசியல்' நடத்தி வரும் டத்தோ இப்ராஹிம் அலி தான்.
"இத்தனை நாளும் பிரதமர் வேட்பாளரே இல்லாமல் தானா மூலை முடுக்கெல்லாம் கூவிக் கொண்டிருந்தீர்கள் ? என பச்சையாக கேட்டே விட்டார் மனிதர்.
Putra என பெயர் கொண்டுள்ள தமது கட்சி, மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் தைரியமாக பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் என அலி  ஒரு படி மேலே சென்று விட்டார். ( இருந்தாலும், உங்களுக்கு ரொம்ப தான் தைரியம் தான் , போங்கோ!)
'ஊருக்கே பெரிய வீடு நாங்க தாங்கோ' எனக் கூவி வந்த கட்சிகள் பிரதமர் வேட்பாளர் தேர்வில் தடுமாறி வருவதால், வேறு வழியில்லாமல் நாங்கள் முன்னே வர வேண்டியதாகி விட்டது என்கிறார் இப்ராஹிம்.
"Muafakat Nasional ( UMNO-PAS) கூட்டணித் தலைவர்களால் தங்களில் ஒருவரை  பிரதமர் வேட்பாளராக பெயர் குறிப்பிட வக்கில்லை.  இவ்வளவு நாள் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீர்கள்? உங்களில் ஒருத்தருக்குக் கூடவா தகுதியில்லை !" ( அப்போ எல்லாமும் டம்மி பீசா?, அப்படினு சொல்லாம சொல்லிட்டாரே, இப்ராஹிம் அலி)
15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகும் முகிதின் யாசின் பிரதமராக தொடர கொள்கை அளவில்  ஆதரவளிப்பதாக அம்னோ நேற்று அறிவித்திருந்தது. முந்தா நாள் தான், அதே விஷயத்தை கூட்டாளியான பாஸ் கட்சி அறிவித்திருந்தது.
புது வரவும், அம்னோ பாஸ் பெரிய அண்ணன்களை விடவும் அரசியலில் கத்துக் குட்டியுமான BERSATU கட்சிக்கா மீண்டும் பிரதமர் பதவி என்ற ரீதியில் தான் அவ்விரண்டு மலாய் -முஸ்லீம் கட்சிகளை பிரித்து மேய்ந்திருக்கிறார் இப்ராஹிம் அலி.
மலேசிய நாடாளுமன்றத்திற்கு அடுத்து 2023-ல் தான் பொதுத் தேர்தல் வர வேண்டும். ஆனால், பக்காத்தான் அரசு பாதியிலேயே கவிழ்ந்து, இடையில் Perikatan Nasional அரசு அமைந்திருந்தாலும், அரசியல் நிலைத்தன்மை கருதி திடீர் தேர்தல் விடப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
அரசியல் கட்சிகளும் தங்கள் பங்கிற்கு அவ்வப்போது தேர்தல் பேச்சுகளை கொளுத்திப் போட்டு வருகின்றன. 
அப்படி கொளுத்திப் போட்டதில் ஒன்று தான் இப்போது பிரதமர் வேட்பாளர் வரை  வந்து நிற்கிறது.
இந்தப் பக்கம் முகிதின் தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என அம்னோவும் பாசும் மேடை போட்டு அறிவிக்காதக் குறையாக அறிவித்து விட்டடன; ஆனால் அந்தப் பக்கமோ வாரக் கணக்காக  கயிறு இழுத்து வருகிறார்கள். PH கூடாரத்தில் நீயா நானா போட்டி இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு முடிவுக்கு வராது போலிருக்கிறது.
Muafakat Nasional-லும் சரி பக்காதானும் சரி, பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் தோல்வி கண்டிருப்பதால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது தங்கள் சார்பில் நிச்சயம் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என இப்ராஹிம் தில்லாக அறிவித்தார். 
அதுவரை அது இரகசியமாகவே இருக்கட்டும் என அறிக்கையை முடித்திருக்கிறார் அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
கட்சித் தாவலில் கலைஞன் என தாங்கள் எள்ளி நகையாடியவரிடமே இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறது அவ்விரு பெரிய 'அண்ணன்களுக்கும்'. 
ஆனால், Hi Hi, Bye Bye சொல்லி விட்டு போகக் கூடிய நிலையில் உள்ள கட்சிகள் அல்ல அவை இரண்டும் என்பதை #வியன் நன்கறிவான். 
கொரோனா வைரஸ் பரவலை அரசாங்கம் கையாண்ட, கையாளும் விதம் மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை அதிகரிக்கச் செய்து, இப்போது முகிதின் காட்டில் அடை மழை என்பதால், அவர் முதுகில் சவாரி செய்வதே தற்போதைக்கு உத்தமம்! அந்தக்  களநிலவரத்தைப் புரிந்துக் கொண்டு தான் அவை அப்படியோர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

ஆனால், 60 ஆண்டு கால ஆட்சி பறிபோனதால் பல் போன  சிங்கமான அம்னோ, ஆட்சிக் கட்டிலுக்குத் திரும்பும் போது எப்படியாவது தனி ஆவர்த்தனம் செய்ய தான் விரும்பும்.
அப்படி பழைய படி அதிகாரம் செலுத்த வேண்டுமென்றால் அதிக இடங்களில் அது போட்டியிட வேண்டும்; மற்ற எல்லாரையும் விட அதிக இடங்களில் வெற்றிப் பெற வேண்டும்; பிரதமர் - துணைப் பிரதமர், முக்கிய அமைச்சுகளில் கால் மேல் மேல் கால் போட்டு அமர வேண்டும். 
இப்படி உள்ளுக்குள் தீராத ஆசையை வைத்துக் கொண்டு ,வெளியில் முகிதின் யாசினை ஆதரிப்பதாக அம்னோ கூறியிருப்பதை மக்களில் யார் நம்பினாலும், முகிதின் யாசினே அதை நம்ப மாட்டார்.  😝 அந்தக் கட்சிக்கே துணைத் தலைவராக இருந்தவர் அல்லவா? அவர்களைப் பற்றி தெரியாதா என்ன?
தேர்தல் நெருங்க நெருங்க யார் வேண்டுமானாலும் தேரில் இருந்து கழற்றி விடப்படலாம். இனிமேல் தானே இருக்கிறது கச்சேரி! 
ஆனால், ஆட்சி அதிகாரமும் மக்கள் செல்வாக்கும் முகிதின் பக்கம் இருப்பதால், இப்போதைக்கு அவர் வடத்தைப் பிடித்து ஓட்ட, பின்னால் செல்ல வேண்டிய நிலைமை மற்றவர்களுக்கு....
இதை எழுதி முடிக்கிறேன்.... வெள்ளித் திரையில் 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் ஒரு வசனம் காதில் விழுகிறது... 
வீட்டு வாடகை கொடுக்காதவர்களை நோக்கி ஒரு வசனம் பேசுகிறார் பெரிய கருப்புத் தேவர். " அட இவனுங்க எல்லாம் பீசு போன பல்பு, பிஞ்சு போன கத்தி!" என்று..... 

No comments: