அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 1 July 2020

"நீ அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்ட!"

எதுக்குடா? எதுக்குனு சொல்லுங்கடா.....! என அன்வார் புலம்பாத குறைதான்.

அந்தளவுக்கு பெரியவர் அண்மைய காலமாக அன்வாரை சீண்டோ சீண்டு என சீண்டி வருகிறார்.

"பிரதமராக உமக்கு தகுதியில்லை, நீர் பேசாமல் அமரும்!" என்ற ரீதியில் போய்க் கொண்டிருக்கிறது மகாதீரின் இடைவிடாத பேட்டிகள்.



ஆகக் கடைசியாக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட CNBC தொலைக்காட்சியின் #StreetSignsAsia நிகழ்ச்சிக்கு இயங்கலை வழியாக வழங்கிய நேர்காணலில் மகாதீர் அப்புதியத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.


"மலாய்காரர்களிடம் அன்வாருக்கு சுத்தமாக செல்வாக்கு இல்லை, அவ்வளவு தான்!" என ஒரே போடாய் போட்டிருக்கிறார்.

" மலாய் வாக்காளர்களின் ஓட்டுகள் வேண்டுமென்றால், என்னைப் போல் ஒருவரால் தான் முடியும். அப்போது தான் தேர்தலில் வெற்றிப் பெற முடியும்!"
இந்த நாட்டில் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமென்றால், மலாய்க்காரர்களின் ஆதரவு தேவை. அவர்கள் இல்லாமல் வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.


பல்லினக் கட்சித் தலைவராக இருப்பதால் அன்வாருக்கு அது சாத்தியமில்லை. எனவே அவரது தலைமையில் தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், மற்றவர்களின் உதவி கண்டிப்பாக தேவை என தெள்ளத் தெளிவாக மகாதீர் சொல்லி விட்டார்.

அதனால், மூன்றாவது முறையாக பிரதமராகும் திட்டத்தை தாம் முன் வைத்ததாக மகாதீர் விளக்கினார் ( தோடா) 

" நான் தான் கூட்டணிக்குத் தலைமையேற்க வேண்டும், பிரதமராக வேண்டும் என்பது தான் பரிந்துரை. ஆனால் அதற்கு அன்வார் இணங்கவில்லை. அவரே பிரதமராக ஆசைப்படுகிறார். 6 மாதங்கள் வரை தான் நான் இருப்பேன், அதன் பின் விலகி விடுவேன் என்று நான் சொல்லியும் அவர் கேட்பதாகத் தெரியவில்லை. நான் மீண்டும் பிரதமர் ஆகி விடக் கூடாது என்பதில் அவர் கவனமாக உள்ளார். இந்த லட்சணத்தில் நாங்கள் எப்படி ஒத்துழைப்பது? நீங்களே சொல்லுங்களேன்!" என வெகுளியாக கேட்கிறார் 95 வயது பழுத்தப் பழம்.


" நீங்கள் பார்த்தீர்கள் என்றால், முந்தைய 3 முயற்சிகளிலும் அவருக்குத் தோல்வியே மிஞ்சியது. மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கவருவதிலும், அதன் வாயிலாக தேர்தலில் வெல்வதிலும் அவர் தோல்விக் கண்டார். நான் அவர்களுடன் இணைந்தப் பிறகு தான் மலாய் வாக்காளர்களின் ஆதரவு பக்காத்தானுக்கு கொட்டோ கொட்டு என கொட்டியது. தேர்தலில் வெற்றிப் பெற்றோம். 60 ஆண்டு கால ஆட்சியைத் தூக்கிய எறிய அந்த வரலாற்று வெற்றி உதவியது!"

அன்வாரால் முடியாது , முடியாது என முழங்கி வந்த மகாதீர் கடந்த வாரம் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து பின் வாங்குதாக அறிவித்தார்.

"நாங்கள் காண்பது கனவா " என எல்லாரும் வாயில் விரலை வைக்கும் அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர், அடுத்த நொடியே " அடப்பாவிங்களா, வாயில sweet-ட வெச்சிட்டு வெடிய அடியில வெச்சிட்டீங்களேடா!" என வடிவேலு பேசும் வசனத்துக்கு ஏற்ப யாரும் எதிர்பாராத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.


My KMU Net
அதாவது " யாரோ Shafie-யாமே? யாருங்க, அவரு?" என்று பலர் கேட்கும் அளவுக்கு 'பிரபலம்' வாய்ந்த அரசியல்வாதியான சபா முதல் அமைச்சர் Shafie Apdal தான் அடுத்தப் பிரதமர் வேட்பாளர் என மகாதீர் அறிவித்தார்.

அதை கூட போனால் போகிறது என ஏற்றுக் கொள்ளலாம் என்றால், அடுத்து விட்டாரே ஒரு விடு..... " முதல் துணைப் பிரதமர் வேட்பாளர் அன்வார், இரண்டாவது துணைப் பிரதமர் முக்ரிஸ் என்று!" 😓 

பக்காத்தான் ஆதரவாளர்கள் மத்தியில் குறிப்பாக PKR உயிர் தொண்டர்கள் இடையே ஒரு நில அதிர்வையே ஏற்படுத்தி விட்டார். வியனுக்கும் நெஞ்சு வலி வராத குறை தான்.

" யாருக்கு யாருப்பா துணைப் பிரதமர்? இந்த மனுஷனுக்கு என்னாச்சு, ஏன் இப்டியெல்லாம் பண்றாரு?" என நாலா பக்கமும் மகாதீருக்கு அர்ச்சனைகள். 

ஆதரவாக DAP-யும் AMANAH-வும் வரிந்துக் கட்டினாலும், அது வெறும் பேச்சு வார்த்தை தான், பேசி முடிவெடுப்போம் என பூசி மொழுகின.

அன்வாருக்கு ஆதரவு இல்லை, அவர் பிரதமர் வேட்பாளர் அல்ல என நீங்கள் சொல்வதை ஒரு வகையில் ஏற்றுக் கொண்டோம் என்றே வைத்துக் கொள்வோமே!

அதோடு விட்டு விட்டு போக வேண்டியது தானே, பெரிசு!

எதற்காக, Shafie-க்கு துணைப் பிரதமர் அன்வார் என அவரை மேலும் மேலும் சீண்டி அவமானப்படுத்த வேண்டும்?

"Shafie பிரதமர் வேட்பாளர், என் மகன் துணைப் பிரதமர் வேட்பாளர்!" பஞ்சாயத்து முடிஞ்சு, எல்லாரும் கிளம்பு, கிளம்பு! எனக் கூறி விட்டு போயிருக்கலாம்.

அன்வார் பிரதமர் பதவிக்கு சரி பட்டு வர மாட்டார் என நீங்கள் சொல்லி விட்ட பிறகு, எதற்கு துணைப் பிரதமர் பதவியெல்லாம்? அதைத் தான் 27 ஆண்டுகளுக்கு முனே அவர் அனுபவித்து விட்டாரே!

அன்வாரை மலாய்காரர்கள் பிரதமராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், துணைப் பிரதமராக மற்றும் ஏற்றுக் கொள்வார்களா?

அரசியலில் ஜூனியரான Shafie-க்கு கீழ் மட்டும் நீங்கள் அன்வாரை வைக்கவில்லை, அவரை விட கத்துக் குட்டியும், இத்தனை நாளும் உங்கள் நிழலிலேயே இருந்து, அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கத் தவறி, கட்சியிலிலும் ஆட்சியிலும் தோல்வி கண்டு வரும் முக்ரிசுக்கு நிகராக அன்வாரைக் காண்பித்திருக்கிறீர்கள்.

கேட்டால் ஆட்சியைக் கைப்பற்ற இதுவே யுக்தி என்பீர்கள்! 

யுக்தி மட்டுமே இருந்து பயனில்லை; அதற்கெல்லாம் சக்தியும் கூடவே வர வேண்டும். உடல் சக்தியை சொல்லவில்லை; கட்சி / அதிகாரத்தை சொல்கிறேன்.

உங்களுக்கு கட்சி இல்லை ( கேள்விக் குறி ?) மகனுக்கும் பதவி போயாச்சு! இந்த நிலையிலும் நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் உங்களுடன் வர உங்கள் கூட்டணியில் 2 கட்சிகள் தயாராக இருக்கின்றன. ( எப்படி திடீரென மாறின என்பது தான் வியனுக்கு இன்னமும் ஆச்சரியமாக உள்ளது)

நாளையே, வேறு வழியின்றி PKR-ரும் உங்கள் பக்கம் வரலாம்....

ஆனால், மக்களும் வால் பிடித்து வந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். 

இன்றையத் தேதிக்கு மலேசியர்களிடம் அதிகளவில் வெறுப்பைச் சம்பாதித்து இருப்பவர் யாரென்று கேட்டால் , எல்லாரும் சட்டனெ சொல்லி விடுவார்கள்.

நீங்கள் முதல் முறை பிரதமரானதில் இருந்து உங்களின் தீவிர ஆதரவாளனாக இருந்த என்னையே இப்படி பேச வைக்கிறீர்கள். 

எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் ஏன் இப்படி கெடுத்துக் கொள்கிறீர்கள் என்ற ஆதங்கம் தான்!

எவர் தடுத்தாலும் இப்போதும் தைரியமாகச் சொல்வேன் - நீங்கள் 'சாணக்கியர்' தான் என்று!

ஆனால், அந்த 'வீம்புக்கார' சாணக்கியர் ஒரேடியாக சறுக்குகிறாரே என #வியன் வியக்கிறான் !

ஏதோ பார்த்து செய்யுங்க பெரிசு !

No comments: