அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 22 July 2020

ஓரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது!

'யானை வரும் பின்னே, மணியோசை வரும்  முன்னே' என்பது போல, பின்னால் நடக்கப் போவதை இப்போதே காதில் போட்டு விட்டுப் போகும் வகையில் செய்தி வந்திருக்கிறதோ?

15-ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த 'முக்கியப் புள்ளி' ஒருவர் பேசியிருக்கிறார். 


அவர் எந்தளவுக்கு முக்கியப் புள்ளி என்பது இருக்கட்டும் ( அட முன்னாள் மக்கள் பிரதிநிதிங்க) வந்த செய்தி தான் முக்கியம். 

யாரோ எவரோ எதையோ சொல்லி விட்டுப் போகிறார், அவர் என்ன கட்சித் தலைவரா? அதற்கெல்லாமா react செய்வது என நினைக்கலாம். 


இப்படி பல சந்தர்ப்பங்களில் அலட்சியமாக இருந்து கோட்டை விட்டவர் பலருண்டு. 


" நாங்கள் உங்கள் மீது பாசம் வைத்திருக்கிறோம். எனவே, போட்டியிட வேண்டாம். தேர்தல் முடிந்தப் பிறகு, சபாநாயகரோ, செனட்டரோ, அல்லது அமைச்சரவையில் இடமோ தருகிறோம்!"

நம்பவில்லையா?  ↠ சொடுக்கவும் 


2018 பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்கட்சியான தேசிய  முன்னணி, பரம வைரியான பாஸ் கட்சியுடன் இணங்கிப் போய், கைக் கோர்த்த போதே,  உள்ளபடியே இது #வியன் ஏறக்குறைய எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் இத்தனை சீக்கிரமாக நடக்கும் என நினைக்கவில்லை.

அதுவும் அவர் பயன்படுத்தியிருப்பது "தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால், ம.இ.காவுக்கு அது மரியாதையாக இருக்கும்!" எவ்வளவுப் பெரிய வார்த்தை?


அதாவது என்ன சொல்கிறார் என்றால், "வீம்புக்குப் போட்டியிட்டு, இருக்கும் ஓரிடத்தையும் இழந்து விடாதீர்கள்!"
இது அவரின் சொந்தக்  கருத்தா, அல்லது மேலிடம் சொல்ல சொன்ன கருத்தா? என்ற கேள்வியை வியன் உங்களிடமே விட்டு விடுகிறான். ஏன் என்றால், நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் அல்லவா?

இரு நாட்களுக்கு முன்னர் தான் இன்னொரு செய்தி வந்தது. அம்னோவின் நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி....

அதாகப்பட்டது,

அடுத்தப்  பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் MCA, 22-28 இடங்கள் வரை போட்டியிடும் என்று... அதாவது 14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 39 இடங்களை விட 10-15 இடங்கள் கம்மியாக. ( இது MCA தலைவர்களுக்கே தெரியுமா என தெரியவில்லை). 

MCA-வுக்கே அந்த நிலை என்றால், ம.இ.கா ? என வியன் வாயை திறந்து மூடுவதற்குள் 'ஆப்பு' அடுத்த வரியில் வந்தது...

ம.இ.காவுக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகள் தான் என்று! ( என்னப்பா, கடந்த பொதுத் தேர்தலில் 9-ல் போட்டியிட்டு வென்ற 2 தொகுதிகள் தான் என முடிவே பண்ணி விட்டீர்களா? )

கேமரன் மலையை விட்டுக்  கொடுத்ததால் தப்புக் கணக்குப்  போட்டு விட்டீர்களோ?

அந்தச் செய்தியையே பலர் படித்திருக்க மாட்டார்கள்; அதற்குள் இப்போது புதிதாக இது. இரண்டு கூட எதற்கு, பேசாமல் ஒதுங்கிக் கொள்ளுங்களேன் மரியாதையாக என்று சொல்லியிருக்கிறார் இவர்.


அதற்கு அவர் கூறும்  காரணம் என்னவென்றால், அப்படியொன்றும் கேட்டால் புல்லரித்து விடும் வகையறா அல்ல. அதே அரிதப் பழசான... "இந்த நாட்டில் எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் இந்தியர்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக இல்லை. ஏறக்குறைய 10 விழுக்காடு தான். இந்த நிலையில் அவர்களைப்  போய் நிறுத்தினால், மலாய்க்காரர்களின் வாக்குகள் எப்படி கிடைக்கும்? அரசியல்வாதிகள் திறந்த மனதுடன் தியாக மனப்பான்மையைக்  கொண்டிருக்க வேண்டும்"


"கவலைப் படாதீர்கள், தேர்தலில் தான்  போட்டியில்லை. ஆனால், அரசாங்கம் அமைந்ததும் ஒன்றோ அல்லது இரண்டு முழு அமைச்சர்களையோ, சில துணை அமைச்சர்களையோ நியமித்துக் கொள்ளலாம். இருக்கவே இருக்கிறது செனட்டர் பதவி" என அவர் தொடருகிறார்.  

"ஆனால், MCA போட்டியிடலாம். சீனர்கள் பெரும்பான்மையாக உள்ளத் தொகுதிகளில் DAP-யுடன் நேருக்கு நேர் மோதி வெற்றிப் பெற அவர்கள்  போட்டியிட வேண்டும்."

ஐயா சாமி, "போனால் போகட்டும், எதையோ தட்டில் வைத்துப் போடுவது" போல் அல்லவா இருக்கிறது உங்கள் பேச்சு?

தேசிய முன்னணியின் கோட்பாட்டையே சிதைக்குறீரே?

இன்பத்திலும் துன்பத்திலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கூடவே இருக்கும் உற்றத் தோழனுக்கு நீங்கள் செய்யும் கைமாறா இது? அந்த உற்றத் தோழனின் தோல்விக்கும் சறுக்கல்களுக்கும் ஒருவகையில் நீங்களும் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

சிறுபான்மை இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சியாக உங்களுடன் வைத்துக்  கொண்டு, நேரம் பார்த்து அடிப்பது நன்றாகவா இருக்கிறது?

Friends படத்தில் மூன்று இணைப்பிரியா நண்பர்களும் கைக் கோர்த்து நடந்து வருவதைப் போல் பொதுவில் காட்டிக் கொண்டு, பின்னாடி இந்த வேலையைப் பார்ப்பதா?

2018 பொதுத் தேர்தல் தோல்வி என்பது ஒட்டுமொத்த தேசிய முன்னணியின் 60 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கே கிடைத்த மரண அடி. மேலே நஜீப் தொடங்கி கீழே கடைநிலை வேட்பாளர் என மொத்தமாக சாய்ந்தார்கள். எல்லா பக்கமும் பிரச்னை தூக்கி அடிக்க, சரிந்தது சாம்ராஜ்யம்.

அம்னோ தோற்றால், அது மும்முனையால் ஏற்பட்டது? ம.இ.கா தோற்றால், அதன் பலமே அவ்வளவு தான் ! அப்படியா?

இப்போது நிலைமை அப்படி அல்ல. 2 வருடங்களுக்குள் ஆட்சிக் கட்டிலுக்குள் திரும்பி விட்டீர்கள். தேரை வேறொருவர் செலுத்தினாலும், பின்னால் தனிப் பெரும் கட்சியாக இருப்பது நீங்கள் தான்.    

சரி இப்படி எல்லாம் வியூங்கள் வகுக்கப்படுவது ( ஒரு பேச்சாகவே இருக்கட்டுமே) எல்லாம் எதற்காக? வேறு எதற்காக, புதியக்  கூட்டாளிகளுடன் சமப் பங்காய் தொகுதிகளைப்  பிரித்துக் கொள்வதைத் தவிர?

#MuafakatNasional என்ற பெயரில் பாஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த அம்னோ, முன்பெப்பொழும் இல்லாத வகையில் இம்முறை அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. சபா-சரவாக் கட்சிகள் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துச் சென்று விட்டது, அதற்கு இன்னும் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டது. தீபகற்பத்தில் 11 தொகுதிகளில் போட்டியிட்டு வந்த கெராக்கானும் போய் விட்டது. ஆக எல்லா பக்கமும் அம்னோவுக்கு இலாபம் தானே!



ஆனால் அந்தக் கணக்கு, மார்ச் மாத ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சற்று ஆட்டம் கண்டிருக்கிறது என்பது தான் உண்மை. இப்போது BERSATU-வும்,  கூடவே ஆட்சி மாற்றத்திற்கு பெரிதும்  உதவிய Azmin Ali-யும் வந்து விட்டார்கள். பிரிந்து போன சபா-சரவாக் கட்சிகளும் #PerikatanNasional உறுப்புக் கட்சிகளாக (அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும்) வந்து விட்டன. இதில் GPS கண்டிப்பாக 20 தொகுதிகளுக்கும் குறைவாக வாங்காமல் விடாது. சபாவிலும் அப்படித் தான். 

ஆக, அம்னோ போட்ட கணக்கு பிணக்காகி விடும்  போலிருக்கிறது. திடீர் தேர்தல் வந்தால் முகிதின் யாசினே பிரதமர் வேட்பாளர் என்ற பட்சத்தில், பெர்சாத்துவுக்கும் கணிசமான தொகுதிகளை ஒதுக்கியாக வேண்டும்.  என்னதான் பக்காத்தானில் போட்டியிட்ட 56 தொகுதிகள் இம்முறை பெர்சாத்துவுக்கு கிடைக்காது என்றாலும், குறிப்பிட்ட தொகுதிகளைக் கொடுத்தே ஆக வேண்டும். முகிதின் செல்வாக்கு பெரிக்காத்தானுக்கு அல்வா மாதிரி. ஒதுக்கிட முடியாது. 


இதில் சிக்கல் என்றால், கடந்தப் பொதுத் தேர்தலில் அம்னோ, பெர்சாத்து, பாஸ் ஆகிய மூன்றும் தான் முக்கால்வாசி இடங்களில் மும்முனைப் போட்டியில் இறங்கின. ஆக, இவர்களுக்குள் இப்போது சீட்டைப் பிரித்துக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல ( அது பெரிய பஞ்சாயத்தில் தான் போய் முடியும், பாருங்கள்) 

சபா - சரவாக் கட்சிகளையும்  பகைத்துக் கொள்ள முடியாது. சுளையாக 57 தொகுதிகள் அங்கிருந்து வருகின்றன.

ஆக, யார் மடியில் கை வைப்பது என்ற முடிவுக்கு வரும் போது, கண்ணில் படுவது வேறு யாராக இருக்கும்? மசீச - மஇகாவைத் தவிர? 

"2008 பொதுத் தேர்தல் தொடங்கி உங்களால் தான் எங்களுக்கு வீழ்ச்சி,  நாங்களாவது தட்டுத் தடுமாறி சீட்டுகளை வெல்கிறோம். நீங்கள்? எனவே பழைய கதையெல்லாம் இங்கு எடுபடாது! கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையென்றால் நடையைக்  கட்டுங்கள்!" என்ற ரீதியில் சூழ்நிலை போகவும் வாய்ப்பு உண்டு.

அதன் முன்னோட்டமாகத் தான், இந்த 2 சீட்டு கதை, சீட்டே இல்லை என்ற தகவல்கள் அங்கும்  இங்குமாக  முளைக்கின்றன.

புரிந்தவன் பிஸ்தா! 

#வியன் சொல்ல வருவது என்னவென்றால், அரசியலில் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உரிமை என வரும் போது பேசித் தான் ஆக வேண்டும்.

வியன் ஏற்கனவே சொல்லி வந்திருப்பது போல, யார் ஆட்சி அமைத்தாலும் நமது பிரதிநிதித்துவம் முக்கியம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சில மாநிலங்களிலும் ஆட்சி மாறிய போது, அரசு ஆட்சிக் குழுவில் நமக்கு ஆள் இல்லை என்பதை கவனித்தீர்களா?

ஆக, எண்ணிக்கை முக்கியமல்ல, என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்ற பொதுவான வாதம், எல்லா நேரத்திலும் எடுபடாது. இந்த விஷயத்திலும் அப்படித் தான்.

9 சீட்டுகள் அதிரடியாகக் குறைந்து 2-ல் வந்து நின்றால் என்னாவது? பறிபோன அல்லது விட்டுக் கொடுத்த அந்த 7 சீட்டுகள் திரும்பக் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தாலும் அது எப்போது? 60 ஆண்டுகளுக்குப் பிறகா?

ம.இ.கா தானே, அது ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன என்றும் இருந்து விட முடியாது. காரணம், பெரிக்காத்தான் நேஷனலோ அல்லது பழைய பாரிஷான் நேஷனலோ வெற்றிப் பெற்று தொடர்ந்து ஆளுங்கட்சியில் அவர்கள் இடம் பெற்று வந்தால், வெறும் 2 சீட்டுகளை வைத்துக்  கொண்டு என்ன செய்வது? (அது கூட அந்த இரண்டிலும் வெற்றிப் பெற்றால் தான் உண்டு!)

அப்படியொரு நிலைக்கு ம.இ.கா போகாது, தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என வியன் நம்புகிறான். 

இந்தச் செய்தியில் வந்தது போல், இரண்டை மட்டுமே பெற்றுக் கொண்டால், கட்சியினருக்கு பதில்? உதவித் தலைவர்கள் போக, இளைஞர் மகளிர் பிரிவுகளுக்கும் தொகுதி வேண்டுமே!

ஆக, விழிப்போடு இருப்பது நல்லது. மேலவைத் தலைவர் பதவி முடிந்து விட்டது. அடுத்த சுற்று எப்போது வருகிறது என்பது தெரியாது.

தேர்தலுக்கு முந்தைய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உறுதியாக நில்லுங்கள். தொகுதி மாறினாலும் பரவாயில்லை, எண்ணிக்கையில் கை வைக்க விடாதீர்கள். உங்கள் கூட்டணி, ஆட்சிக்குத் திரும்புவது தான் குறிக்கோள், அதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார் ; வேறு வழியின்றி இணங்கிப் போகத்தான் வேண்டும் என்ற நிலை வந்தால் ஓரிரண்டு தொகுதிகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காதீர்கள். அது கூட (ஏற்கனவே தேசிய முன்னணிப் பங்காளிக் கட்சிகளுக்குப் பழகிப் போன) நிபந்தனையோடு தான் இருக்க வேண்டும்...அடுத்தத் தேர்தலில் திருப்பித் தரப்பட வேண்டும் என்று!    

என்னடா, ஒன்றுமே இல்லாத விஷயத்தை வியன் ஊதிப் பெரிதாக்குகிறானே என நினைத்து விட வேண்டாம். " A week is a long time in politics" அதாவது அரசியலில் ஒரு வாரம் என்பது கூட மிகப் பெரியக்  காலக் கட்டம் என சொல்லுவார்கள். 

ஆக, எல்லாம் சரியாக நடக்கும், வரும்  போது பார்த்துக்  கொள்ளலாம் என்று விட்டு விட முடியாது. வெறும் ஒரே வாரத்தில் தான் இந்த நாட்டில் ஆட்சியே மாறியது!

தேர்தல் பேச்சு அடிபடும் நேரத்தில், இது போன்ற செய்திகள் வெளிவருவது கண்டிப்பாக பல யூகங்களை எழுப்பத் தான் செய்யும். ஆமா? அப்படியா? ஐயயோ? அப்போ நமக்கு சீட் இல்லையா? என்ற கேள்விகள் தலைவர்களுக்கு மத்தியில் உருவாகத் தான் செய்யும்; தொண்டர்களும் சோர்வடையத்தான் செய்வார்கள்.   

விக்கி, உங்களின் தலைமைத்துவத்திற்கு இது மிகப் பெரிய சவால். இதில் வெற்றிப் பெற்றால், ஒட்டு மொத்தக் கட்சியும் உங்கள் பின்னால் அணி வகுக்கும். தேர்தல் களப்பணியும் செவ்வனே நடைபெறும்.

தேர்தலில் தோற்பதற்கு முன்பே தோற்று விட்டார்களே என்ற அவப்பெயர் வந்து விடக்  கூடாது!

#வியன் நம்பிக்கை இழக்கவில்லை.....

No comments: