அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 2 March 2013

உன்னைப் போல் ஒருவன்....!

ப.அ.சிவம்
பிப்ரவரி 28...மாதத்தின் கடைசி நாள். ஆனால் அதே மாதக் கடைசி என் உடன் பிறவா சகோதரனின் கடைசி நாளாகவும் ஆகிப் போனதே...!

"கடவுளே..இது நியாயமா?  எங்கள் பாசத்திற்குரியவனை அழைத்துச் செல்வதில் அப்படி என்ன அவசரம் உனக்கு?  அதிலும் நீ அழைத்துச் சென்ற விதம் கொடியது...! எங்கள் பாசக் கூட்டணியே இன்னமும் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறது. நம்பித் தான் ஆக வேண்டும் என நீ சொல்கிறாய். என்ன செய்வது...எங்கள் அன்பே சிவமான சிவத்தை உன்னகத்தே வைத்து பாசத்தை பொழிய உனக்கு பொறூமை இல்லை போலும்..! பரவாயில்லை, எங்கள் தோழனை உன் கைப்பிடியில் வைத்துக் கொள்.எங்களுக்கான நேரம் வரும் போது, விட்ட உறவை புத்துப்பித்து கொள்ள எங்களுக்கு வசதியாக இருக்கும்"

சரியாக பத்தாண்டுகள் பின்னோக்கிச் செல்கிறேன். ப.அ.சிவம் என்ற பெயரில் வெளியான கவிதைகளாலும் கட்டுரைகளாலும் ஏற்கனவே ஈர்க்கப்பட்ட எனக்கு அவருடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு. எங்கள் இருவரையும் இணைத்தது  தேசிய பல்கலைக் கழக இந்து பிரதி நிதித்துவச் சபையின் இலக்கியப் பயண விழா. நாங்கள் நடத்திய போட்டியில் அவரின் படைப்புக்கு பரிசு என்ற தகவலை சொல்ல கைப்பேசியில் பேசிய எனக்கு, தவிர்க்க முடியாத காரணம் எனக் கூறி அவரிடம் இருந்து வந்த அன்பான மறுப்பு சிறிய ஏமாற்றமே. இருந்தாலும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, " சரி பின்னொரு நாளில் ஏதாவதொரு தென்னை மரத்திற்கு அடியில் அமர்ந்து சந்திப்போமே. நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியத்தை சுவைப்போம் " என்றூ கூறி வைத்தார். அவர் பேசிய வார்த்தைகளும், பேசிய விதமுமே அவர் ஒரு பண்பாளர் என்பதை அப்போதே புரிந்து கொண்டேன். ஏற்கனவே அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட எனக்கு அவர் மீது தனி மரியாதையே வந்து விட்டது.

பிறகு பல்கலைக் கழக வாழ்க்கை முடிந்த பிறகு, அடிக்கடி என்றில்லா விட்டாலும், அவ்வப்போது இலக்கியச் சந்திப்புகளில் சந்தித்துக் கொள்வோம். 'தென்றல்' இதழின் மாதாந்திர இலக்கியச் சந்திப்புகளில் நண்பர்கள் வட்டத்துடன் இலக்கியச் சுவையை பகிர்ந்து கொள்வோம். டாக்டர் ஷண்முகசிவாவின் கிளினிக்கிலேயே கூட சிறிய அறையில் இலக்கியம் பருகியதை மறுக்க முடியாது. தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் எங்கள் உறவுகள் தொடர்ந்தன. எங்கள் கூட்டணியில் முக்கியமானவர் ம.நவீன். மிக இள வயதிலேயே சங்கத்தின் உதவித் தலைவர் பொறுப்பை அலங்கரித்தார் சிவம்.... இடையில் சிறூ இடைவெளி...!

அவர் மலேசிய தொலைக்காட்சியில் தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்ற சென்று விட்டார்; நான் தனியார் வானொலியில் செய்தி வாசிக்க வந்து விட்டேன். அமைச்சரின் அரசியல் செயலாளராக அவர் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் அடிக்கடி சந்திக்க வாய்ப்புக் கிட்டியது. இம்முறை களம் வேறு. ஊடகத் துறைக்கும் அமைச்சர் பெருமானுக்கும்  இடையில் அவர் பாலமாக விளங்கினார். அரசியல்+ அரசாங்கம் என்ற புதிய களமானாலும், அவரின் அன்பும் பண்பும் அதிகரித்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை. நான் மட்டுமல்ல மற்ற இன ஊடகவியலாளர்கள் மத்தியிலும் மிகவும் மதிக்கப்பட்டவராக வலம் வந்தார் சிவம்.

" டாஸ்...டாஸ்" இப்படித்தான் என்னை அழைப்பார் சிவம். " நாளைக்கு அமைச்சர் நிகழ்ச்சி இருக்கு, மறக்காம வந்துருங்க டாஸ்" சிவத்திடம் அடிக்கடி வரும் அழைப்புகள். செய்தியாளர் சந்திப்புகளில் எங்களை அவர் வரவேற்று உபசரிப்பதும், வழியனுப்பி வைப்பதுமே தனி அலாதி. எத்தணை பரபரப்பான சூழ்நிலையிலும் அதே புன் சிரிப்பு, முகம் சுளிக்காமை, அடக்கம் என எங்கள் எல்லாருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.  அடடா இப்படியோர் அரசியல் செயலாளார் நமக்கில்லையே என மற்ற அமைச்சர்கள் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்கள் கொஞ்சம் பொறாமையும் பட்டிருப்பார்கள்.

சிவத்தை கடைசியாக நான் பார்த்து கடந்த டிசம்பரில் நடைப்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் போது. அதன் பிறகு அதிகமாக வெளியில் செல்லாததால பார்க்க இயலவில்லை. கடைசியாக பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை எனக்கு குறுஞ்செய்தி வந்தது அவரிடமிருந்து - மறுநாள் அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி....

ஆனால்.... அதுவே அவரிடம் இருந்து வரும் கடைசி குறூஞ்செய்தி என நான் கனவிலும் நினைக்கவில்லை. மறுநாள் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே. இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை....பண்பாளர், தன்னடக்கத்திற்கு இலக்கணமானவர்; கண்ணியம் மிக்கவர் இன்னும் எத்தனையோ பாராட்டுகளுக்கு உரிய சிவம் இன்றூ நம்மோடு இல்லை.  தனிப்பட்ட முறையில் உற்ற நண்பர், உடன் பிறவா சகோதரர், சிறந்த வழிகாட்டியை இழந்து தவிக்கிறேன். ...

இறுதிச் சடங்கில் வீடு வரை வந்தும் உனது முகத்தை பார்க்கும் சக்தி எனக்கில்லை; என்னை மன்னித்து விடு தோழா..! என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்..

இந்த பத்தாண்டு கால நட்பில் உன்னிடம் நான் கற்றூக்கொண்டது அதிகம். அவற்றை இயன்ற மட்டிலும் நடைமுறைப்படுத்துவதே உனக்கு நான் செலுத்தும் மரியாதை.

இனி எனக்கு கிடைப்பானா ஒரு நண்பன் - உன்னைப் போல் ஒருவன்!