பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த
வார எப்பிசோட்டின் போது புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்களைப் போல் கமலிடம் போட்டியாளர்கள்
கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வார task-கில் எந்தெந்த கதாபாத்திரங்களில்
இருந்தார்களோ அதே கதாபாத்திரங்களாக housemates-கள் கமல் முன் இருந்தனர்.
இளையத் தளபதி விஜயாக முகேன்,
'தல' அஜீத்தாக கவின், STR-ராக சாண்டி, நாட்டியப் பேரொளி பத்மினியாக அபிராமி, குஷ்புவாக
ஷெரின், 'அபிநய சரஸ்வதி' சரோஜா தேவியாக மதுமிதா என அனைவரும் தங்களுக்குப் பிடித்த கேள்வியைக்
கேட்க, 'நவரச நாயகி' ரம்யா கிருஷ்ணனாக ரேஷ்மா கமலிடம் சுவாரஸ்யமான ஒரு கேள்வியைக்
கேட்டார்.
" கமல் சார், நேனு ரம்யா
கிருஷ்ணா. Maggie @ ரேஷ்மாவை உங்களுக்குப் பிடிக்குமா? " என்று கேட்க, கமலோ " எனக்கு மேகி ஒரு
பாத்திரம் தான், நீலாம்பரியும் ஒரு பாத்திரம் தான், எனக்கு ரம்யாவை ரொம்ப பிடிக்கும்!"
என்றார்.
Housemates-களின் கைத்தட்டலும்,
வெளியே பார்வையாளர்களின் விசில் சத்தமும் பறந்தது.
"இதுவே என் கட்டளை, என்
கட்டளையே சாசனம்" என ராஜமாதா சிவகாமியாக கர்ஜித்து, இந்தியா மட்டுமின்றி உலக இரசிகர்களையும்
தன் மிரட்டல் நடிப்பால் கவர்ந்தவரை உலகநாயகனுக்குப் பிடிக்காமல் போனால் தானே ஆச்சரியம்?
2003-ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து
நடித்து சக்கைப் போடு போட்ட பஞ்சதந்திரம் படத்தை யாரால் மறக்க முடியும்? 5 'குறுந்தாடி'
நண்பர்களுடன் ஒற்றை ஆளாய் மல்லுக் கட்டி, தனக்கு வில்லத்தனம் மட்டுமல்ல நகைச்சுவையும்
நன்றாக வரும் என நிரூபித்து நம் மனதில் நின்றவர் Maggie. கமலே கூட ஒரு பேட்டியில், "உண்மையில் நாங்கள்
ஐவரல்ல, ஆறு குறுந்தாடிகள், ஆறாவது குறுந்தாடி ரம்யா. என்ன அவருக்கு மீசை தான் இல்லை"
என்றார். அந்தளவுக்கு படத்தில் கமலுக்கு நிகராக ஒவ்வொரு frame-மிலும் நடிப்பில் பின்னியவர்.
அதனால் தான், 'அம்மன்', 'நீலாம்பரி' 'சிவகாமி தேவி' வரிசையில் 'Maggie'-யும் வரலாற்றில்
நின்று விட்டது.
50 வயதைத் தொடவுள்ள ரம்யா , பாகுபலிக்குப்
பிறகு அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பிசியாகி விட்டார். அவருடன் 80-களில் நடித்த
சக நடிகைகள் எல்லாரும் ஒன்று ரிட்டையர் ஆகி விட்டனர் அல்லது வழக்கமான அம்மா, அக்கா,
பாட்டி கதாபாத்திரங்களுக்கு மாறி விட்ட நிலையில், இவருக்கு மட்டும் இன்னமும் மார்க்கெட்
குறையவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான கதாபாத்திரங்கள் இன்னமும் இவரை தேடி
வருகின்றன. தெலுங்கில் சில் கதாநாயகிகளை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார். தென்னிந்தியாவிலேயே
அதிக சம்பளம் வாங்கும் குணசித்திர நடிகை இவராகத் தான் இருப்பார்.
பாகுபலிக்குப் பிறகு, சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில்
கிட்டத்தட்ட கதாநாயகி ரேஞ்சுக்கு கலக்கினர். அழகு மீனா, ஜான்சி ராணி என்ற இரு வேறு
கெட்டப்புகளில் படம் முழுவதுமாக வந்து பாராட்டை அள்ளினார். ஆகக் கடைசியாக விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில்
முன்னாள் ஆபாச பட நடிகை லீலாவாக புதிய பரிணாமத்தில் வெளுத்து வாங்கினார்.
தற்போது மலையாளத்தில் 'ஆகாஷ கங்கா'
பட்டத்தில் மந்திரவாதியாக அவதாரமெடுத்துள்ள ரம்யா, தமிழ்-ஹிந்தி என இருமொழிகளில் தயாராகும்
'உயர்ந்த மனிதன்' படத்தில் போலீவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஜோடியாக நடிக்கிறார்.
90-களில் சுமார் 10 ஹிந்தி படங்களில் நடித்துள்ள ரம்யா, அமிதாப் ஜோடியாக நடித்த 'பாடே
மியான் ச்சோட்டே மியான்' படம் ஹிட்டடித்தது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்று
சேர்வதன் மூலம், மீண்டும் போலிவூட்டில் காலடி வைக்கிறார் 'நீலாம்பரி'.
பஞ்சத்திரத்திற்குப் பிறகு 14 வருடங்கள் கழித்து உலகநாயகனும் மேகியும்
ஜோடி சேர்ந்த படம் ' சபாஷ் நாயுடு'. முழு நீள நகைச்சுவைப் படம். முதல் கட்டப் படப்பிடிப்பு
முடிந்த கையோடு, படம் பாதியிலேயே நிற்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும்
கமலுக்கு ரம்யா தான் ஜோடி. அரசியல், 'இந்தியன் 2' என கமல் பிசியாகி விட்டதால், படப்பிடிப்பு
மீண்டும் தொடங்குமா என தெரியவில்லை.
கமல் முழுநேர அரசியல்வாதியாகி,
சினிமாவை விட்டு விலகுவதற்குள் சபாஷ் நாயுடு படம் வெளிவர வேண்டும். உலகநாயகனும் நவரசநாயகியும்
நடிப்பில் சேர்ந்து கலக்க வேண்டும் என்பதே இரசிகர்களின் ஆசை!
- #வியன்
No comments:
Post a Comment