ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் பூதவுடல் |
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா மரணம் அடைந்து 12 நாட்கள் ஆகி விட்டன. அவரின் மரணம் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவரின் அரசியல் பயணத்தை கவனித்து வந்தவன் என்ற முறையில் என்னையும் அவரின் மறைவு பாதிக்காமல் இல்லை. சற்று கலங்கித் தான் போயிருக்கிறேன். இளவரசி டயானா, பெனாசிர் புட்டோ பெண் தலைவர்களின் மரணங்களுக்குப் பிறகு நான் மிகவும் வாடிப் போனது ஜெயலலிதாவின் மறைவால் தான்.
ஆனால், அவர் மறைந்து விட்டார் என்பதை மனம் இன்னும் ஏற்க மறுக்கிறது. சரி, மறைந்தவருக்கு அஞ்சலி தொடரும் என்பது தான் வழக்கம். ஆனால், ஜெயலலிதா மறைந்த நாளில் இருந்து மர்மங்கள் தான் தொடருகின்றன. நாளுக்கொரு கதை வெளியாகி வருவது கண்கூடு.
அவர் எப்போது இறந்தார்?
எப்படி இறந்தார்? டிசம்பர் 5-ல் தான் மரணமுற்றாரா?
75 நாட்கள் நடந்தது என்ன? மறைக்கப்பட்டது என்னென்ன?
அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்?
சசிகலா தான் கொன்றார்?
....... இப்படியாக பல்வேறு கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.
என்னைப் பொறுத்தவரை, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமில்லை!
அவர் கொல்லப்பட்டார் என்பதையும் இதுவரை நான் நம்பவில்லை!
ஏன் சந்தேகம் இல்லை.....
1. நட்பு கொச்சைப்படுத்தப்படக் கூடாது.
ஜெயலலிதா - சசிகலா நட்பு ஊருக்கே தெரியும். உயிர்த் தோழிகளுக்கு இடையிலான அந்த நட்பை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. 32 ஆண்டுகள் உடன் இருந்து சுக துக்கங்களில் பங்கெடுத்து, சிறை சென்று ( அவர் சிறை சென்றதுக்கு சசிகலா குடும்பமும் முக்கியக் காரணம் என்பது வேறு கதை) பரஸ்பரம் பாராட்டியுள்ளார் சசிகலா. ஜெயலலிதாவும் சசிகலாவை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. 2011 இறுதியில் வீட்டை விட்டு துரத்திய போதும் , சில மாதங்களிலேயே மன்னித்து ஏற்றுக் கொண்டார். அன்றில் இருந்து அம்மாவும் சின்னமாவுமாகத் தான் வலம் வந்தார்கள். நாட்டைக் காக்க போனவரின் வீட்டைக் காத்த பெருமாட்டி. ஜெயலலிதாவின் தனிப்பட்ட தேவைகளுக்கு இதுகாறூம் உறூதுணையாக இருந்தவர். வீட்டில் மயங்கி விழுந்தவரை மருத்துவமனையில் 75 நாட்கள் வைத்து உயிரைக் காப்பாற்றித் தான் சசிகலா போராடியிருக்க வேண்டும்.
ஏனென்றால் அவர் வாழ்ந்தால் தான் அவருடன் சேர்ந்து இவரும் வாழ முடியும். எனவே மர்மமான முறையில் சாகடித்து, சுகமாக வாழ்ந்து விட திட்டம் போட்டார் என்பதெல்லாம் அவதூறூகளே.
நட்பைக் கொச்சப்படுத்தி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் ரகம் அல்ல சசிகலா. இப்போது கூட, '75 நாட்கள் கதை'க்குப் பிறகுத் தான் சசிகலா வில்லியாகப் பார்க்கப்படுகிறார். அது கூட ஏனென்றால் யாரையும் பார்க்க விடவில்லை, படத்தை வெளியிடவில்லை என்பது போன்ற காரணங்களுத் தான். இல்லையென்றால்... ?
இன்று அண்ணன் மகள் எனக் கூறிக் கொள்ளும் தீபாவை ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை ஒன்றாக பார்த்திருக்கிறோமா? ஜெயா வாழும் காலத்திலேயே அவருடன் நெருங்க முடியாதவர். ஜெயலலிதாவுக்கும் அண்ணன் குடும்பத்துக்கும் ஆகாது. முன்பொரு முறை பிரச்னை வந்து உறவு பாதிக்கப்பட்டு விட்டது. இன்று ஜெயலலிதா போன பிறகு, என்னை ஒதுக்குகிறார்கள், சசிகலா குடும்பம் தான் அதற்கு காரணம் எனக் கூறி பேட்டி கொடுப்பதெல்லாம் படிப்பவர்களுக்கு வேண்டுமானால் ருசியாக இருக்கலாம். ஆனால் என்னால் அதை ரசிக்க முடியவில்லை. இத்தனை ஆண்டு காலம் ஜெயலலிதாவாலேயே ஒதுக்கப்பட்டவர் அல்லது புறக்கணிக்கப்பட்டவர் தான் தீபா. இன்று என்னவோ சசிகலா தான் அவரை திட்டமிட்டு ஒதுக்குகிறார் என பேசினால் எப்படி? அத்தையின் கடைசிக் காலத்தில் தான் அத்தை மேல் பாசம் வந்ததா? உண்மையிலேயே பாசம் என்றால் பிறகேன் சொத்துகள் எல்லாம் ரத்த சொந்தங்களுத்தான் வர வேண்டும், என்னை அடுத்த தலைவியாக தேர்ந்தெடுங்கள் என்றெல்லாம்தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்குறீர்கள் ?. தீபாவை ஒதுக்கி வைத்து விட்டு சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நிலை சசிகலாவுக்கு இல்லை. 16 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா தனது ரத்த சொந்தங்களுக்கு சொத்துகள் போய் சேரும் வகையில் உயில் எழுதி வைத்து விட்டார் என்றே தகவல்கள் வந்துள்ளன. எனவே சொத்துக்காக சசிகலா உயிர்த் தோழியை கொலை செய்வார் என நான் நினைக்கவில்லை. அதன் பின் விளைவுகளை யோசித்துப் பார்க்காமல் இருப்பதற்கு சசிகலா 'மக்கு' அல்ல.
3. சொத்துக் குவிப்பு வழக்கு
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் தலையின் மேலே தொங்கும் கத்தியாக இன்னமும் நீடிக்கிறது. அவர்களின் விடுதலைக்கு எதிராக அரசு தரப்பு செய்த மேல்முறையீடு தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதா இறந்து விட்டார் என்பதால் அவர் மீதான வழக்கு கை விடப்படலாம். ஆனால் மற்ற மூவரின் நிலை? பாதகமான முடிவு வரும் பட்சத்தில் மீண்டும் சிறை தான். எனவே, ஜெயலலிதா உதவி இல்லாமல் அதில் இருந்து தப்பிக்கும் வலிமையை சசிகலாவும், அவரின் அண்ணி இளவரசியும், தினகரனும் கொண்டிருக்கவில்லை. ஜெயலலிதா இல்லாவிடில் அவ்வழக்கை எதிர்கொள்ளும் நிலையில் அம்மூவரும் இல்லை என்பதே நிதர்சனம். ஜெயாவை அனுப்பி வைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விடும் தைரியம் சசிக்கு இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கை வைத்தே தன்னை மூட்டைக் கட்டி விடுவார்கள் என்ற பயம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே, 'அக்கா' வை கொலை செய்து விட்டு தான் மட்டுமே சிறை செல்ல அவர் என்ன தியாகியா?
4. சாத்தியமற்ற சதிவலை
சாதாரணாமாக சதிவலை பின்னவே போராட வேண்டியுள்ள நிலையில், ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர், அதுவும் ஆண்களே பயப்படும் சக்தி வாய்ந்த பெண்ணின் உடல் நிலையில் சதுரங்கம் விளையாடுவது இன்று நாமெல்லாம் பேசிக் கொள்வது போல் அவ்வளவு சாதாரணம் கிடையாது. அதற்கு ஒரு பெரிய கட்டமைப்பே (network) வேண்டும். ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்று விட்டு மக்களிடத்தில் அதை மறைப்பதென்பது இயலாத காரியம். போயஸ் தோட்ட சமையல்காரர் முதல், அப்போலோ மருத்துவமனை தாதியர் , மருத்துவர்கள், அதிமுக அமைச்சர்கள், பிரதமர் மோடி வரை ஒத்துழைக்க வேண்டும். ஒரு குண்டூசி அளவுக்குக் கூட விஷயம் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும். 75 நாட்கள் அப்படியொரு நாடகத்தை அரங்கேற்றுவது கொஞ்சமும் சாத்தியமில்லை. உண்மையிலேயே அப்படி ஏதும் நடந்திருந்தால் இந்நேரம் இம்மி அளவுக்காவது விஷயம் கசிந்திருக்கும். அதிலும் நரேந்திர மோடி இதில் தலையிட்டு தன் பெயரை கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு புத்திசுவாதீனமற்றவர் அல்ல. ஆக, எல்லாரும் கூட்டு சேர்ந்து சதி செய்தே ஜெயலலிதாவை கொன்றிருக்கார்கள் என்பதை ஏற்பதற்கில்லை. அப்படி கொன்றிருந்தால் இந்நேரம் வெளியில் அவர்களால் நடமாட முடியாது.
5. ஜெயலலிதாவின் 'இமேஜ்'
அரசியல் களத்தில் சிங்கமாக வலம் வந்தவர் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். மக்கள் மத்தியில் கடைசி வரை அவர் பாதுகாத்து வந்தார். எனவே, மருத்துவமனையில் உடல் நலம் குன்றி தான் இருக்கும் காட்சிகளை மக்கள் பார்ப்பதை ஜெயலலிதாவே விரும்பியிருக்க மாட்டார். அதிலும் அவர் முன்னாள் நடிகை. ( ஏன் பலருக்கு நினைவிருக்கிறதா என தெரியவில்லை.... 2006-ல் நடிகை ஸ்ரீ வித்யா புற்றுநோயால் காலமான நேரம். இளமைக் காலத்தில் அவர் எப்பேர்ப்பட்ட அழகு என எல்லாருகும் தெரியும். ஆனால், புற்றுநோய் பாதிப்பால் முடிகள் உதிர்ந்து, உடல் மெலிந்து, முகம் சுருங்கி போனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் உயிருக்குப் போராடிய கடைசிக் காலத்தில் யாரையும் அவர் சந்திக்கவில்லை; பார்க்கவும் விடவில்லை. கமலஹாசனை மட்டுமே அழைத்துச் சந்தித்துப் பேசியவர், கேரளாவில் தனியாகத் தான் உயிரை விட்டார். அழகு குறைந்து போயிருக்கும் தன்னை யாரும் அந்த கோலத்தில் பார்த்து விடக் கூடாது என்பதில் அவர் கடைசி வரை உறூதியாக இருந்தார். ஏன், அவரின் இறுதிச் சடங்கு படங்கள் கூட வெளியிடப்படவில்லையே) அது போல் தான் ஜெயலலிதா தன் படத்தை வெளியிட மறுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் , கோமா நிலைக்குப் போகும் முன்னரே, அது போன்ற கண்டிஷன்களைப் போட்டிருக்க வேண்டும். சர்க்கரை வியாதி முற்றி ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டதாக இப்போது செய்திகள் வருகின்றன. அவை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால், உண்மையாக இருகும் பட்சத்தில், நீங்களே யோசித்துப் பாருங்கள், இரு கால்கள் இல்லாமல் சக்கர நாற்காலியில் தான் அமர்ந்துள்ள காட்சியை மக்கள் பார்ப்பதை அவர் எப்படி விரும்புவார்? அதை அவரால் ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா? எனவே, படத்தை ஏன் வெளியிடவில்லை? அப்படியானால் எதையோ மறைக்கிறார்கள்! என்றெல்லாம் முடிவுக்கு வந்து விட முடியாது. அதற்காக எம்.ஜி.ஆர் கதையை இங்கே கொண்டு வர முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவாகவே இதைக் கருதுகிறேன்.
எனவே, எனக்கு மரணத்தில் சந்தேகமில்லை.....
ஆனால், மக்கள் சந்தேகப்படும் படியான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால் தான் பொதுவாக பலருக்கு சந்தேகங்கள் எழுகின்றன. அதுவும் நியாயமே, குறை சொல்வதற்கில்லை! அவற்றுக்கு விடை கிடைத்தால் கொஞ்சமாவது தெளிவுப் பிறக்கும். ( கிடைக்காது என்பது வேறு விஷயம்)
1. மாற்றமில்லாத உடல்
75 நாட்கள் மருத்துவமனையில் அதுவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றவரின் உடல் கொஞ்சம் கூட மெலியவில்லையே. பெருவாரியான நாட்களில் திரவ உணவையே உட்கொண்ட 68 வயது பெண்மணியின் உடல் எடையில் மாற்றத்தையே காணமுடியவில்லையே. இறுதிச் சடங்கில் பங்கேற்று வந்த பலர் இதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றனர்.
2. கன்னத்தில் 4 துளைகள் !
உடல் கெடாமல் இருக்க தலைவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் முறைதான். ஆனால், இரண்டு மூன்று நாட்களோ அல்லது ஒரு வாரத்திற்கோ இறுதி மரியாதைக்காக கிடத்தி வைக்கப்படும் பட்சத்திலே அம்முறை பயன்படுத்தப்படும். ஆனால் மருத்துவமனையின் தகவலின் படி முதல் நாள் இரவு 11.30 மணிக்கு இறந்த ஜெயலலிதாவின் உடல் மறுநாள் மாலையே நல்லடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டு விட்டது. 24 மணி நேரங்கள் கூட ஆகாமலேயே உடலை நல்லடக்கம் செய்ய முடிவெடுத்த போது, Embalming செய்ய வேண்டிய அவசியம் வந்ததென்ன? சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால் எதற்காக என்று தெளிவுப்படுத்தினால் சிறப்பு.
3. ஜெயலலிதாவின் பதவியை நிரப்ப என்ன அவசரம்?
அது உங்கள் கட்சியின் உள்விவகாரம். யாரை வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக்குங்கள், அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுங்கள். யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் அவர் இறந்த இரண்டாவது நாளிலேயா அதைப் பற்றி பேசுவது? ஏன் குறைந்தபட்சம் அரசு அறிவித்த ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கபப்ட்ட பிறகாவது அதைப் பற்றி பேசியிருக்கலாமே! வரிசையாக போஸ் கார்டனுக்கு தலைவர்களும் நிர்வாகிகளும் படையெடுப்பது, சசிகலாவை தலைமையேற்குமாறு வலியுறுத்துவது, அறிக்கை விடுவது, ஜெயா டிவியில் தலைப்புச் செய்தியாக அதனை இடம் பெறச் செய்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவது ஏன்? என்னமோ அடுத்த மாதமே தேர்தல் வருவது போல் எல்லாமே அவசர அவசரமாக நடைபெறுவது ஏன்? தலைவர்கள் சொல்லி விட்டால் தொண்டர்களுக்கு வேறு வழியில்லை, ஏற்று கொண்டுதான் ஆக வண்டும் என்ற நினைப்பா? அறிஞர் அண்ணா இறந்தவுடனேயே கருணாநிதி முதல் அமைச்சராகவில்லை. அது போல் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக மட்டும் தான் இருந்தார். காரியங்கள் முடிந்து ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார். ஆனால், ஜெயா இறந்த சில மணி நேரங்களிலேயே பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஜெயலலிதா சிறை சென்ற போது கண்ணீரும் கம்பலையுமாய் பதவியேற்றவர்களின் கண்களில் இம்முறை ஒன்றையும் காணோம். அதுவே மக்களின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஆக, ஜெயலலிதா எப்போது போவர் என காத்திருந்து, இப்போது பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள் என்ற கருத்து வருவதில் தவறில்லையே! நிதானம் தவறியதால் இதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
4. அண்ணன் மகள் தீபா
அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அத்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டதே. காரணம் என்ன? அத்தைக்கும் மருமகளுக்கும் இடையில் பிரச்னை என்றே வைத்து கொள்வோம். ஆனால், இறுதிச் சடங்கில் அண்ணன் மகன் தீபக் பங்கேற்றாரே? அண்ணன் மகளுக்கு அனுமதி இல்லை, மகனுக்கு இறுதிச் சடங்கு செய்ய அனுமதி. இங்கும் கேள்வி எழுவதில் வியப்பில்லை. அண்ணன் மகனுக்கே ஜெயலலிதாவின் சொத்துகள் போகுமென்றும், எனவே அவரை சரி கட்டி விடத் தான் அப்படியோர் ஏற்பாடு என்ற வாதத்தையும் முன் வைக்கிறார்கள். அதே சமயம், இதுவரை வெளிவராத தீபக்கிற்கு அத்தை பாசம் எங்கிருந்து வந்தது என வைக்கப்படும் கேள்வியும் நியாயமே! அண்ணன் மகள் வேண்டாம், மகன் வேண்டும்! சசிகலா விளக்கினால் தான் உண்டு.
ஆக, ஜெயலலிதாவின் மரணம் சோகத்தை விட்டுச் சென்றதை விட ஒரு பெரும் விவாதக் களத்தையே ஏற்படுத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
சமயம் பார்த்து இதில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் அரசியல்வாதிகளும் உண்டு. அது அவரவர் சாமார்த்தியம். !
உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரலாம் ; வராமலே கூட போகலாம். ஆனால், மர்மங்கள் தொடரத் தான் போகின்றன.
எந்த நேரத்திலும் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகலாம், ஏன் அடுத்த மாதமே கூட அவர் முதல் அமைச்சர் அவதாரம் எடுக்கலாம். ஆனால் ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத வரை சசிகலாவுக்கு 'வில்லி' பட்டம் நிரந்தரமாகலாம்.
எது எப்படியோ சசிகலாவுக்கும், தீபாவுக்கும் , மர்மங்களுக்கும் முடிச்சுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஜெயலலிதாவை யாரும் மறக்காமல் இருந்தால் சரி தான்!
-முற்றும்
மோகனதாஸ் முனியாண்டி #சிந்தித்தவேளை
No comments:
Post a Comment