அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 24 January 2017

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!



மெரினாவில் வரலாறாய் தொடங்கிய ஒரு வரலாறு மாபெரும் வரலாறாய் முடிவுற்றிருக்கிறது.
உலகத் தமிழன் ஒவ்வொருவனும் மார்தட்டிக் கொள்ளும் தருணம் இது.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடியதைக் காண நம்மில் பலருக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
ஆனால், 70 ஆண்டுகளில் காணக் கிடைக்காத அது போன்றதொரு மாபெரும் அமைதிப் புரட்சியை கடந்த 7 நாட்களில் கண்ட பெருமை நமக்கெல்லாம்.
அந்த அறப்போராட்டத்தை மாணவ-இளைஞர் சமுதாயம் முன்னெடுத்துச் சென்றதே கூடுதல் பெருமை.
சில நூறில் தொடங்கி 7 லட்சம் பேர் வரை எட்டி 8 கோடி உலகத் தமிழினத்தைக் கட்டிப் போட்ட ‘யாகம்’ அது!


அரசியல்வாதிகளையும், திரைப் பிரபலங்களையும் கடைசி வரை அருகில் வர விடாது, எடுத்த கொள்கையில் உறுதி காத்த தனித்துவவாதிகள் நீங்கள்.
இத்தனை நாளும் அரசியல் கட்சிகளாலும், சாதி சங்கங்களாலும் பிரிந்திருந்த, பிரித்து வைக்கப்பட்ட தமிழினம் ‘ தமிழண்டா’ என்ற ஒரே குரலில் அதுவும் உரத்த குரலில் ஓரணியில் திரண்ட அதிசயம்!
உங்களைப் பிரித்து வைத்தவர்கள் இனி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் உங்களை மனதில் வைத்து தான் அமையும்.
தன்னிச்சையாக செயல்பட்டால் பிறகு என்ன நடக்கும் என்பதை இந்நேரம் அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
சொந்த நாட்டிலேயே பல நூறு பிரச் னைகள், இதில் தமிழ்நாட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என்று வரிந்து கட்டியவர்களையும், ஒரு கட்டத்தில் பின் வாங்கச் செய்த வலிமை இந்த மெரினா புரட்சிக்கு உண்டு!
வெறும் போராட்டமா அது? இல்லை, கலாச்சாரத் திருவிழா! கண்ணியமான பெருவிழா!
ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய கூட்டம், இன்னொரு பக்கம் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் என களைக் கட்டியது.
கட்டிளம் காளைகளுக்கு ஆதரவாக பெருந்திரளாக குவிந்த பெண்களைச் சகோதரியாக, தாயாக, மகளாக பாவித்து, பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து கண்ணியத்துக்கு அர்த்தம் கூறியது இளைஞர் பெரும்படை!


இதாண்டா தமிழன் என்று மார்தட்டியதை விட, நம் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்த காட்சி அது.
உலகில் 7 வயது பிள்ளை முதல் 70 வயது மூதாட்டி வரை கலாச்சார மீட்டெடுப்புக்காக கரம் கோர்த்த காட்சி வேறு ஏது?
ஜல்லிக்கட்டு விவகாரம் உலகத் தமிழினத்திற்கு உணர்த்தும் பாடம் பல….
மொத்தமாக இல்லையென்றாலும் அவற்றில் எடுத்துக் கொள்வோமே சில!
நிலத்தால் தேசத்தால் வேறுப்பட்டாலும் பலத்தால் நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம்!
என்றும் இல்லாத அளவுக்கு உலகத் தமிழினம் அசுர வலிமைப் பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன்.


மெரினா சிங்கங்களே,
உங்களால் தான் இது சாத்தியம், இது தமிழின ஒற்றுமையின் சத்தியம்!
வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட உங்களை #சிந்தித்தவேளை சிரம் தாழ்த்தி வணங்குகிறது!

Thursday, 19 January 2017

உணர்வால் ஒன்றிணைந்தோம் !



உங்க வீட்டுலேயே ஆயிரத்து எட்டு பிரச்னை.
இதுல ஊரான் வீட்டு பிரச்னைக்கு குரல் கொடுக்கனுமா?
கேள்வி நியாயம் தான் !
ஆனால் அதுக்காக ஊரான் வீட்டு பிரச்னைக்கு அனுதாபப் படுறது தப்பு இல்லையே!
இவங்கெல்லாம் சொல்றத பார்த்தா, என்னமோ உள்ளூர் படத்தை மட்டும் தான் பார்க்குறது போலவும், ரஜினி கமல்னா யாருனே தெரியாதுங்கற மாதிரில இருக்கு.
தமிழக சூழ்நிலையும் இங்குள்ள சூழ்நிலையும் வெவ்வேறு தான்.
நிலத்தாலும் தேசத்தாலும் நாம் வேறு தான் என்றாலும், ஆனால் உணர்வால் நாம வேற வேற
இல்லையே!
இலங்கைத் தமிழர்களுக்கு கொடுமை நிகழ்ந்த போது இங்குள்ள நமக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?
மலேசியாவுக்கும் இலங்கை இன அழிப்பு பிரச்னைக்கும் என்ன தொடர்பு என புத்திசாலித் தனமாக கேட்டு விட்டு நாமெல்லாம் ஒதுங்கி விட்டோமா என்ன? இல்லையே!
அங்கிருந்து வரும் சினிமா இனிக்கும்; பேசியே கொல்ல அரசியல் மணக்கும். ஆனால் தமிழனின் உணர்வு மட்டும் கசக்குமா?
இதே பத்து ஆண்டுகளுக்கு முன் இங்கு நாம் வீதியில் இறங்கிய போது, மலேசியத் தமிழர்கள் தானே, நமக்கென்ன வந்தது என உலகத் தமிழர்களும் இந்திய வம்சாவையினரும் ஒதுங்கி விட்டார்களா?
அக்காலக் கட்டத்தில் புது டெல்லியில் இருந்த போது நானே என் கண் முன்னே பார்த்திருக்கிறேன் - மலேசியத் தமிழர்களுக்கு என்ன ஆயிற்று என அரசியவாதிகள் கேள்வி எழுப்பியதும், நம்மூர் அரசியல்வாதிகளை அங்குள்ள செய்தியாளர்கள் துரத்தி துரத்தி துருவித் துருவி கேள்வி கேட்டதையும்!
தமிழன் உணர்வுப் பூர்வமாக இணைகிறார்கள் ; இணைந்திருக்கிறார்கள்!
இங்கு யாரும் போய் போராட்டம் நடத்தவில்லையே! உங்கள் உணர்வை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்; உணர்வுப்பூர்வமாக நாங்கள் உங்களுடன் என அமைதியான முறையில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவ்வளவு தான்!
அதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை.
நாமும் எதிலும் வாயைத் திறக்க மாட்டோம்; திறப்பவர்களையும் விட மாட்டோம் என்றால் எப்படி?
பாசத்துக்கு யாரும் கைமாறு எதிர்பார்ப்பதில்லை, உணர்வும் அது போலத் தான்….
எனது பார்வையில் ….
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகத் தமிழினம் உணர்வால் ஒன்றிணைகிறது!
#சிந்தித்தவேளை salute அடித்த வேளை !

வேண்டாம் பிரிவினைவாதம்!


வழி பிறக்க வேண்டிய மாதத்தில் கலகம் பிறக்கிறதோ? நடக்கும் சம்பவங்கள் அப்படித் தான் சொல்ல வைக்கின்றன. தடுக்கி விழுமிடமெல்லாம் சர்ச்சைகள்.....
ஆகக் கடைசியாக மொழிப் பிரச்னையில் வந்து நிற்கிறது. ஏற்கனவே அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். அதை விட மோசம் - சாதி என்ற பிணியால் பிளவுப் பட்டு கிடப்பது. இவற்றில் இருந்து மீள்வதே கேள்விக்குறி தான், இதில் புதிதாக இன்னொன்றா? தாங்காதப்பா சமூகம்!
அவரவர் மொழி, அவரவர் பண்பாடு அவரவர்க்கு ஒசத்தி! அது தொடர்பில் கோரிக்கை வைப்பது அவரவர் உரிமை. மற்றவர் உரிமைக்குச் சொந்தம் கொண்டாடுவதும் அதனைத் தட்டிப் பறிப்பதும் தான் தவறு. மற்றபடி இந்நாட்டு சூழ்நிலைகளுக்கு அக்கோரிக்கைகள் நியாயமானதா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். ஜனநாயக நாட்டில் கேட்க உரிமை இருக்கிறது, கேட்டிருக்கிறார்கள்!
இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டுமொத்தமாக அவர்களை எதிரியாகப் பார்க்க வேண்டுமா? அவர்களும் நம் சகோதரர்களே! சகோதரர்களால் நம் மொழிக்கும் பள்ளிகளுக்கும் ஆபத்து வந்து விடுமா? அந்த அளவுக்கு நாம் பலவீனம் அடைந்து விட்டோமா ? இல்லையே! பின் எதற்காக?
தமிழர், தெலுங்கர், மலையாளிகள் என மொழிவாரியாகவும் கலாச்சாரம் வாரியாகவும் வேறுபட்டிருந்தாலும் இந்நாட்டைப் பொருத்தவரை நாமெல்லாம் ஒன்றே! நமது ஒட்டு மொத்த மக்கள் தொகையே 7% விழுக்காடு தான். தொடர் பிளவுகள் நம்மை அநியாயத்துக்கு வலுவிழக்கச் செய்து விடும்.
சமூக வலைத் தளங்களின் சக்தி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யார் கொளுத்திப் போட்டாலும் உடனே பற்றிக் கொள்ளும். பதிலடி என்ற பெயரில் நம் சகோதரர்களும் ஆளாளுக்கு # தொடங்கி விட்டால் நிலைமை என்னாகும்? நினைக்கவே பயமாக இருக்கிறது. மனம் வலிக்கிறது!
சமூகவலைத் தளவாசிகளே, சினமூட்டும் நடவடிக்கைகளைத் தவிர்ப்போம்,
சகோதரத்துவத்தைப் பேணுவோம்,
மனமாச்சர்யங்களை விட்டொழிப்போம்!
ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் வளமிகு எதிர்காலத்திற்கு இப்போதே நம் கரங்களை வலுப்படுத்துவோம்.
வேண்டாம் நமக்குள் பிரிவினைவாதம்.
நம்பிக்கைத் தளராத #சிந்தித்தவேளை

Tuesday, 17 January 2017

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்!



வணக்கம். நம் சமயம் தொடர்பாக அண்மைய காலமாக சமூக வலைத்தளங்களில் முக்கியத்துவம் பெற்று வரும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே! சமய விழாக்கள் - அவற்றின் நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு அதிலும் இளையத் தலைமுறையினர் மத்தியில் மேலோங்கியிருப்பதை இது காட்டுகிறது. உள்ளபடியே இது மன மகிழ்ச்சியைத் தருகிறது.

தைப்பூசத் திருவிழாவில் மாற்றங்கள் வராதா என ஆங்காங்கே ஏக்கக் குரல்கள் ஒலித்து வந்த நிலையில், முகநூல் இம்முறை பிரதான இடத்தைப் பிடித்து விட்டது. முறையாக உடையணியாதவர்களுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் தொடங்கி இன்று எங்கோ வந்து நிற்கிறது.

நமது நோக்கம் எல்லாம் சரி தான், ஆனால் அணுகுமுறை தான் வழக்கம் போல் சறுக்கி விடுகிறது. அதனால் தான் எதிர்வினைகளும் அதிகமாகி விடுகின்றன. நல்ல நோக்கமென்றாலும், அணுகுமுறையில் தடுமாறியதால் ஏட்டிக்குப் போட்டியான சம்பவங்கள் நடந்து விட்டன ; இன்னும் நடந்து வருகின்றன. அறிக்கைப் போர், காணொளிக்கு காணொளி, எச்சரிக்கைக்கு எச்சரிக்கை என நீண்டு கொண்டே போகிறது. நீயா நானா தொடங்கி ஆணா பெண்ணா என்ற ரீதியில் வந்து நிற்கிறது. கடுஞ்சொற்களின் பயன்பாடும் சற்று அதிகமாகவே உள்ளது.

தைப்பூசத்திற்கு ஒரு மாதம் கூட இல்லை. பன்னீர், சந்தனம் என கேட்க வேண்டிய காதுகளில் Spray இன்னும் என்னென்னவோ கேட்கின்றன. இது தொடர்ந்தால் தைப்பூசத்தின் வழக்கமான 'களைக்கட்டு' இவ்வாண்டு பாதிக்கவே செய்யும். முருகன் அருள் வேண்டி வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரு வித அச்ச உணர்வோடு தான் இருப்பர். இதைத் தான் நாம் பார்க்க விரும்புகிறோமா?

தன் சன்னதிக்கு வருபவர்களை முருகன் பார்த்துக் கொள்வார். நாம் நம்மைப் பார்த்துக் கொள்வோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியும் ஏட்டிக்குப் போட்டியாக காணொளிகள் வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். சமய விழா திசை மாறி விடக் கூடாது.

அனைவருமே என் சொந்தங்கள் என்ற உரிமையில் இக்கருத்தை பதிவிடுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சமயம் வளர்ப்போம், அதன் மாண்பைக் காப்போம்!

-மோகனதாஸ் முனியாண்டி #சிந்தித்தவேளை

Thursday, 5 January 2017

அம்மா மரணம், சின்னம்மா சரணம்!

ம்மா,
மண்ணுலகை விட்டு விண்ணுலகை ஆள நீ புறப்பட்டு இன்றோடு 30 நாட்கள்,
இந்த ஒரே மாதத்தில் ஊருக்கே தெரிந்து விட்டது  உண்மையிலேயே யாரெல்லாம் உன் ஆட்கள்!

தலைவனின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமையேற்கத் தான் நீ போய் விட்டாய் என பட்டுக் கொள்கிறோம்  நாங்கள் ஆறுதல்,
ஆனால், கண் முன் நடப்பதையெல்லாம் பார்க்கையில் ஆட்சியே கைமாறி விடும் போல, இல்லாமலேயே தேர்தல் !

உன் இழப்பை மனம் கொஞ்சமும் ஏற்க மறுக்கிறது,
உடன்பிறவா சகோதரியை  வரலாறு காணாத வகையில்  ஊரே வெறுக்கிறது!

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று மேடைதோறும்  நீ  கலங்கினாய்,
‘சின்னம்மாவால் தான்  நாங்கள், சின்னம்மாவுக்காகவே நாங்கள்’ என  இன்று முழங்குகிறார்கள்!

மன்னார்குடியை அன்றே மண்ணைக் கவ்வ வைத்திருக்கலாம், நீயோ மன்னித்து உள்ளே விட்டாய்,
விளைவு -  கையில் மாங்காயைக் கொடுத்து விட்டு கட்சியை  ஏப்பம் விட்டு விடும் போலிருக்கிறது மாஃபியா கும்பல்!

அப்போலோவில் 75 நாட்கள் உனக்கு என்னதான் நடந்ததோ? கடவுளுக்கே வெளிச்சம்!
இதனால் தூக்கம் தொலைத்த உன் விசுவாசிகளுக்கு இல்லை இதுவரை சுபிட்சம்!

உனக்குத் தெரிந்தால்  அங்கு  உன் தலைவனிடம் சொல்லி அழுது விடு,
காலத்திற்கும் பெண் சிங்கத்தின்  புகழ் பாடிக் கொண்டே எங்களை இருக்க விடு!

இருந்த வரை நீ தான் எல்லாமும் ஆனாய்,
மறைந்த மறுநாளே சசிகலாவே சகலமும் ஆனார்!

33 ஆண்டுகள் உன்னைப் பின் தொடர்ந்த நிழல்,
ஆண்டவன் தீர்ப்பால் சீக்கிரமே போகும் புழல்!

-மோகனதாஸ் முனியாண்டி #சிந்தித்தவேளை