அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Monday, 26 September 2022

யாரு சாமி நீங்க?

 



லாய் மொழியில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். Air yang tenang jangan sangka tiada buaya. அதாவது தெளிந்த நீரில் முதலை இல்லை என நினைக்காதீர்கள் என்று.

அண்மையக் காலமாக எனக்கு அடிக்கடி ஒருவர் அதனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, இந்த நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி அவர்களே.


கிட்டத்தட்ட 13 மாதங்களுக்கு முன் அப்பதவிக்கு வந்தவரா இவர் ? என என்னையே நான் பலமுறை கேட்டுக் கொள்கிறேன். குரலை உயர்த்தி பேசாதவர்,  கோப முகத்தைக் காட்டாதவர், புன்முறுவலோடு கடந்து செல்பவர் என்ற அளவில் தான் அவரைப் பற்றிய அறிமுகம் இருந்தது.


இன்று அது மெல்ல மெல்ல மறைந்து அவரின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. அது தீவிர அரசியல் பார்வையாளனான எனக்கு மட்டுமல்ல. அவரின் கட்சிக்காரர்களுக்கே அவர் இன்று புதிய மனிதராகத் தான் தெரிகிறார். 


அவரின் நடவடிக்கைகள் அப்படி இருக்கின்றன. கடந்த வாரக் கடைசியில் நியூ யார்க் சென்றவர்,  அங்கு ஐநா மேடையை அதகளப்படுத்தி வந்திருக்கிறார். 2-3 நாட்களாக அதைப் பற்றிய பேச்சுக்கள் தான் சமூக ஊடகங்களில்.


அவர் எங்கு போனார்,  எதற்கு போனார் என்றே தெரியாதவர்கள்,  கண்டுகொள்ளாதவர்கள் எல்லாம்,  அவர் அப்படி என்னதான் பேசினார்? என்று கேட்கும் அளவுக்கு 'சம்பவத்தை ' சாதித்திருக்கிறார் மனிதர்.


பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடிய இடத்தில் மைக்கைப் பிடித்து ஐநா பாதுகாப்பு மன்றத்தையே விளாசி எடுத்து விட்டார். உரையைக் கேட்டவர்களுக்குத் தெரியும். ஏதோ தாங்கள் தான் மன்னாதி மன்னர்கள் என்ற தோரணையில் வல்லரசு நாடுகள் போடும் ஆட்டத்தைத் தோலுரித்து விட்டார்.


தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு,  ஊர் எப்படி போனால் என்ன,  நமக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற மனநிலையில் ரத்து அதிகாரத்தை வைத்து தகிட தத்தோம் தாளம் போடுவதாக அந்த "உலக போலீஸ்கார" நாடுகளை ஒரு பிடி பிடித்தார்.


உங்கள் நாடகம் போதும், ரத்து அதிகாரத்தையே ரத்துச் செய்யுங்கள் என ஒரே போடாய் போட்டார். அதுவரை மேடையில் இருந்தவரின் பேச்சை ஏதோ ஒரு கடமைக்காக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நிச்சயம் சற்று தலை நிமிர்ந்துப் பார்த்திருப்பார்கள். 




அதற்கும் கால அவகாசம் கொடுக்காமல் அடுத்த அம்பை எய்தினார் ஒன்பதாவது பிரதமர். ரஷ்யா உக்ரேய்ன் போரில் ஊரை முந்திக் கொண்டு பஞ்சாயத்துக்கு வந்த வல்லரசுகள்,  இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் வக்கனையாக ஜகா வாங்கியது ஏன்?  அந்த நேரத்தில் டீ குடிக்கப் போனீர்களா என்று கேட்காமல் கேட்பது போல் இருந்தது அவரின் கேள்வி.


2014-ஆம் ஆண்டு மலேசிய விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷ்யா அரங்கேற்றிய நாடகத்தையும் அவர் மறக்கவில்லை. தவறு செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த அனைத்துலக நடுவர் மன்றத்தை அமைக்க மலேசியா வைத்த கோரிக்கையை, ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அலேக்காக அபேஸ் செய்த ரஷ்யாவின் செயலை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.


மியன்மார் விவகாரம் இன்னும் மோசம். ஏதோ மாற்றான் தாய் பிள்ளை என்பது போலத்தான் ஐநாவின் நடவடிக்கை அதில் இருக்கிறது. மியான்மார் ராணுவ அரசின் மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க வக்கில்லை, வந்து விட்டீர்கள் வியாக்யானம் செய்வதற்கு என்று! ஆசியானிடம் அதை ஒப்படைத்து விட்டால் பிறகு எதற்கு பன்னாட்டு அமைப்பு என பீற்றிக் கொள்கிறீர்கள் என வெளுத்து விட்டார். ரத்து அதிகாரத்தை மறந்தே போனவர்களுக்கும் அதனை நினைவூட்டி விட்டார்.


குனிய குனிய கொட்டியவர்களுக்குக் கொட்டு வைத்ததோடு விடாமல் நிதி நிர்வாகம் குறித்த ஆலோசனைகளையும் முன் வைத்து விட்டு வந்திருக்கிறார். குறிப்பாக உலக நாடுகளை வாட்டும் பணவீக்கப் பிரச்னைக்குத் தீர்வாக அனைத்துலக நிதிய ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். பொருளாதாரத்தில் ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருக்கிறது. சிலரின் தந்திரமான தன்னிச்சைப் போக்கால் பாதிக்கப்படுவது என்னமோ மற்ற நாடுகள் தான் என்பதைச் சுட்டிக் காட்டினார்.


'மலேசியக் குடும்பம்' இவரில் தயவால் இப்போது 'உலகக் குடும்பம்' ஆகியிருக்கிறது. Inclusive என்ற பொதுவான வார்த்தையைக் குடும்பமாக்கி அதன் அர்த்தத்தை ஆழமாக்கி விட்டிருக்கிறார் பிரதமர்.



'சாட்டையை எடுத்து சுழற்றியவர்' அதனை நமது தேசிய மொழியில் செய்தது தான் சம்பவத்தின் உச்கக்கட்டம். ஐநா மேடையில் சுமார் 20 நிமிங்களுக்கு மலாய் மொழி ஓங்கி ஒலித்தது. ஐநா வரலாற்றில் முழுமையாக நமது தேசிய மொழியில் உரையாற்றிய முதல் உச்சத் தலைவராக சரித்திரம் படைத்திருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ரகுமான் "எல்லா புகழும் இறைவனுக்கே!" என்ற ஒற்றை வார்த்தையில் நம்மை எல்லாம் அல்லு விட வைத்தாரே….அப்படித்தான் இருந்தது இதுவும். ஒப்பீடு ஓவராக இருக்கிறதே என நினைக்கலாம். ஆனால் அது தான் உண்மை. தேசிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என வெறும் வாய் வார்த்தையில் சொல்லாமல் உலக அரங்கில் அதனை தானே செய்து காட்டி முன்மாதிரியாகி விட்டார். 

மகா தீரருக்குப் பிறகு மலேசியாவின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்திருக்கிறது என்பதை எதிராளிகளும் தாராளமாக ஒப்புக் கொள்ளலாம்.


டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் பெயர் ஐநா மாநாட்டுக்கு முன்பு வேண்டுமானால் நிறைய பேருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மாநாட்டுக்குப் பிறகு தெரியாதோர் சொற்பமே. 


இப்படி சந்தடி சாக்கில்லாமல் சம்பவத்தை நிகழ்த்தி விட்டு சர்வமும் சாந்தமாக வலம் வருகிறீரே….. 


யாரு சாமி நீங்க? 


#வியன் வியந்தான்! 



Friday, 23 September 2022

இன்னிக்கு சரினா, அன்னிக்கும் சரியே!

 


விடுதலையா? என்ன சொல்றீங்க நீங்க?

எப்படி சாத்தியம்? வாய்ப்பே இல்லையே!

ஏன்? 40-ல் ஒன்று கூடவா சிக்கவில்லை?

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

 

இப்படி நம்மில் கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஏராளமான கேள்விகள் இன்று.

(பரவாயில்லையே, நீதிமன்ற வழக்கொன்றை அந்த அளவுக்கு நாம் அணுக்கமாகக் கண்காணித்திருக்கிறோமே)

நாடே எதிர்பார்த்திருந்த ஊழல் வழக்கில் இன்று வெளியான தீர்ப்பை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்….

“அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை”

அதனால், வெளிநாட்டு விசா முறை ஒப்பந்தத்தை நீட்டித்த விஷயத்தில், அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடியை, அனைத்து 40 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, வழக்கில் இருந்தே ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார்.


அப்படி என்னதான் குற்றச்சாட்டு? 

இன்றைய அம்னோ தலைவர் - அப்போதைய உள்துறை அமைச்சர், 2014-2017 வரையிலான காலக்கட்டத்தில் UKSB-யிடம் இருந்து 4 கோடியே 36 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றது. அதே நிறுவனத்திடம் இருந்து வெவ்வேறு நாணயங்களில் லஞ்சம் பெற்றது தொடர்பில் 7 பணச்சலவைக் குற்றசாட்டுகள் வேறு. 

சீனாவில் ஓரிட சேவை மையம் (OSC)  மற்றும் VLN முறையைக் கையாளும் குத்தகையை நீட்டிக்க UKSB-யிடம் இருந்து லஞ்சம் வாங்கியது.

ஒருமுகப்படுத்தப்பட்ட VLN முறையைத் தருவிக்க உள்துறை அமைச்சுடனான குத்தகையை நீட்டிக்கவும் அந்நிறுவனத்திடம் இருந்து கையூட்டு வாங்கியது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்?

2009 மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையச் சட்டத்தின் 16-ஆவது உட்பிரிவின் கீழ், 20 ஆண்டுகள் சிறை, லஞ்சப் பணத்தில் 5 மடங்குக்கும் குறையாத தொகையில் அபராதம் அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் ( எது அதிகமோ, அது )

 

நீதிபதியின் தீர்ப்பு:

அரசு தரப்பு கொண்டு வந்த 3 முதன்மை சாட்சிகளும் நம்பகத்தன்மையற்றவர்கள்.

அந்த மூவரின் வாக்குமூலங்கள் பலவீனமானவை; நம்பும்படியாக இல்லை. அவர்களையும் நம்ப முடியவில்லை. ( ஏம்பா ஆரம்பமே அடியா )

ஆதாரமான ஆதாரங்கள் இல்லை! ( கடல்லயே கிடையாதாம் )

சாஹிட்டுக்கு பணம் கைமாறியதாகக் கூறும் அரசு தரப்பு, CCTV காட்சிகள் எதனையும் நீதிமன்றத்திடம் காட்டவில்லை. முதன்மை  சாட்சி ( காரோட்டுநர்) அழைக்கப்படவில்லை. வீட்டு பாதுகாவலரும் தான். காவல் வீரர்களும் சாட்சிகளாக அழைக்கப்படவில்லை.

பணம் கைமாறியதற்கான Touch ‘n Go சீட்டு, குற்றம் சாட்டப்பட்டவருடனான தொலைபேசி அழைப்பு பதிவுகள், குறுஞ்செய்தி பறிமாற்றங்கள் என எதுவுமே நீதிமன்றத்திடம் காட்டப்படவில்லை.

நீதிபதி அதோடு விடவில்லை. டத்தின் ஸ்ரீ ரொஸ்மா வழக்கையும் ஒப்பீடாக எடுத்துக் கொண்டார். அதாவது, ரொஸ்மாவுக்கு கைமாறியதாகக் கூறப்படும் 50 லட்சம் ரிங்கிட்டில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் சாட்சிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.  ஆனால், இந்த வழக்கில், சாஹிட்டுக்கு கிடைத்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்தவர்கள் என நம்பப்படும் எவரும் ( ஹாங் காங்கைச் சேர்ந்த தொழில் அதிபர் நிக்கோல் உட்பட ) சாட்சிகளாக அழைக்கப்படவில்லை; ஆக, அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரப் பூர்வமாக முன்வைக்கவில்லை.

நிக்கோல், பணம் மாற்றுபவர் இருவர் என எல்லாரிடத்திடலும் விசாரணை செய்யப்பட்டிருக்கிறது, வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன; ஆனால் குற்றசாட்டுகளை வலுவாக்க, அவர்கள் எவரையும் சாட்சியாக அரசு தரப்பு முன் நிறுத்தவில்லை.

அதே சமயம், கணக்கில் உள்ளபடி 15 பேருக்கு பணம் கைமாறியிருக்கிறது; ஆனால் யார் அந்த 15 பேர் என்பது ஓர் இடத்தில் கூட விளக்கப்படவில்லை. அவர்களுக்கும் இந்த பணப்பட்டுவாடாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் அரசு தரப்பின் சாட்சிகள் தெரிவிக்கவில்லை.

ஆக, வலுவான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படாத நிலையில், கைமாறியதாகக் கூறப்படும் பணம் அன்றைய உள்துறை அமைச்சருக்கு தான் சென்றது என தம்மால் முடிவுக்கு வர முடியாது என்கிறார் நீதிபதி. குற்றம் சாட்டப்பட்டவருக்கு தான் பணம் கைமாறியது என்பதை வெறுமனே லேஜர் புத்தகத்தில் உள்ளதை வைத்து முடிவுக்கு வர முடியாது என நீதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

ரொஸ்மா வழக்கில் அரசு தரப்பு, பணத்தை எடுத்தவர், வங்கிப் பணியாளர் உள்ளிட்டோரை சாட்சிகளாக நிறுத்தியது; வங்கிக் காசோலையும் ஆதாரமாக ஒப்படைக்கப்பட்டது. புகைப்படங்களும் ஒப்படைக்கப்பட்டன. வரைப்படம் கூட நீதிமன்றத்திடம் காட்டப்படது; ஆனால் இது எதுவுமே இங்கு இல்லை.

ஆக, வியனின் பார்வையில், நீதிபதியின் தீர்ப்பு, அதை எழுதுவதில் அவருக்கு பெரும் சிரமத்தை அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

காலையில் ஆதரவாளர்கள் புடை சூழ உற்சாகமாக நீதிமன்றம் சென்ற அம்னோ தலைவருக்கு இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய நிம்மதியைத் தந்திருக்கும்.

14 நாட்களில் அத்தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்யலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அது அடுத்தக் கதை.... தற்போதைக்கு சாஹிட் ஹமிடி பெரும் கண்டத்தில் இருந்து தப்பியுள்ளார். 

வாழ்த்துகள்!

உச்ச நாற்காலியில் அமர அவருக்கு பெரும் தலைவலியாக இருந்த தடை நீங்கியுள்ளது.

வரும் நாட்களிலோ, வாரங்களிலோ இன்னும் சுவாரஷ்யமான நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். 


#வியன் என்றும் நாட்டின் நீதிபரிபாலனத் துறைக்குத் தலை வணங்குபவன்.

பலருக்கும் பலவித கருத்துகள் இருக்கலாம்; ஆனால், கடைசியில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது; அதை மதிப்பவன் நான்.

சொல்லி முடிப்பது என்னவென்றால்.... இன்னிக்கு சரினா, அன்னிக்கும் சரிதாங்கோ! 😎


- நன்றி பெர்னாமா, FMT, The Vibes