அண்மையச் செய்தி :

'வேல் வேல்' குறித்து இழிவுப்படுத்திய தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் பணி இடைநீக்கம் ! ...........................மன்னிப்புக் கேட்பு போதாது, நடவடிக்கைத் தேவை என பரவலாகக் கோரிக்கை!

Tuesday, 4 March 2025

Simple Manusan – மிகையில்லா connection

 



நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வியன்.

அதுவும் உள்ளூர் படத்திற்கு.

படத்தின் பெயர் சிம்பிள் மனுசன் (Simple Manusan)

எதற்காக அப்படி பெயர் வைத்தார்களோ தெரியாது, ஆனால் படமே அப்படித்தான்!

அத்தனையும் Simple….


ஒரே வரியில் சொல்வதென்றால் சராசரி நடுத்தர வாழ்க்கையை நகர்த்தும் 32 வயது ஆடவன், உள்ளுக்குள் தனிமையை உணர்ந்து, காலியிடத்தை நிரப்ப பாடும் பாடே படத்தின் கதை.


ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பேரெதிர்பார்ப்போடு உள்ளூர் படமொன்றை பார்க்க உள்ளே சென்று, அரை மணி நேரம் கூட தாங்க முடியாமல் வெளியே ஓடி வந்தவன் வியன்.

ஆனால், இந்த முறை சுமார் 2 மணி நேர படம் முழுவதும் இருக்கையை விட்டு நகரவில்லை.

படம் தொடக்கம் முதல் முடிவு வரை அத்தனையும் Simple.


நம்மோடு ஒன்றிப் போகக் கூடியக் கதை, கதைக் களம், கதை மாந்தர்கள்…

போலிவூட் ரேஞ்சுக்கு வெள்ளைத் தோல் ஹீரோ கிடையாது, பாடல்களுக்கு மட்டுமே பயன்படும் ஹீரோயின் கிடையாது, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பாடல் கிடையாது, ஏன் படம் முழுக்க செயற்கையான பிம்பம் கிடையாது.

அத்தனையும் நம் கண் முன்னே பார்த்துப் பழகிய மனிதர்கள், பேச்சுகள், பழக்க வழக்கங்கள், சம்பவங்கள் என எதார்த்தத்தின் வெளிப்பாடே Simple Manusan.

ஒரு சராசரி மலேசிய இளைஞனின் வாழ்க்கையை இட்டுக்கட்டாமல், அப்பட்டமாக அப்படியே வெளிக்காட்டியதற்கு இயக்குநர்களான 2 இளைஞர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

Haran Kaveri, Shoban உங்கள் இருவருக்கும் இத்தனை வயதில் தான் எத்தனை பக்குவம், எத்தனை முதிர்ச்சி.

ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் நடிப்பும் அளவோடு இருக்கிறது; முக்கியமாக வசனங்கள் படு இயல்பு. உள்ளுர் சினிமாக்களில் அடிக்கடி நான் குறைப்பட்டுக் கொள்ளும் அம்சம் இது.

குறைந்த வசனங்களுக்கு ஏற்ற அளவான நடிப்பு, முகபாவணை, காட்சியமைப்பு, பின்னணி இசை என அத்தனையிலும் சிரத்தை எடுத்து 2 இயக்குநர்களும் வேலை செய்திருப்பது திரையில் கண்கூடு.

‘மெட்ரோ மாலை’ எனும் மிகச் சிறந்த படைப்பைத் தந்தவர்கள் ஆயிற்றே ( இந்தப் படத்தையே அண்மைய மறு திரையீட்டின் போதே பார்த்து வியன் வியந்தான் என்பது வேறு கதை)


கதாநாயகன், இல்லை கதைக்கு நாயகன் HindravelChandrabose 

முகத்தை Standup Comedy மேடைகளில் பார்த்த ஞாபகம்.

ஆறடி உயரம், தொப்பை வயிறு, அழுக்குத் தோய்ந்த தோற்றம். முதல் படம் என்பதே தெரியவில்லை. வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் முக பாவணையிலும் பக்கத்து வீட்டு பையன் போன்ற எதார்த்தம்.

வழக்கமாக ஹீரோவுக்கு கொடுக்கப்படும் பில்டப் பிம்பம் எதுவுமில்லை. கதாநாயகன் தேர்வுக்கும் அவரை அளவோடு நடிக்க வைத்த திறமைக்கும் இயக்குநர் இரட்டையருக்கு மீண்டும் ஒரு சபாஷ்.


அடுத்து என்னை அதிகம் கவர்ந்தவர் மழைச் செல்வியாக வரும் Puvaneswary Sukumaran

அறிமுகக் காட்சியிலிருந்தே அலட்டல் இல்லை; கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்மொழி. இவரின் கண்களே பாதி நடிப்பை முடித்து விடுகின்றன.


நாயகனின் தந்தையாக வரும் Mogan ChandraDas படத்தின் இன்னொரு முக்கியத் தூண்.

வழக்கமான தந்தை கதாபாத்திரமே என்றாலும், அவரின் பண்பட்ட நடிப்பு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது; ஒரு சராசரி தந்தையின் எதிர்பார்ப்பு, கோபம், ஏமாற்றம், கவலை என அளவில்லாமல் உணர்ச்சிகளைக் கொடுத்திருக்கிறார்; சில இடங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.

நாயகனின் அக்காவாக வரும் நம்மூர் ‘சிவகாமி தேவி’ Shamini Ramasamy இரசிகர்களைக் கவருகிறார்; “அட இது அசல் எங்க அக்காங்க!” என பின்னாலிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் முனுமுனுக்கும் அளவுக்கு நடிப்பில் எதார்த்தாம். இதில் எனக்கு ஆச்சரியமே இல்லை, ஏனென்றால் பல தடவை நான் கூறியுள்ளேன், இவரின் நடிப்புத் திறன் பற்றி. ஆனால், ஏனோ பல படங்களிலும், நாடாகங்களிலும் சற்று முதிர்ச்சியான கதாபாத்திரங்களை இவருக்குக் கொடுத்து விடுகிறார்கள். இவரிடம் நடிப்புக்கு தீனி போடும் வாய்ப்புகள் அடுத்தடுத்து குவியுமென வியன் நம்புகிறான்.

நாயகனின் நண்பர் கூட்டத்தில் ஒருவராக வரும் மூத்த வானொலி அறிவிப்பாளர் V.ஆறுமுகத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை; உடனிருக்கும் நண்பர்களும் தங்கள் பங்கை அழகாகச் செய்துள்ளனர்.

கல்யாண புரோக்கர் ஆண்டியாக வரும் Braima Sivagnanam தொடங்கி படம் முழுவதும் வந்து அனைவருமே கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்துள்ளனர்.

எல்லாருக்குமே பாராட்டுகள்.


முடிக்கும் முன், ஒளிப்பதிவாளர் Gwai Lou மற்றும் இசையமைப்பாளர் Kaber Vasuki இருவருக்கும் தனி சபாஷ்.

படத்தின் simple-லுக்கு பங்கம் வராமல் பணியாற்றியுள்ளனர்.

திரையரங்கை விட்டு வந்த பிறகும் ‘அமைப்போனே’ பாடல் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

Comradepictures நிறுவனத்தின் தரமானதொரு படைப்பை கண்டு களித்த சந்தோஷத்தில் வெளியே வந்து lift-டுக்காக காத்திருந்த போது, பக்கத்து hall-லில் கோலீவூட் படமொன்றை பார்த்து விட்டு பெரியக் கூட்டமே வெளியேறியது.

உள்ளூர் படத்தை என்னோடு சேர்த்து ஒரு 20-30 பேர் பார்த்திருப்போம்.

மனதில் பல யோசனைகள் வந்துபோயின…

இருந்தாலும் தேற்றிக் கொண்டேன்…

 

Simple Manusan , வியனைப் பொருத்தவரை சற்றும் மிகையில்லா connection  

 

Monday, 26 September 2022

யாரு சாமி நீங்க?

 



லாய் மொழியில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். Air yang tenang jangan sangka tiada buaya. அதாவது தெளிந்த நீரில் முதலை இல்லை என நினைக்காதீர்கள் என்று.

அண்மையக் காலமாக எனக்கு அடிக்கடி ஒருவர் அதனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, இந்த நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி அவர்களே.


கிட்டத்தட்ட 13 மாதங்களுக்கு முன் அப்பதவிக்கு வந்தவரா இவர் ? என என்னையே நான் பலமுறை கேட்டுக் கொள்கிறேன். குரலை உயர்த்தி பேசாதவர்,  கோப முகத்தைக் காட்டாதவர், புன்முறுவலோடு கடந்து செல்பவர் என்ற அளவில் தான் அவரைப் பற்றிய அறிமுகம் இருந்தது.


இன்று அது மெல்ல மெல்ல மறைந்து அவரின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. அது தீவிர அரசியல் பார்வையாளனான எனக்கு மட்டுமல்ல. அவரின் கட்சிக்காரர்களுக்கே அவர் இன்று புதிய மனிதராகத் தான் தெரிகிறார். 


அவரின் நடவடிக்கைகள் அப்படி இருக்கின்றன. கடந்த வாரக் கடைசியில் நியூ யார்க் சென்றவர்,  அங்கு ஐநா மேடையை அதகளப்படுத்தி வந்திருக்கிறார். 2-3 நாட்களாக அதைப் பற்றிய பேச்சுக்கள் தான் சமூக ஊடகங்களில்.


அவர் எங்கு போனார்,  எதற்கு போனார் என்றே தெரியாதவர்கள்,  கண்டுகொள்ளாதவர்கள் எல்லாம்,  அவர் அப்படி என்னதான் பேசினார்? என்று கேட்கும் அளவுக்கு 'சம்பவத்தை ' சாதித்திருக்கிறார் மனிதர்.


பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடிய இடத்தில் மைக்கைப் பிடித்து ஐநா பாதுகாப்பு மன்றத்தையே விளாசி எடுத்து விட்டார். உரையைக் கேட்டவர்களுக்குத் தெரியும். ஏதோ தாங்கள் தான் மன்னாதி மன்னர்கள் என்ற தோரணையில் வல்லரசு நாடுகள் போடும் ஆட்டத்தைத் தோலுரித்து விட்டார்.


தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு,  ஊர் எப்படி போனால் என்ன,  நமக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற மனநிலையில் ரத்து அதிகாரத்தை வைத்து தகிட தத்தோம் தாளம் போடுவதாக அந்த "உலக போலீஸ்கார" நாடுகளை ஒரு பிடி பிடித்தார்.


உங்கள் நாடகம் போதும், ரத்து அதிகாரத்தையே ரத்துச் செய்யுங்கள் என ஒரே போடாய் போட்டார். அதுவரை மேடையில் இருந்தவரின் பேச்சை ஏதோ ஒரு கடமைக்காக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நிச்சயம் சற்று தலை நிமிர்ந்துப் பார்த்திருப்பார்கள். 




அதற்கும் கால அவகாசம் கொடுக்காமல் அடுத்த அம்பை எய்தினார் ஒன்பதாவது பிரதமர். ரஷ்யா உக்ரேய்ன் போரில் ஊரை முந்திக் கொண்டு பஞ்சாயத்துக்கு வந்த வல்லரசுகள்,  இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் வக்கனையாக ஜகா வாங்கியது ஏன்?  அந்த நேரத்தில் டீ குடிக்கப் போனீர்களா என்று கேட்காமல் கேட்பது போல் இருந்தது அவரின் கேள்வி.


2014-ஆம் ஆண்டு மலேசிய விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷ்யா அரங்கேற்றிய நாடகத்தையும் அவர் மறக்கவில்லை. தவறு செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த அனைத்துலக நடுவர் மன்றத்தை அமைக்க மலேசியா வைத்த கோரிக்கையை, ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அலேக்காக அபேஸ் செய்த ரஷ்யாவின் செயலை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.


மியன்மார் விவகாரம் இன்னும் மோசம். ஏதோ மாற்றான் தாய் பிள்ளை என்பது போலத்தான் ஐநாவின் நடவடிக்கை அதில் இருக்கிறது. மியான்மார் ராணுவ அரசின் மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க வக்கில்லை, வந்து விட்டீர்கள் வியாக்யானம் செய்வதற்கு என்று! ஆசியானிடம் அதை ஒப்படைத்து விட்டால் பிறகு எதற்கு பன்னாட்டு அமைப்பு என பீற்றிக் கொள்கிறீர்கள் என வெளுத்து விட்டார். ரத்து அதிகாரத்தை மறந்தே போனவர்களுக்கும் அதனை நினைவூட்டி விட்டார்.


குனிய குனிய கொட்டியவர்களுக்குக் கொட்டு வைத்ததோடு விடாமல் நிதி நிர்வாகம் குறித்த ஆலோசனைகளையும் முன் வைத்து விட்டு வந்திருக்கிறார். குறிப்பாக உலக நாடுகளை வாட்டும் பணவீக்கப் பிரச்னைக்குத் தீர்வாக அனைத்துலக நிதிய ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். பொருளாதாரத்தில் ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருக்கிறது. சிலரின் தந்திரமான தன்னிச்சைப் போக்கால் பாதிக்கப்படுவது என்னமோ மற்ற நாடுகள் தான் என்பதைச் சுட்டிக் காட்டினார்.


'மலேசியக் குடும்பம்' இவரில் தயவால் இப்போது 'உலகக் குடும்பம்' ஆகியிருக்கிறது. Inclusive என்ற பொதுவான வார்த்தையைக் குடும்பமாக்கி அதன் அர்த்தத்தை ஆழமாக்கி விட்டிருக்கிறார் பிரதமர்.



'சாட்டையை எடுத்து சுழற்றியவர்' அதனை நமது தேசிய மொழியில் செய்தது தான் சம்பவத்தின் உச்கக்கட்டம். ஐநா மேடையில் சுமார் 20 நிமிங்களுக்கு மலாய் மொழி ஓங்கி ஒலித்தது. ஐநா வரலாற்றில் முழுமையாக நமது தேசிய மொழியில் உரையாற்றிய முதல் உச்சத் தலைவராக சரித்திரம் படைத்திருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ரகுமான் "எல்லா புகழும் இறைவனுக்கே!" என்ற ஒற்றை வார்த்தையில் நம்மை எல்லாம் அல்லு விட வைத்தாரே….அப்படித்தான் இருந்தது இதுவும். ஒப்பீடு ஓவராக இருக்கிறதே என நினைக்கலாம். ஆனால் அது தான் உண்மை. தேசிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என வெறும் வாய் வார்த்தையில் சொல்லாமல் உலக அரங்கில் அதனை தானே செய்து காட்டி முன்மாதிரியாகி விட்டார். 

மகா தீரருக்குப் பிறகு மலேசியாவின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்திருக்கிறது என்பதை எதிராளிகளும் தாராளமாக ஒப்புக் கொள்ளலாம்.


டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் பெயர் ஐநா மாநாட்டுக்கு முன்பு வேண்டுமானால் நிறைய பேருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மாநாட்டுக்குப் பிறகு தெரியாதோர் சொற்பமே. 


இப்படி சந்தடி சாக்கில்லாமல் சம்பவத்தை நிகழ்த்தி விட்டு சர்வமும் சாந்தமாக வலம் வருகிறீரே….. 


யாரு சாமி நீங்க? 


#வியன் வியந்தான்! 



Friday, 23 September 2022

இன்னிக்கு சரினா, அன்னிக்கும் சரியே!

 


விடுதலையா? என்ன சொல்றீங்க நீங்க?

எப்படி சாத்தியம்? வாய்ப்பே இல்லையே!

ஏன்? 40-ல் ஒன்று கூடவா சிக்கவில்லை?

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

 

இப்படி நம்மில் கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஏராளமான கேள்விகள் இன்று.

(பரவாயில்லையே, நீதிமன்ற வழக்கொன்றை அந்த அளவுக்கு நாம் அணுக்கமாகக் கண்காணித்திருக்கிறோமே)

நாடே எதிர்பார்த்திருந்த ஊழல் வழக்கில் இன்று வெளியான தீர்ப்பை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்….

“அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை”

அதனால், வெளிநாட்டு விசா முறை ஒப்பந்தத்தை நீட்டித்த விஷயத்தில், அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடியை, அனைத்து 40 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, வழக்கில் இருந்தே ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார்.


அப்படி என்னதான் குற்றச்சாட்டு? 

இன்றைய அம்னோ தலைவர் - அப்போதைய உள்துறை அமைச்சர், 2014-2017 வரையிலான காலக்கட்டத்தில் UKSB-யிடம் இருந்து 4 கோடியே 36 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றது. அதே நிறுவனத்திடம் இருந்து வெவ்வேறு நாணயங்களில் லஞ்சம் பெற்றது தொடர்பில் 7 பணச்சலவைக் குற்றசாட்டுகள் வேறு. 

சீனாவில் ஓரிட சேவை மையம் (OSC)  மற்றும் VLN முறையைக் கையாளும் குத்தகையை நீட்டிக்க UKSB-யிடம் இருந்து லஞ்சம் வாங்கியது.

ஒருமுகப்படுத்தப்பட்ட VLN முறையைத் தருவிக்க உள்துறை அமைச்சுடனான குத்தகையை நீட்டிக்கவும் அந்நிறுவனத்திடம் இருந்து கையூட்டு வாங்கியது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்?

2009 மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையச் சட்டத்தின் 16-ஆவது உட்பிரிவின் கீழ், 20 ஆண்டுகள் சிறை, லஞ்சப் பணத்தில் 5 மடங்குக்கும் குறையாத தொகையில் அபராதம் அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் ( எது அதிகமோ, அது )

 

நீதிபதியின் தீர்ப்பு:

அரசு தரப்பு கொண்டு வந்த 3 முதன்மை சாட்சிகளும் நம்பகத்தன்மையற்றவர்கள்.

அந்த மூவரின் வாக்குமூலங்கள் பலவீனமானவை; நம்பும்படியாக இல்லை. அவர்களையும் நம்ப முடியவில்லை. ( ஏம்பா ஆரம்பமே அடியா )

ஆதாரமான ஆதாரங்கள் இல்லை! ( கடல்லயே கிடையாதாம் )

சாஹிட்டுக்கு பணம் கைமாறியதாகக் கூறும் அரசு தரப்பு, CCTV காட்சிகள் எதனையும் நீதிமன்றத்திடம் காட்டவில்லை. முதன்மை  சாட்சி ( காரோட்டுநர்) அழைக்கப்படவில்லை. வீட்டு பாதுகாவலரும் தான். காவல் வீரர்களும் சாட்சிகளாக அழைக்கப்படவில்லை.

பணம் கைமாறியதற்கான Touch ‘n Go சீட்டு, குற்றம் சாட்டப்பட்டவருடனான தொலைபேசி அழைப்பு பதிவுகள், குறுஞ்செய்தி பறிமாற்றங்கள் என எதுவுமே நீதிமன்றத்திடம் காட்டப்படவில்லை.

நீதிபதி அதோடு விடவில்லை. டத்தின் ஸ்ரீ ரொஸ்மா வழக்கையும் ஒப்பீடாக எடுத்துக் கொண்டார். அதாவது, ரொஸ்மாவுக்கு கைமாறியதாகக் கூறப்படும் 50 லட்சம் ரிங்கிட்டில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் சாட்சிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.  ஆனால், இந்த வழக்கில், சாஹிட்டுக்கு கிடைத்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்தவர்கள் என நம்பப்படும் எவரும் ( ஹாங் காங்கைச் சேர்ந்த தொழில் அதிபர் நிக்கோல் உட்பட ) சாட்சிகளாக அழைக்கப்படவில்லை; ஆக, அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரப் பூர்வமாக முன்வைக்கவில்லை.

நிக்கோல், பணம் மாற்றுபவர் இருவர் என எல்லாரிடத்திடலும் விசாரணை செய்யப்பட்டிருக்கிறது, வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன; ஆனால் குற்றசாட்டுகளை வலுவாக்க, அவர்கள் எவரையும் சாட்சியாக அரசு தரப்பு முன் நிறுத்தவில்லை.

அதே சமயம், கணக்கில் உள்ளபடி 15 பேருக்கு பணம் கைமாறியிருக்கிறது; ஆனால் யார் அந்த 15 பேர் என்பது ஓர் இடத்தில் கூட விளக்கப்படவில்லை. அவர்களுக்கும் இந்த பணப்பட்டுவாடாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் அரசு தரப்பின் சாட்சிகள் தெரிவிக்கவில்லை.

ஆக, வலுவான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படாத நிலையில், கைமாறியதாகக் கூறப்படும் பணம் அன்றைய உள்துறை அமைச்சருக்கு தான் சென்றது என தம்மால் முடிவுக்கு வர முடியாது என்கிறார் நீதிபதி. குற்றம் சாட்டப்பட்டவருக்கு தான் பணம் கைமாறியது என்பதை வெறுமனே லேஜர் புத்தகத்தில் உள்ளதை வைத்து முடிவுக்கு வர முடியாது என நீதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

ரொஸ்மா வழக்கில் அரசு தரப்பு, பணத்தை எடுத்தவர், வங்கிப் பணியாளர் உள்ளிட்டோரை சாட்சிகளாக நிறுத்தியது; வங்கிக் காசோலையும் ஆதாரமாக ஒப்படைக்கப்பட்டது. புகைப்படங்களும் ஒப்படைக்கப்பட்டன. வரைப்படம் கூட நீதிமன்றத்திடம் காட்டப்படது; ஆனால் இது எதுவுமே இங்கு இல்லை.

ஆக, வியனின் பார்வையில், நீதிபதியின் தீர்ப்பு, அதை எழுதுவதில் அவருக்கு பெரும் சிரமத்தை அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

காலையில் ஆதரவாளர்கள் புடை சூழ உற்சாகமாக நீதிமன்றம் சென்ற அம்னோ தலைவருக்கு இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய நிம்மதியைத் தந்திருக்கும்.

14 நாட்களில் அத்தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்யலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அது அடுத்தக் கதை.... தற்போதைக்கு சாஹிட் ஹமிடி பெரும் கண்டத்தில் இருந்து தப்பியுள்ளார். 

வாழ்த்துகள்!

உச்ச நாற்காலியில் அமர அவருக்கு பெரும் தலைவலியாக இருந்த தடை நீங்கியுள்ளது.

வரும் நாட்களிலோ, வாரங்களிலோ இன்னும் சுவாரஷ்யமான நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். 


#வியன் என்றும் நாட்டின் நீதிபரிபாலனத் துறைக்குத் தலை வணங்குபவன்.

பலருக்கும் பலவித கருத்துகள் இருக்கலாம்; ஆனால், கடைசியில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது; அதை மதிப்பவன் நான்.

சொல்லி முடிப்பது என்னவென்றால்.... இன்னிக்கு சரினா, அன்னிக்கும் சரிதாங்கோ! 😎


- நன்றி பெர்னாமா, FMT, The Vibes

Wednesday, 12 May 2021

I Love You செல்லங்களா !

 



கொஞ்ச நாளாவே நான் சீக்காளி,

ஆறுதலா வந்துச்சே 'குக்கு வித் கோமாளி' !

மனசுல உட்கார்ந்துச்சு போட்டு நாற்காலி,

பார்க்காதாவன் அத்தன பேரும் நிச்சயமா ஏமாளி!

 

இத்தன வருஷ வாழ்க்கையில, இப்படி ஆனதேயில்ல!

'கொத்தடிமையா'..... கேட்டாக்கா யாரும் உரிமையா..

சொல்வேன்டா நான் பெருமையா!

 

நீதிபதி தான் பேரு, சீசன் மொத்தமும் ஜோரு,

அட்டகாசம் தான் பாரு,  தொழில்னு வந்துட்டா தாருமாரு!

ஆனாரே மாமு நம்ம அப்பாங் தாமு,

வெங்கடேஷ் Bhat-டு சேட்டையில ரொம்பவே good-டு!

இது எதிர்பாரா திருப்பம், ஆனா எல்லாருக்கும் அதுவே விருப்பம்!

 

அலட்டிக்காத anchor Rakshan-னே..

உனக்கு replacement இருந்தா அது வெறும் fiction-னு!

இதை விட உனக்கு ஏதுடா ராசா caption-னு?

 

சீசனோட முதுகெலும்பு புகழு, எங்க பாசத்துல விழுந்து நீ தவழு!

Reaction-ல என்னமா பின்றான், ஒருத்தன் விடாம எல்லாத்தையும்  'கொல்றான்!'

உனக்கு போட்டி இங்க யாரும் இல்ல, நாடே காத்திருக்கு இனி உன் பேர சொல்ல!

 

கிராமம்னு வந்துட்டா 'சாட்டையை சுழட்டும்' Shakeela Mummy,

எங்க பாசக்கார ஆத்தாவ பிடிக்காதவங்க ரொம்பவே கம்மி!

 

சீண்டுறதுனா பாபா மாஸ்டருக்கு அவல்,

அவரோட சமையலும் 'அவிய'லும் வேற லெவல்!

 

Judge-யையே வெச்சு செய்யும் ஏகலை, தனி track-ல நம்ம மணிமேகலை!

Sporting-ல சிங்கம், Ashwin-னோட அக்காடா எங்க தங்கம்!

 

சககலா வல்லவன் மதுரை முத்து,

தவிர்க்க முடியாத அனுபவம் எங்க சொத்து!

 

காரக்குழம்பு கனி, அடிச்சு தூக்குச்சே Prize Money!

Master பண்ணாலும் தொல்லை, கனி sporting-கு இல்லையே எல்லை!

 

5 அடி 11 அங்குலம் Ashwiney... இன்னிக்கு தேதிக்கு நீ தான்டா win-னு!

கலை- சமையல்னு பன்முகம் 'குலு குலு' இனிமே உனக்கு ஏறுமுகம்!

 

செல்லக்குட்டி சிவாங்கி, ஊரே உன்னையத் தாங்கி,

இனி கையே வலிக்கப் போகுது வரிசையா விருதுகளை நீ வாங்கி!

 

பால் மனசு தீபா, எங்கள தெறிக்க விட்டியே ஷபா...!

சிரிச்ச.. சிரிச்ச... சிரிச்ச... கடைசில எங்க மனசுல இடம் பிடிச்ச!

 

புகழுக்கே புகழ் சேர்த்த பவித்ரா, உன் நல்ல மனசுக்கு, அடிச்சு நவுத்துரா!

Lockdown சமையல் உனக்கு புதிய களம், இனி சினிமாவுல நீ வருவ வலம்!

 

திவ்யமான Darsha உன் திறமை என்ன சிருசா?

சமைக்க வராட்டி என்ன, இல்லையா ஒன்னும் Industry-ல பின்ன?   

 

பாதியில வந்த ரித்திகா,

நீ ஹீரோயின் meterial அட போக்கா!

 

வெள்ளமனசு 'வெட்டுக்கிளி' பாலா, உன் Counter-ல சாயாத ஆளா?

வியக்கிறேன்டா கண்டு உன் திறமை, நீ தான்டா எங்க பெருமை!

 

வேணுமா பழைய ஜோக்கு, தங்க துரையை நீ நோக்கு!

கடிச்சாலும் வாயில பாக்கு கவலையெல்லாம் போக்கு!

 

முடி வெச்ச சரத்து, முகவரி வந்துருச்சு, partner உன் கவலையை துரத்து!

கலாய்ச்சா சிரிப்பான், உனக்கொன்னுனா மொத ஆளா வந்து நிற்பான்  !

 

கொஞ்சும் தமிழ் சுனிதா, ஒரு வகையில நீயும் வீர வனிதா,

நம்பு, அமையும் காலம் இனி உனக்கு இனிதா!

 

'தண்ணிப் பாம்பு' சக்தி, அவனுக்குள்ளேயும் இருக்குடா  தொழில் 'பக்தி'

Starting தான் trouble-லு, Finishing-ல வந்துட்டான் ஒரு லெவலு!

 

மைதாவ மாத்திப் போட்ட Paru, 4 episode -ல நீ பண்ணது சீரு,

வாய்ப்பிருந்தா எழுந்து வா கொண்டு வீறு! 

 

அப்பப்போ வருவான் பப்பு, முகத்தைப் பார்த்தாலே சி(ரி)ப்பு!

போடாத கணக்குத் தப்பு, அவனுக்கும் கிடைக்கும் ஒரு நாள் கப்பு!

 

வந்த episode ஒன்னுதான்,  இருந்தாலும் குரேஷி  அதுல வின்னுதான்!

வரும் சீசன்ல ஆடுமா நீ நின்னு தான்!

 

அடேய், எடிட்டிங்கு என்னமா ரைமிங்கு,

அடிக்கிறியே பட்டு பட்டுனு டைமிங்கு!

 

பார்த்திபன் கூட மெகா டீம் கைக்கோர்ப்பு,

உங்க எல்லார் கைக்கும் போடனும் தங்கக் காப்பு!

 

5 மாசம் பயணம் அதுக்குள்ள முடிஞ்சதே,

நினைக்கும் போதே மனசு இடிஞ்சதே!

 

இனி entertainment-க்கு நான் எங்க போவேன்?

(அடுத்த சீசன் வரைக்கும்) பழசை திரும்பப் போட்டு சிரிச்சு சிரிச்சே 'சாவேன்!'

 




#வியன் தலைவணங்குகிறான் !

(மோகனதாஸ் முனியாண்டி, கோலாலம்பூர், மலேசியா )

Saturday, 8 August 2020

MCO Magic : வெளி வந்த ஓவியத் திறமை ! ( பகுதி 2)

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, MCO காலத்தில் ஓவியத் திறமையைக் காட்டிய இளசுகளை முந்தையப் பதிவில் கண்டோம். 

அப்பதிவுக்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. 

அவர்களை வானொலி நேர்காணலுக்கு கேட்கும் அளவுக்கு அப்பதிவு பலரையும் சென்றடைந்து, அக்கண்மணிகளுக்கு நல்ல முகவரியைத் தேடித் தந்தது.

#வியன் உள்ளபடியே அகம் மகிழ்ந்தான். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பகுதியில் வியன் சந்திக்கிறான். இம்முறை இருவர் இடம் பெருகிறார்கள். வாருங்கள் அவர்களைச் சந்திப்போம்....






பேராக், பாரிட் புந்தார் வாழ் இல்லத்தரசி புவனேஸ்வரி முனியாண்டி.

வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பெடுக்கிறார்.

நீண்ட நாட்களாக touch விட்டுப் போன தனது ஓவியத் திறமையை இந்த MCO காலத்தில் கையிலெடுக்க, ஒரே பரபரப்பாகி விட்டார். 

இடைநிலைப் பள்ளியில் இருந்தே ஓவியமென்றால் இவருக்கு ஆர்வம். 

ஆனால், பாருங்களேன் முறையான பயிற்சி வகுப்பு எதுவும் இவர் போயிருக்கவில்லை.

இவராக ஆர்வம் கொண்டு வரைந்துத் தள்ளியிருக்கிறார்.

ஓவியத் தட்டை  இவர் மீண்டும் கையிலெடுக்க, அவற்றின் output கண்டு கணவரும் குடும்பமும் ஆச்சரியமும், பெருமிதமும் அடைந்திருக்கின்றனர்.

அவரின் கைவண்ணம் இதோ.....














"என்னம்மா, இது நீயே நீயா?" என கணவர் கேட்காதக் குறை தான் 😛 

சக ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள் என எல்லாருக்கும் சந்தோஷம், பூரிப்பு.

இத்தனைக்கும் பொழுதுப் போக்காகத் தான் செய்கிறார்; ஆனால் அத்தனை நேர்த்தி.

வரும் காலத்தில், டியூஷன் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஓவியக் கலையைக் கற்றுக் கொடுக்கும் திட்டமும் இருக்கிறது புவனேஸ்வரிக்கு.

இவருக்குப் பிடித்ததே, #MandalaArt ஓவியங்கள் தானாம்; தவிர, மற்றவர்களின் முகங்களை ஓவியமாகத் தீட்டுவதும் பிடிக்குமாம்.


எளிதான Mandala Arts ஓவியங்களை வரைவதெப்படி என்பதை YouTube Channel-லில் இவர் விளக்குகிறார்.

👉 இங்கே சொடுக்கவும்  👈

MCO, உங்கள் திறமையை உங்களுக்கே நினைவுப் படுத்தியிருக்கிறது புவனேஸ்.





Gear, போட்டு விட்டீர்கள், எங்கும் நிறுத்தாதீர்கள்!

பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்; முடிந்தால், உங்கள் திறமை மென்மேலும் வளர்த்துக் கொள்ள பயிற்சிகளில் பங்கெடுக்கலாம்.

யாருக்குத் தெரியும், உங்கள் ஓவியங்களே உபரி வருமானமாகவும் ஆகலாம் அல்லவா?

வியன் வாழ்த்துகிறான் .....



செல்வா இலெட்சுமணன் 


பேராக், தெலுக் இந்தான், செப்ராங் தோட்டத் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் செல்வா.

"ஒரு வருடமாக இந்த ஓவியங்களை வரைஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆனா குறைவு தான் வேலைப் பளுவுனால..." என்றார்.

என்றாலும், MCO காலத்தில நிறைய செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது செல்வாவுக்கு. 

ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன.

"என்னோட ஓவியங்கள் எல்லாம் colorful-லாகவும் basic-காகவும் தான் இருக்கும்" என தொடர்ந்தார்.

colorful and basic ஓவியங்கள் பார்க்க நன்றாக இருக்கும் எனக் கூறிய செல்வா, அவற்றை வரைந்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கிறார்.

பார்ப்பவர்களுக்குப் பிடித்துப் போகவே, அதே மாதிரி செய்யச் சொல்லி ஆர்டர் கொடுப்பதாக, சிரித்துக் கொண்டே சொன்னார்.


திறமை இருந்தால் வரவேற்பு வராமலா இருக்கும்?


ஆர்டர்கள் வருவதால், அவற்றுக்கான வேலைப்பாடுகள் பரபரப்பாகப் போய்க்  கொண்டிருப்பதாக செல்வா சொன்னார்.

வியனும் பார்த்தான் செல்வாவின் ஓவியங்களை.

அவர் சொன்னதைப் போலவே அவை அனைத்தும் colorful-லாகவும் basic-காவும் தான் உள்ளன.

பார்த்தவுடனேயே ஈர்க்கக் கூடிய வகையிலும், நம்முடன் தொடர்புப் படுத்திக் கொள்ளும்படியாகவும் அவை அமைந்துள்ளன.

ஆக, அண்மையில் இவர் வரைந்த ஓவியம் இது 👇💛









பள்ளித் திறந்து விட்டதால், வேகத்தை நிறுத்தி விடாதீர்கள்.

Momentum முக்கியம், அதுவும் கலைத்துறையில் ரொம்பவே முக்கியம் அல்லவா?

நேரம் கிடைத்தால் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

மாணவர்களும் பயன் பெறட்டுமே!



- முற்றும் !


Friday, 7 August 2020

MCO Magic: சும்மா கிழி குட்டீஸ் !

"அடேய், எப்படா இந்த ஸ்கூலு தொறக்கும்? அறந்தவாலுங்க தொல்லைத் தாங்கல. இதுங்கல வெச்சிக்கிட்டு டீச்சருங்கலாம் எப்டி தான் சமாளிக்கிறாங்களோ, தெய்வம்டா அவுங்க!"

என்ற 'கடுப்புக்' குரல்கள் தான் நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் எல்லா வீடுகளிலும் கேட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால்,  அது  தவறு!

உண்மை நிலவரம் அதுவல்ல...

ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பிள்ளைகள் சுட்டித் தனமும் குறும்புமாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பள்ளிப்  பிள்ளைகள் சமத்தாகவே இருந்திருக்கிறார்கள்.

பள்ளிக்கு தான் விடுமுறையே தவிர, பாடங்களுக்கும் பாடம் சார்ந்த அவர்களின் நடவடிக்கைகளுக்கும் அல்ல!




#வியன் தோட்டம் வந்த புகைப்படங்களும், காணொளிகளும்,  விவரங்களுமே அதற்கு சாட்சி.

தங்களிடத்தில் உள்ள பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி பெற்றோர்களின் பாராட்டுகளை அள்ளியதோடு, உள்ளபடியே அவர்கள் முகத்தில் புன்னகையுடன் கூடிய ஆனந்தக்  கண்ணீரை செல்லக்  குட்டிகள் வரவழைத்திருக்கின்றனர்.

வாருங்கள், நமது MCO சமத்துக் குட்டிகள் சிலரைக்  காண்போம்...



சிலாங்கூர், ரவாங் தமிழ்ப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மாணவியான தீபிகாஸ்ரீ, விக்னேஸ்வரன் சுகுனேஸ்வரி தம்பதியரின் ஒரே புதல்வி.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் Whatsapp, Zoom வழியாக வீட்டில் பாடங்களும், படிப்பும் போக, தீபிகாவுக்கு ஓய்வே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய 'பொறுப்புகள்'.  

அந்த அளவுக்கு எதையாவது செய்து கொண்டே இருந்திருக்கிறார்.  

வீட்டில் சும்மா இருக்கிறார் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது. 

"என் மகளிடம் உள்ள பெரிய கூடுதல் பலமே, என்ன விஷயம் கற்றுக் கொடுத்தாலும் சளிக்காமல் முகம் சுளிக்காமல் செய்வார். ஒரு விஷயத்தை இப்போதே செய்யச் சொன்னால், அதை பட்டு பட்டென செய்திடுவாள். அதனால் தான் பள்ளியிலும் சரி,  வெளியிலும் சரி எல்லா நடவடிக்கைகளிலும் பங்கேடுப்பார்." என விக்கி தொடர்ந்த போது அவரின் குரலில் ஒரு பெருமிதம் வெளிப்பட்டது.

8 வயது தான் ஆகிறது. இருந்தாலும் விட வில்லையே....


வீட்டில் சின்ன சின்ன சமையல் அதாவது முட்டைப் பொரியல், ஐஸ் கிரீம் செய்வது என்பதை அம்மாவின் உதவியுடன் செய்யக்  கற்றுக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற பல விஷயங்கள்...


வீட்டில் இருந்தால் என்ன, என் திறமைகளைக் காண்பிக்கிறேன் பாருங்கள் என Zumba நடனப் பயிற்சியில் பங்கேற்பதென்ன, தமிழ் வாசிப்பில் ஈடுபடுவதென்ன, பியானோ வாசிப்பதென்ன, ஆசிரியர் தின வாழ்த்து அட்டையைத் தயாரிப்பதென்ன, அன்னையர் தின வாழ்த்து அட்டை வடிவமைப்பதென்ன, அம்மாவுடன் சமைப்பது, சமைக்கக் கற்றுக் கொள்வதென்ன என படு பிசியாகி விட்டார்.

தவிர, தேசிய அளவிலான வாசிப்புத் திறன் போட்டி, சிறார்களுக்கான நடனப் போட்டி என பெரிய ரவுண்டு வந்து விட்டார்.

கடந்தாண்டு கூட, மலேசியாவை பிரதிநிதித்து அனைத்துலக அறிவியல் புத்தாக்க போட்டியில் கலந்துக் கொண்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமைச் சேர்ந்திருக்கிறார். 

கொரியாவில் நடைபெற்ற போட்டியிலும் பங்கெடுத்திருக்கிறார்.

தீபிகா ஸ்ரீ, தமிழக சின்னத்திரை நடிகர் சசிதரன் வரை பிரபலமாகியிருக்கிறார்.

என்ன நம்ப முடியவில்லையா? 

சசிதரனின் அண்மைய Insta நேர்காணலின் போது, நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், தீபிகா ஸ்ரீயின் பெயரை அவர் பெருமையுடன் mention செய்தார். என்னவாக இருக்கும் என ஆர்வம் தாங்கவில்லையா?

கீழே காணொளியைப் பாருங்கள்.




இவரின் தந்தை, மகளின் புகைப்படங்களையும், காணொளிகளையும் தேடி தேடி #வியன் தோட்டத்திற்கு அனுப்ப பட்ட கஷ்டத்தில் இருந்தே தெரியவில்லையா, மகள் எவ்வளவு பரபரப்பாகி இயங்கி வந்திருக்கிறார் என்று?

இதே பரபரப்பு தொடர வேண்டும் தீபிகா...

பள்ளி நாட்களில் பாடங்களில் கொடுக்கும் அதே முக்கியத் துவத்தை இது  போன்ற நடவடிக்கைகளிலும் கொடுத்து திறமையை மென்மேலும் வளர்த்துக்  கொள்ளுங்கள்.

பெற்றோர்கள் நிச்சயம் உடன் வருவர்!



Tharshvin & Manisshaa 

Johor Bahru, Bukit Indah-வில் வசிக்கும் சிவமணி - ஈஸ்வரி தம்பதியரின் இரு செல்வங்கள். 

மூத்தவர் தர்ஷ்வின் , வயது 9. 
கடைக் குட்டி மனீஷா, வயது 6.

சிவமணி சிங்கப்பூரில் நிறுவனமொன்றில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றி வருகிறார். 

கொரோனா காரணமாக 4 மாதங்களாக மனைவியையும் பிள்ளைகளையும் வந்து பார்க்க முடியாத சூழ்நிலை அவருக்கு.

மூன்றாம் வகுப்பு தான் என்றாலும் தர்ஷ்வின் செய்த நடவடிக்கைகளைப் பார்த்தால் அசந்துப் போவீர்கள். 

காணொளிகளை நீங்களே பாருங்கள்.





அண்ணனுக்கு தானும் சளைத்தவர் அல்ல என்கிறார் மனிஷா

நிர்வாக குமாஸ்தாவாக வேலை செய்து வந்த ஈஸ்வரியோ, மகன் பிறந்ததும் பணியில் இருந்து விலகி முழு நேர இல்லத்தரசியாகி விட்டார். 

பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவருக்கு நேரம் போய் விடுகிறது.

வாரக்  கடைசியில் பூப்பந்து விளையாட கூட்டிச் சென்று விடுகிறார். தவிர நீச்சலடிக்கவும் கற்று வருகிறார்கள். ( சந்தடி சாக்கில் ஈஸ்வரியும் நீச்சல் வகுப்பில் இணைந்து கொள்கிறார்) 

இது, சிவமணியின் லிவர்பூல்  குடும்பம்
தர்ஷ்வின் பையன் சற்று வித்தியாசமாகவே தான் இருக்கிறான். ஆடம்பரக்  கார் மாதிரிகளைச் சேகரித்து வைப்பது ஐயாவின் பொழுதுப் போக்காக இருக்கிறது.

படித்து  முடித்ததும், வெற்றிப்  பெற்ற தொழில் அதிபராக வர வேண்டும் என்பதே இவரின் எதிர்கால ஆசையாம். 

எப்படியாவது BMW காரை வாங்கிட வேண்டும் என்ற தீராத எண்ணம் வேறு. கார் விஷயத்தில் அப்பாவைப்  போலவே பிள்ளை என சொல்லிச் சிரிக்கிறார் ஈஸ்வரி. ( ஏன்பா, இந்த வயசல நாங்கள கால்ல சிலிப்பர் போடாம எஸ்டேட்ல சும்மா சுத்திட்டுல்ல இருந்தோம்)

மனிஷாவின் பொழுதுப் போக்கு சமையல் சாமான்களுடன் விளையாடுவது. பெரியவளானதும் சமையல் chef ஆக அமருவதுதான் இவரின் குறிக் கோள். 

அம்மணிக்கு, ஆட்டமென்றாலும் விருப்பமாம். தினமும் படுக்கச் செல்லும் முன் கதைப் புத்தகங்களைப்  படித்து விட்டு தான் செல்கிறாள் குட்டி பாப்பா.

ஓய்வு நேரங்களில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து Lego பூட்டுவதிலும் கழிக்கின்றனர்.

பள்ளித் திறந்து விட்டதால், படிப்பு மட்டுமே என்று இருந்து விடாதீர்கள் கண்ணுங்களா....




Naomi Xavienna Edwin & Isabel Xavienna Edwin

மூத்தவர் Naomi, வயது 9. ரொம்பவும் தனித்தே இருக்க விரும்புவர். ஆனால், சமையல் ஆர்வம், hmmm... பெற்றோரே ஆச்சரியப்பட்டு போகும் அளவுக்கு அசத்தி விடுகிறார்.

இரண்டாவது பிள்ளை Isabel. 6 வயது தான், ஆனால் பேச்சில்... என சொல்லி சிரிக்கிறார் தாயார் சவுரியம்மாள் ராயப்பன் ( அட நீங்க தினமும் வானொலியில் கேட்கும் நம்ம ராகா செய்தி வாசிப்பாளர் தாங்க!)


Naomi-கு You Tube-பில் சமையல் channels-களைப் பார்க்க விருப்பம். 

குறிப்பாக Anna Olson & Paul Hollywood ( வேற லெவல் தான் போம்மா நீ) எதிர்காலத்தில் கேக் செய்வதில் சிறந்தவராக வலம் வரவேண்டும் என்பதே இவரின் ஆசை.

மூத்தப் பிள்ளையின் சமையல் ஆர்வத்தைக் கண்டு தான் பெற்றோர் இந்த சமையல் Chanel-லைத் தொடங்கியிருக்கின்றனர். 

இருவரும் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், ஆனால் வீட்டில் மிகக் குறைவாகவே தமிழில் பேசுவதால்,  தமிழில் அதிகம் பேச ஊக்குவிக்கும் முயற்சியாகவ்வும் இது அமைகிறது. 

ஆக, இந்தச் சமையல் நிகழ்ச்சி மூலம் பிள்ளைகள் தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள். 



இதன் வழி ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்திருக்கிறார்கள் சவுரியும் கணவர் Edwin -னும்.


இன்னும்  ஏராளமான வீடியோக்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

பள்ளித் தொடங்கி விட்டதால் நிறுத்தி விடாதீர்கள் குட்டிகளா....

வாரக்  கடைசியில், பெற்றோரிடம் அடம் பிடித்தாவது ஏதோ உங்களுக்குத் தெரிந்தவற்றையோ அல்லது ஆர்வத்துடன் புதிதாகக் கற்றுக் கொண்டதையோ சமைத்து அசத்தி விடுங்கள். 

#வியன் விரைவில் வருவான்...... 



ஹரேஷ் & கீர்த்திஷா கென்னடி 



பேராக், கிரீக்கைச் சேர்ந்த கென்னடி ஆறுமுகம் - பரிமளா தம்பதியரின் முதலிரண்டு செல்வங்கள் ஹரேஷ் மற்றும் கீர்த்திஷா.

ஹரேஷ், கிரீக் குழுவகத் தமிழ்ப் பள்ளியில் ஐந்தாமாண்டு படிக்கும் வேளை, கீர்த்திஷா மூன்றாம் ஆண்டில் பயில்கிறார்.

படிப்பு மட்டுமின்றி இன்னபிற புறப்பாட நடவடிக்கைகளிலும் பிள்ளைகள் சமத்தாகவே இருக்கின்றனர். 

MCO காலத்தில் அதைப் பெற்றோர்களும் பார்த்து ரசித்துப் பூரிக்கும் அளவுக்கு இருவரும் கலக்கியிருக்கிறனர்.

வீட்டில் இருக்கையில், இயங்கலை வகுப்புகள் போக,  நிறையப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார்கள். 

பள்ளிகள் நடத்திய போட்டிகள் மட்டுமின்றி அரசு சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த போட்டிகளிலும் பங்கெடுத்துத் திறமைகளைக் காட்டியிருக்கின்றனர்.

பிள்ளைகளின் திறமைகளைக் கண்ணில் காணும் போது பெற்றோர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷமே அலாதி அல்லவா? 

கென்னடிக்கும் இருக்காதா என்ன? மனிதர் ரொம்பவே சந்தோஷம் அடைந்திருக்கிறார்.

பிள்ளைகள் குறித்து பேசியவர் முக்கியக் கருத்தைப் பதிவிட்டார்.

" போட்டிகள்ல ஜெயிக்கிறது தோற்கிறது  முக்கியம் இல்ல. கலந்துக்கிறது தான்!. அதுல நல்ல அனுபவம் கிடைக்குது. அதே சமயம் அறிவுத் திறனை வளர்க்கனும். அதுவே பெரிய விஷயம்!"


... என கென்னடி, பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும் மன உறுதியையும் ஊட்டி விடும் வகையில் பேசினார். 

( எல்லா பெற்றோர்களும் இந்தப் பக்குவத்திற்கு வந்து விட்டால், பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசுவது அறவே குறைந்து விடும்)

வியன் தோட்டத்துக்கு வந்த புகைப்படங்களையும், காணொளிகளையும்  பார்த்த போதே விளங்கியது.


கீர்த்திஷாவின் கைவண்ணத்தைக் கண்டீரா? 


"நான் மட்டும் சளைத்தவனா என்ன ?" என்கிறாரோ ஹரேஷ் 😛  



சரி, பள்ளி தொடங்கி விட்டதே, எல்லாம் எப்படி போகிறது எனக் கேட்ட போது.....

" 3-4 மாசமாக நண்பர்களைப் பார்க்காம இருந்த ஏக்கம். ரொம்ப ஆவலா பள்ளிக்குப் போயிருக்காங்க. சொல்லி அனுப்பிருக்கிறோம். SOP-லாம் follow பண்ண சொல்லி!" என்றார் பொறுப்பின் உருவமாய் கென்னடி. 

சரிங்க, கென்னடி, MCO காலத்தில் பிள்ளைகளுக்குக் கொடுத்த அதே ஒத்துழைப்பை, ஊக்கத்தைத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள். 

வியன் வாழ்த்துச் சொன்னதாக சொல்லி விடுங்கள்.



ஸ்ரீ குருபரன் & கீர்த்திகா ஸ்ரீ 


இருவரும், ஜொகூர், லாபிஸ் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீ வேல் சுப்ரகாந்த - உமா தேவி தம்பதியரின் மூத்த செல்வங்கள்.

அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் குட்டிகள் இருவரும் பெற்றோரைப் போலவே சமய நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

திருமுறை ஓதும் போட்டிகளில் பங்கெடுத்து பரிசும் வாங்கியிருக்கின்றனர்.

"மீன் குஞ்சுக்கு நீச்சல் பழகித் தர வேண்டுமா என்ன?"



கிருத்திகா ஸ்ரீ


குட்டி ஸ்ரீ வேல் 



கொரோனா விழிப்புணர்வுப் பற்றி ஸ்ரீ குருபரன்

கண்ணுங்களா, உங்க அப்பாரு அந்த காலத்துல ( ஏன் இப்போ கூட தான்) எவ்வளவுப் பெரிய பாடகர் என்பதை இந்த #வியன் தாத்தாவிடம் கேளுங்கள்,  புட்டு புட்டு வைப்பான். 

வியனுக்கு பழசெல்லாம் நினைவுக்கு வந்துப்  போகின்றனவே! 😞


Lakshmi Shree 

சிலாங்கூர், Kinrara தமிழ்ப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு  கம்பர் வகுப்பில் பயிலும் லக்ஷ்மி ஸ்,ரீ சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 

பெற்றோர் முனீஸ்வரன் மகேஸ்வரி தம்பதியர்.

MCO காலத்தில் தனது அத்தைகள் கொடி -இளவரசி பெருமாள் ஆர்டர்கள் காரணமாக இருவரும் சமையல் கட்டில் பிசியாகி விட, இவரும் கூடவே இருந்து உதவியிருக்கிறார்; கற்றுக் கொண்டிருக்கிறார்.


அத்தை இளவரசி இப்படி வியனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பக்கத்தில் இருந்து குரல் வருகிறது.." அத்தோய், வாங்க கேக்கு செய்யலாம், வாங்க...!" என்று


" சில சமயத்துல ஆள், நமக்கெல்லாம் காத்திருக்காது. அவுங்களா போய் மசாலா டீ போட்டு குடிப்பாங்க. தோசை சுடுவாங்க!" என்றார் இளவரசி  சிரித்துக் கொண்டே...

MCO காலத்தில் சொந்தமாக ரெசிப்பியும் செய்திருக்கிறார் லக்ஷ்மி ஸ்ரீ. 

மைசூர் பார்க் (வியனின் favorite)


You Tube-பில் எப்படி செய்வது என்பதைப் பார்த்து, அவரே கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி  வந்து தயார் செய்திருக்கிறார்.


தவிர,  Rice Cooker-ரில் Fried Rice ( அதாங்க பிரட்டுன சோறு) செய்து தாத்தாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

எல்லாருக்கும் சமையல் வந்து அத்தனை சுலபத்தில் வந்து விடாது. 

இவருக்கு இந்த சிறு வயதிலேயே ஆர்வம் இருக்கிறது.

பெற்றோர் போக, உங்கள் பங்குக்கும் ஊக்கமூட்டி வளர்த்து விடுங்கள் அத்தைகளா.....


தீபாவளிக்கு வியன் தாத்தா வீட்டுக்கு வருவார்.... 😛




Yaalinie , Yasheni & Aarathana Thiagarajan


கோலாலம்பூரைச் சேர்ந்த உடன்பிறப்புகள் யாழினி, யாஷினி, ஆராதனா.

தந்தை தியாகராஜன்  - தாயார் வசந்த குமாரி .

யாழினி 

MCO காலத்தில் ஆசிரியர் தின வாழ்த்து அட்டைகளைச் செய்திருக்கிறார்; அரசு சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த பாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

வாசிக்கும் பழக்கம் இயக்கத்தில் ஈடுபாடு காட்டியதுடன் டெங்கியை ஒழிப்போம் சுவரொட்டியையும் தயாரித்திருக்கிறார்; கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியும் உண்டு.

முக்கியமாக வீணை ஆசிரியரின் பிறந்தநாளுக்கு வீணையில் பிறந்தநாள் பாடல் வாசித்துக் காட்டி நெகிழச் செய்தார்.






தவிர,  பூச்சாடிகளை சொந்தமாகத் தயாரித்தல், மலேசியாவின் முக்கியப் பெருநாட்கள் குறித்து folio செய்தல் என பரபரப்பாக இயங்கியிருக்கிறார் யாழினி. 

யாஷினி

Bride hand fan செய்திருக்கிறார். சமையலிலும் ஒரு கைப் பார்த்திருக்கிறார். Hot dog cheese bread இவரின் சொந்த ரெசிப்பியாம்.




ஆராதனா 


தமிழ் இலக்கியம், செடிகள், அறிவியல், தமிழ் எழுத்துகள் குறித்த folio செய்ததோடு,
தந்தையர் தின வாழ்த்து அட்டையையும் தயாரித்தார்.

தியாகா - வசந்தா தம்பதியரின் 3 பிள்ளைகளும்  சமத்து என்பதை இந்த MCO காலத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். 


ஆர்வம் கொண்டு பிள்ளைகள் மேற்கொண்ட பயன்மிக்க நடவடிக்கைகளில் சில ஆசிரியர்கள் கொடுத்த ஐடியா; பெற்றோர்களின் வழிகாட்டுதலும் உண்டு; You Tube  உதவியும் தான்.

பிள்ளைகளிடத்தில் இலை மறைக் காயாக இருந்த பல்வேறு திறமைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை MCO ஏற்படுத்திக்  கொடுத்ததைச் சொல்லும் போது கிட்டத்தட்ட நெகிழ்ந்து விட்டார் தியாகராஜன்.


பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தவராக அவர் சொன்னார்.


என்ன இருந்தாலும் இயங்கலை வகுப்புகளைத் தவறவிட்டதே இல்லை என அவர்களின் கடமைத் தவறாமை குறித்தும் சொல்லி முடித்தார் நம்மூர் கலைஞருமான தியாகா. 
 


லேகாஷினி & திரிஷாந்


ஜொகூரைச் சேர்ந்த விமலாதித்தன் சிவசக்தி தம்பதியரின் செல்வங்கள். 


ஊரடங்கு உத்தரவு, பிள்ளைகளையும் வெகுவாகவே ஓய்வெடுக்கச் செய்தது என தொடங்கியவர், அடுத்து சீரியசானார்.

மூத்த மகள் லேகாஷினி ஆண்டு 5 இல் பயில்கிறாள். 

பள்ளியில் நடைபெற்ற கலையியல் கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பூமியைக் காப்போம் எனும் அழகிய ஓவியம் வரைந்தார்.

பள்ளி அளவில் நடத்தப்பட்ட அப்போட்டியில் ஆண்டு 1 முதல் 6 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்று மின்னியல் சான்றிதழைப் பெற்றனர்.

முதலாமாண்டு மாணவனான திரிஷாந்த் விடுவாரா? அவரும் களத்தில் இறங்கி விட்டார்.

குழந்தைகளுக்கு ஆர்வம் தானே முக்கியம்!



பெற்றோர்கள் விரும்புவதும் அதைத் தானே!

MCO காலமென்றாலும் பிள்ளைகளின் நேரம் நல்வழியில் சென்றது பெற்றோருக்குக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர்களின் சுட்டித் தனமும் சற்று முடங்கியதாக சிரித்தார் ஆசிரியை சிவசக்தி. 😁😁


E. Sharenya 

பினாங்கு ஈஸ்வரன் -  ஜெயந்தி தம்பதியரின் கடைக்குட்டி செல்லம், ஷரண்யா ! 


குடும்பமே விளையாட்டுக் குடும்பம்.

ஆஹா, அவசரப்படாதீர்கள்... 

விளையாட்டில், ஓட்டத்தில், தற்காப்புக் கலையில் என ஆரோக்கியத்தைப் பேணும் குட்டியான cute-டான குடும்பம் என்று சொல்ல வந்தான்  வியன்.


அண்ணனைப் போன்றே கராத்தே Kids-சான  ஷரண்யாவும் நேரம் கிடைக்கும் போது முறையான கராத்தே பயிற்சிகளுக்கு சென்று வருகிறார். 
இந்த MCO காலத்தில் சமத்துக் குட்டி, அவருக்குத் தெரிந்த அளவு, முடிந்த அளவு சிறிய தோட்டம் போட்டிருக்கிறார். 

விளைவு, வீட்டு முற்றத்தில் கண்ணுக்கழகான பூச்செடிகள். 

ஈஸ்வரனைக் கேட்டால், ஆரம்பத்தில் தோட்டம் போடுவதில் ஷரண்யாவுக்கு ஆர்வவே இல்லையாம்.

ஆனால் அம்மாவின் ஆர்வம் இவருக்கும் தொற்றிக் கொண்டு விட்டது.




அதுவே போக போக அவருக்கு பொறுப்புணர்வைக் கூட்டி விட்டது என்கிறார் 'என்றும் இளமை' பட்டத்திற்குச் சொந்தக்காரரான ஈஸ்வரன். 




தான் நட்ட செடிகள் மீதான பொறுப்புணர்வு.... சும்மா விடுவாரா, அண்ணனையும் செடி நட வைத்து விட்டார் ஷரண்யா.

அண்ணன் Thibasharen உடன் 

My dear Karate kids, வியன் தாத்தா nanti penang mari, kita pergi makan okay 👌




Shanantana Paramesivan 

ஆசிரியர் தம்பதியரான பரமசிவன் - ஷாலினியின் ஒரே செல்ல வாரிசு Shanantana.

MCO காலத்தில் 'சின்ன மேடம்' ரொம்பவே பிசி. 

வீட்டில் ஓவியம் வரைவது என்ன, கொரோனா குறித்து விழிப்புணர்வு காணொளி செய்வது என்ன, பாட்டு  பாடுவதென்ன..... 

பின்னி விட்டார் இந்தக் குட்டி ஷாலினி !

இவரின் ஓவியங்களை சற்று உற்றுப் பாருங்கள்.

இந்தச் சின்னஞ் சிறிய வயதில் இவர் வரைந்ததா என ஆச்சரியப்பட்டு போவீர்கள்!

வியனும் வியந்து தான் போனான்.

ஆனால், பெற்றோரின் கலைஞ்சானம் பிள்ளைக்கு வருவதில் ஆச்சரியமில்லையே என வியன் உணர்ந்தான். 




பாருங்கள்ள், சின்ன மேடம் 3 மொழிகளிலும் பின்னுகிறார்... 👇





வியன் சீக்கிரம் மலாக்காவோ அல்லது நேராக சுங்கைப்  பட்டாணியோ வந்தால், முதல் stop அங்கு தான் Shanantana !  💛

MCO தொடரில் வியன் மிகவும் திருப்தி அடைந்தப் பதிவு இது.

பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதில் பெற்றோர்கள் காட்டிய ஆர்வம், அவர்களின் மனநிறைவைப் புரிய வைத்தது.

அவர்களின் திறமைக் கண்டு பெற்றவர்களின் மனம் மகிழ்ந்ததை, பதிவாக்க வியனுக்கு கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுகிறான்.
பிள்ளைகள் கல்விக் கேள்விகளிலும், வாழ்விலும் வெற்றிப் பெற வியன் வாழ்த்துகிறான்.

வரும்  காலங்களில் அவர்களின் வெற்றியைக்  காணும் வாய்ப்புக் கிடைத்தால் வியனும் மகிழ்வான். நீங்களும் தாராளமான அந்த வெற்றிச் செய்திகளைப் பகிரலாம். 

அதுவரை MCO குட்டீஸ் & அவர்களின் Sporting பெற்றோர்களுக்கு வாழ்த்துகளுடன் விடைபெறுகிறான் #வியன் 

- முற்றும்