அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Thursday, 17 January 2013

கேளுங்கள் கேளுங்கள் கேளுங்கள்....!


Bawani KS

Listen...Listen...Listen 


துதான் இன்று இணைய சமூகம் மட்டுமின்றி நாட்டு மக்களால் அதிகம் பேசப்படும் வார்த்தை. என்ன காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அனைவரும் பார்த்திருப்பீர்கள் அந்த காணொளியை. பார்த்தவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கைத் தாண்டியிருக்கின்றது. பலருக்கு பலவாறான கருத்துகள். அதை பற்றி நாம் சொல்வதற்கொன்றும் இல்லை. அதுதான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்கு தரப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம்.

பவாணி.....யார் இவர்? 


ஒரே இரவில் You Tube-பை ஆக்கிரமித்து அனைவரும் இவர் பெயரை உச்சரிக்கும் அளவுக்கு சென்றது ஏன்?

கீழே உள்ள படத்தைப் பாருங்கள். காணக்கிடைக்காதக் காட்சி. ஆம், பல தசாப்த ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமோர் எழுச்சி.....

கருத்தரங்கப் பேச்சாளருடன் கருத்து மோதலில் பவாணி
கருத்துகளை பறிமாறிக் கொள்வதற்கு தான் கருத்தரங்கம் ; ஆய்வரங்கம் என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அத்தகைய கருத்தரங்கில் தனது கருத்தை முழுமையாகப் பதிவு செய்ய இந்த இரண்டாம் ஆண்டு சட்டத் துறை மாணவிக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.  நாகரீகமாகக் கூறினால் சற்று அநாகரீகமாக மறுக்கப்பட்டிருக்கின்றது.   பேசிக் கொண்டிருப்பவரை இடை மறித்து, அவரின் மைக்கை பறித்தால் வேறெப்படிச் சொல்வது?

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என சொல்வார்கள். ஆனால், மைக்கைப் பறித்தவரின் சிறப்பை அவர் நடந்து கொண்ட விதமே புலப்படுத்தி விட்டது. எனக்கு தெரிந்த வரை கருத்தரங்கில் அவரவர் தத்தம் கருத்துகளை முன் வைத்து அது குறித்து விவாதித்து சில சமயங்களில் ஒரு முடிவுக்கு வருவர் அல்லது தத்தம் கருத்துகளோடு நின்று விடுவர்.  ஆனால்,  கருத்தைச் சொல்ல வந்தவர், அதுவும் ஒரு பல்கலைக் கழக மாணவி, நாளைய தலைமுறை, பாதியிலேயே இடை மறிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

பவானி கூறியது சரியா தவறா என்பதல்ல இங்கு வாதம்.! தான் அறிந்தவற்றை, புள்ளி விவரங்களுடன் முன்வைக்க அவர் முற்பட்டிருக்கின்றார். அவர் பேசியது இராணுவ இகரசியங்களைப் பற்றி அல்ல... அதுவொரு தேசத் துரோகச் செயலும் அல்ல. மாறாக, பட்டப்படிப்பு மாணவி, தன்னுடன் தொடர்புடைய PTPTN கடன் பற்றியே பேசியிருக்கின்றார். ஒரு நடுத்தர குடும்ப சூழ் நிலையில் இருந்து பல்கலைக் கழகம் வரை சென்ற மாணவி இலவசக் கல்வியை பற்றி பேசுகிறார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதே மக்களுக்கு இலவசக் கல்வியை கொடுத்தால் என்ன தவறு? மற்ற நாடுகள் செய்கின்றனவே, நாமும் செய்யலாமே என்பது அவரது வாதம். அது அவரின் கருத்து.

அதே சமயம், 'பெண்களும் அரசியலும்' என்ற தலைப்பை வைத்துக் கொண்டு 'வீரத்திருமகள்' டத்தோ அம்பிகா ஸ்ரீ நிவாசனைப் பற்றியும், நாடே போற்றும் தேசிய இலக்கியப் பெருமகனார் Datuk A. Samad Said-டைப் பற்றியும்,  எதிர்கட்சித் தலைவர்களையுப் பற்றியும் தேவையில்லாமல் கேவலமாக பேசுவது குறித்து பவாணி கேள்வி எழுப்புகிறார்!

இந்த இடத்தில் அந்த பேச்சாளர் என்ன செய்திருக்க வேண்டும். பவாணி பேசி முடித்த பிறகு, அவருடைய கருத்துடன் ஒத்து போகவில்லை என்றால் தக்க ஆதாரங்களுடன் அதை நிரூபித்திருக்க வேண்டும். அப்படியே எதுவும் சொல்லத் தெரியா விட்டால், எதையோ சொல்லிச் சமாளித்து நடையைக்  கட்டியிருக்க வேண்டும். ஆனால், அவ்வளவு பேர் முன்னிலையில் உரக்கக் கத்தி, மைக்கைப் பறித்து, பவாணியின் கல்வி நிலையை பற்றி பேசியிருப்பது நியாயமாகப் படவில்லை. தனது வாய் 'கட்டப்பட்ட' நிலையிலும், முன்னே நிற்பவருக்கு மரியாதை கொடுத்து, தம்மை   குறை கூறினாலும் அவரின் பேச்சை அமைதியாக கேட்டாரே....அங்கே தான் பவாணியின் முதிர்ச்சி வெளிப்படுகிறது.

கண் முன்னே சக மாணவி ஒருவர் அப்படி நடத்தப்பட்ட போதும், அதை கைத்தட்டி ரசித்த மற்ற மாணவர்களை என்ன சொல்வது...? அதை பற்றி பேசுவது வீண் வேலை!.

சரி,  இச்சம்பவம் நமக்கு தரும் பாடம் என்ன?...

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன மத பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கின்றனர்...மலேசியச் சமுதாயமாக! யாருக்காக....?  'தைரியத்தின் ' அடையாளமான  பவாணிக்காக' ! அவருக்கு ஆதரவாக,  பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள் என அணி திரண்டுள்ளனர். ஒரே நாளில் உச்சத்திற்கு சென்று விட்டார் பவாணி. அவருக்காக  Facebook பக்கங்கள் உருவாக்கப்பட்டு , கண்டன அறிக்கைகள் வெளி வந்த வண்ணமுள்ளன;  பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட பாடல்கள், கவிதைகள் என You Tube-பும் அமர்க்களப்படுகிறது. இங்கே இனம் பேசவில்லை, மதம் பேசவில்லை, மொழியும் பேசவில்லை. தேசியம் பேசுகிறது!

நான் என்ன தவறா கேட்டு விட்டேன் ? 

வாய்மூடி மௌனியாக இருந்த காலம் மலையேறி விட்டது. அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட பேச்சுரிமை, கருத்து சுதந்திரத்திற்கு ஏற்ப குரல் கொடுப்பதில் தவறில்லை; அவ்வாறு குரல் கொடுக்க தயங்கவும் தேவையில்லை என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது.

மூளைச் சலவை அதாவது Brain Wash செய்ய அவர்கள் ஒன்றும் ஆரம்பப் பள்ளி மாணாக்கர்கள் கிடையாது; எதையும் சீர் தூக்கி பார்த்து சரி தவறு என பகுத்து செயல்படக் கூடிய ஆற்றல் படைத்த பல்கலைக் கழக மாணவர்கள் அவர்கள்! இந்த சம்பவத்தை வழக்கம் போல் கண்டித்தோம், அறிக்கை விட்டோம், என்ற வழக்கமான காட்சிகளுடன் மறந்து விடாது, இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாதிருப்பதை உறூதிச் செய்வதற்குண்டான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இறங்க வேண்டும்.

பவாணி 'குட்டி அம்பிகா'  ' எதிர்கால அம்பிகா' ' மாணவர் சமுதாயத்தின் எழுச்சி சுடர்' என்றெல்லாம் இன்று அழைக்கப்படுகிறார். அவரை பாராட்டுவதோடு விட்டு விடாமல், அவரின் மன தைரியம், திடமான மனப்பான்மை, வாதத் திறமை உள்ளிட்ட பண்புகளை இளையத் தலைமுறை முன்னுதாரணமாகக் கொண்டு, உத்வேகத்துடன் செயல் பட வேண்டும். நாம் அரசியல் பேசவில்லை. எதையுமே அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்று தான் வலியுறுத்துகிறோம். மாணவர் சமூகத்தின் குரல் இனி பன்மடங்கு ஓங்கி ஒலிக்குமென நம்புவோம்......

கேளுங்கள்....கேளுங்கள்....கேளுங்கள்.........!


 வீடியோவைப் பார்க்க  இங்கே சொடுக்கவும் : 

http://www.youtube.com/watch?v=D7DSRQB3L50

http://www.youtube.com/watch?v=dh0acgTlju4

No comments: