அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 15 August 2012

பூப்பந்து சகாப்தம் மறைந்ததே...!


Datuk Punch Gunalan ( 1944 - 2012 )


நாட்டின் பூப்பந்துத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்து வாழும் சகாப்தமாக வலம் வந்த டத்தோ பஞ்ச் குணாளன் இன்று நம்முடன் இல்லை. நீண்ட காலமாகவே புற்று நோயுடன் போராடி வந்த அந்த தங்கமகன் இன்று காலை தனது 68-ஆவது வயதில் இறுதி மூச்சை நிறூத்தி விட்டு நம்மிடம் இருந்து விடைப் பெற்று கொண்டு விட்டார்.

இன்றைய தலைமுறையினருக்கு Datuk Lee Chong Wei எப்படியோ, அப்படித்தான் Datuk Punch Gunalan 1970-ஆம் ஆண்டு தலைமுறைக்கு! ஒற்றையர் இரட்டையர் என இரு பிரிவுகளிலும் தனது அட்டகாசமான ஆட்டத்தால் உலக வரை படத்தில் மலேசியாவுக்கு முகவரி கொடுத்தவர்.

அதுவும் பஞ்ச் குணாளன் - Ng Boon Bee ஜோடி என்றாலே படு பிரபலம். அவர்களின் ஆட்டத்தை காண்பதற்கென்றே அரங்கில் கூட்டம் குவியும்.

பிரசித்திப் பெற்ற தோமஸ் கிண்ணப் பூப்பந்து, அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டி என எதையும் விட்டு வைக்காமல் வெற்றி கொடி நாட்டிய அதிரடி மன்னன்.
Datuk Punch Gunalan - Ng Boon Bee

தீவிர பூப்பந்தில் இருந்து ஓய்வுப் பெற்றவுடன் மலேசிய பூப்பந்து அணிக்கு தலைமை பயிற்றுநராக இருந்து மகத்தான சாதனைகளை புரிந்தவர். அவர் தலைமையில் தான் மலேசியா ஆகக் கடைசியாக 1992-ஆம் ஆண்டில் தாமஸ் கிண்ணத்தை வாகை சூடியது பலருக்கு நினைவிருக்கலாம். 

தனது ஆட்டத் திறமையாலும், பயிற்றுவிக்கும் முறையாலும் வெற்றிகளைக் குவித்த டத்தோ பஞ்ச் காலப் போக்கில் தனது நிர்வாகத் திறமையாலும் அனைவரையும் கவர்ந்தார். மலேசிய பூப்பந்து சங்கம் BAM-முடன் பணியாற்றிய அவர், கடைசியில் அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்திற்கே துணைத் தலைவரானது வரலாறு.

அவரின் வருகைக்குப் பிறகுதான் BWF பல்வேறு மாற்றங்களைச் சந்தித்ததென்பது குறிப்பிடத்தக்கது. சம்மேளனம் என பெயர் மாற்றம் காண்பதற்கு காரணமே அவர் தான் என அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டேன்.  15 புள்ளிக் கணக்கு இன்று 21-ராக மாறியதும் அவராலேயே என தெரிய வருகிறது.


கனிவு, பொறுமை, அரவணைப்பு, விளையாட்டு மீதான ஈடுபாடு, என நற்பண்புகளுக்கு பஞ்சமில்லாது செவ்வனே பணியாற்றுவது அவரின் இயல்பென்பதால், பொது உறவிலும் அவர் தலைச் சிறந்து விளங்கியதில் ஆச்சரியமில்லை.

இன மத பேதமின்றி அனைவரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்ற டத்தோ பஞ்ச் குணாளனின் மறைவு நாட்டுக்கு மட்டுமல்ல உலக பூப்பந்துத் துறைக்கே ஈடு செய்ய முடியா பேரிழப்பு.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போமாக...

1992-ஆம் ஆண்டில் தோமஸ் கிண்ணத்தை வாகை சூடிய போது                                           
1998-ஆம் ஆண்டு கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டி தொடர்பான நிகழ்வொன்றில் பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத்துடன் பஞ்ச் குணாளன்  

பஞ்ச் குணாளனின் குறிப்பிடத்தக்க வெற்றிகள்...

1969 - அமெரிக்கப் பொது டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1969 - SEAP விளையாட்டு ( SEA Games) - 2 தங்கம் ( ஒற்றையர் + இரட்டையர்)

1969 - தேசிய விளையாட்டு வீரர் விருது ( Olahragawan Negara) 

1971 - SEA Games - தங்கம் ( இரட்டையர் )

1973 - SEA Games - தங்கம் ( ஒற்றையர் )

1970 - தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டியில் முதல் பங்கேற்பு

1970 - Edinburgh காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம் ( இரட்டையர்)

1970 - பேங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம் ( ஒற்றையர் + இரட்டையர்) 

1970 - 1972 - டென்மார்க பொது பூப்பந்து இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1971 - அமெரிக்கப் பொது பூப்பந்து போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1971 - அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1971 - கனடா பொது பூப்பந்து போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1974 -  Christchurch காமன்வெல்த் போட்டி 2 தங்கம் ( ஒற்றையர் + இரட்டையர்)

1974 - தேசிய விளையாட்டு வீரர் விருது ( Olahragawan Negara) 

1 comment:

Moganadas Muniandy said...

ஈடு செய்ய முடியா பேரிழப்பு