2020, மலேசியர்களுக்கு எட்டாத கனவானாலும் எட்டிப் பிடிக்கும்
தூரத்தில் இருந்தும் ‘பழம்’ கை நழுவிப் போன பல சம்பவங்களை நமக்கு ‘விருந்தாக்கியிருக்கிறது’!
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எட்டாவது பிரதமர் பதவியேற்பார்
என எதிர்பார்க்கப்பட்ட மே 10-ஆம் தேதியும் கடந்து போய் விட்டது.
2018-ல் ஆட்சி மாறி, அன்வார் சிறையில் இருந்து விடுதலையாகி,
மாமன்னரிடம் இருந்து பொது மன்னிப்புப் பெற்று, பின்னர் Port Dickson இடைத்தேர்தலிலும்
வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு நுழைந்து பரபரப்பானதில் இருந்தே அவர் இம்முறை எப்படியாவது
பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடுவார் என பெருவாரியோர் நம்பினர்.
ஏன், அன்வாரே கூட முழுமையாக நம்பியிருப்பார்.
ஆனால் அது இன்னமும் கனவாகவே நீடிப்பது
வருத்தம் தான்.
பதவி ஒப்படைப்பு வாக்குறுதி ஆயிரம் முறை மகாதீரின் வாயாலேயே
மறு உறுதிபடுத்தப்பட்ட போதும், அது கடைசி வரை நிறைவேற்றப்படவில்லை.
செல்வாக்கு சரிந்து போன தனது தலைமைத்துவதத்திற்கு எதிராக
இடைத்தேர்தல்களில் மக்கள் பொங்கி எழுந்த போதே, தானாக விலகி பதவியை ஒப்படைத்திருக்கலாம்.
ஆனால் காலத்தின் கோலம் அவரே இன்று பதவி பறிபோய் அமர்ந்திருக்கின்றார்.
என்றாலும் 95 வயதிலும் மனிதர் அசரவில்லை; தனது ’மாணவர்’ முகிதின்
யாசின் பிரதமராக வலம் வருவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனால் தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை
முன்மொழிய ஆர்வம் காட்டுகிறார்.
‘கொல்லைப்புற’ அரசாங்கத்தின் பிரதமர் என முகிதினையும் அவரின்
தலைமையேற்றுள்ள Perikatan Nasional கூட்டணியையும் தொடர்ந்து சகட்டுமேனிக்கு சாடி வருகிறார்.
இதில் நகைச்சுவை என்னவென்றால் இருவருமே ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள்;
அதிலும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர்கள்.
முகிதின் பதவிக்கு வந்த நேரம் கொரோனா வைரஸ் சீற்றம் அதிகமானதால்
அவர் அதில் ‘பிசி’யாகி விட, தமக்கு எதிராக Pakatan தலைவர்கள்
நாள்தோறும் தொடுத்து வரும்
தாக்குதல்களை அலட்டிக் கொள்ளவில்லை.
சும்மா இருப்பாரா சாணக்கியர்? நாடாளுமன்றத்தில் ஒரு கை பார்த்து
விட்டு தான் மறு வேலை என்ற அளவுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை போய் விட்டார்.
அத்தீர்மானமும் மக்களவை சபாநாயகரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு,
‘கோதா’ திறக்கும் தேதிக்கு காத்திருக்கிறது.
ஆனால், …… ஆனால் இதில் ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.
முகிதின் யாசினை வீழ்த்தும் வேட்கையில் மகாதீர் மட்டுமே முன்நிற்கிறார்;
களத்தில் வேறு யாரையும் காணவில்லையே என்ற சந்தேகம் வராமல் இல்லை.
உள்ளபடியே பார்த்தால், எதிர்கட்சித் தலைவராகப் போகும் அன்வார்
தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
PKR, DAP, AMANAH ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த 92
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் அவர்.
அம்முயற்சியை அவரே முன்னெடுத்திருந்தால்,
பிரதமருடன் நேருக்கு நேர் மோத தாம் தயார் நிலையில் இருப்பதை மக்களிடத்தில் காட்டிக் கொள்ள அவருக்கு
அருமையான வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
ஆனால் ஏனோ அவர் அதை செய்யவில்லை.
எதிர்கட்சி வரிசையில் தனிப்பெரும் கட்சியான
DAP-யாவது களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.
மாறாக, பதவி பறிபோன, பலம் குறைந்து வெறும் 5 MP-களுடன் மட்டுமே
இருக்கும் மகாதீர் அத்தீர்மானத்தை முன்மொழிகிறார்.
முன்னதாக, மகாதீருக்கு ஆதரவாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தக்
WARISAN கட்சித் தலைவர் ஷாஃபியி அப்டால் மனு செய்திருந்தார்.
அக்கட்சி Pakatan-னின்
நட்புக் கட்சியே தவிர கூட்டணிக் கட்சி அல்ல.
அப்போது கூட அந்நடவடிக்கையை PKR, DAP,
AMANAH கட்சிகள் வெளிப்படையாக ஆதரித்து அறிக்கை வெளியிடவில்லை.
ஷாஃபியி முன்மொழிந்த
தீர்மானம் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நிராகரிக்கப்பட்டது
தெரிந்ததே.
முன்னாள் மத்திய அமைச்சர், நடப்பு முதல் அமைச்சர் ஒருவர் எப்படி அப்படியொரு
நடவடிக்கைக்கு முயன்றார் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும்
விடுங்கள்!
சரி, மகாதீரின் நம்பிக்கையில்லாத்
தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்ட பிறகும் கூட, அதற்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம்
என Pakatan சார்பில் இதுவரை கூட்டறிக்கை வந்ததாக என் நினைவில் இல்லை.
அதன் தலைவர்கள்
ஆங்காங்கே குரல் கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் இல்லை.
ஆனால், ஆளும் கூட்டணியின் பெரும் கட்சியான தேசிய முன்னணியோ
உடனே கூட்டம் போட்டு, முகிதின் அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்து வாக்களிப்போம் என அறிவித்தே
விட்டது.
ஆக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில்
Pakatan கட்சிகள் ‘நின்று கவனிப்போம்’ என்ற விதத்தில் தான் இருக்கின்றனவோ என எண்ணத்
தோன்றுகிறது.
கடந்த மாத வாக்கில் அன்வார் முகிதினைச் சந்தித்து பேசியதும் இங்கு கவனிக்கத்தக்கது.
பதவி ஒப்படைப்பு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மகாதீரின்
நடவடிக்கைகளை Pakatan கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக PKR சற்று எச்சரிக்கையுடன் அணுகுவது
நன்றாகப் புலப்படுகிறது.
இன்னொரு முறை மகாதீர் நம்ப வைத்து ஏமாற்றி விட்டாரே என புலம்பல்கள்
அக்கட்சியினர் மத்தியில் நிலவுவதை மறுக்க இயலாது.
என்னதான் தங்களிடம் 114 MP-கள் இருப்பதாக மகாதீர் கூறிக்
கொண்டாலும், ஆகக் கடைசி நிலவரப்படி Pakatan வசம் 108 MP-கள் இருப்பதாகவே தெரிகிறது.
ஆட்சியமைக்கத் தேவைப்படும் 112 இடங்களை விட 4 இடங்கள் அது குறைவாகும். உண்மை நிலவரம்
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மே 18-ஆம் தேதி நாடாளுமன்றக்
கூட்டத் தொடர் மாமன்னரின் உரையுடன் நிறைவுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
அதாவது வேறு எந்த விவாதமும் அந்நாளில் நடைபெறாது என்பது உறுதிபடுத்தப்பட்டு விட்டதால்,
மகாதீரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆக விரைவாக இனி ஜூலை மாத கூட்டத்தின் போது
தான் தாக்கல் செய்ய முடியும்.
சபாநாயகரின் அம்முடிவை விமர்ச்சித்து மகாதீர் வரிசையாக வீடியோக்களை
வெளியிட்டு வருகிறார்.
ஆனால் Pakatan கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும்
வரவில்லை.
ஆக, நடப்பவற்றை வைத்துப் பார்க்கும் போது மகாதீர் தனித்து
விடப்பட்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
தமக்கு, பிரதமர் பதவி பறி போன இரண்டே
மாதங்களில் தமது மகனும் கெடா Menteri Besar பதவியை இரண்டாம் முறையாக இழக்கும் விளிம்பில்
நிற்பது அந்தப் பெருந்தலைவரை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
படாவியையும் நஜீப்பையும் பதவியில் இருந்து இறக்கியவருக்கு
முகிதினை இறக்குவது பெரிய விஷயமல்ல.
ஆனால், காலமும் வேகமும் அதை விட அதிர்ஷடமும் இன்று
அவர் பக்கம் இருக்கின்றதா என்பதே கேள்வி!
என்றாலும், அரசியலில் மகாதீர் தனி ரகம். யாராலுமே எளிதில்
கணிக்க முடியாத பழுத்தப் பழம் அவர்.
72 வயது முகிதினுக்கு எதிராக 95 மகாதீர் எடுத்துள்ள அஸ்திரம்
என்னவாகும் என்பது ஜூலை வாக்கில் தெரியும்.
அதுவரை நமக்குத் தீனி போட ஏராளமான அரசியல் நாடகங்கள் காத்திருக்கும்
என்பதில் ஐயமில்லை.
#சிந்தித்தவேளை #வியன்
1 comment:
Migavum arumai sir.
Post a Comment