அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 18 July 2012

94 அகவையில் காலடி வைக்கும் MADIBA


நெல்சன் மண்டேலா
ஆப்ரிக்க ஜோதி
மனிதேய மாணிக்கம்
வாழும் மகாத்மா காந்தி;
கறுப்பு கண்டத்தின் வெளிச்சம் ; 
தென்னாப்ரிக்க மக்களின் விடிவெள்ளி....

என இவரை எப்படி அழைத்தாலும் தகும்.அந்த பட்டப் பெயர்களால் அவருக்கு பெருமையல்ல, அவரால் தான் அப்பட்டங்களுக்கே பெருமை என்பது ஊரறிந்த உண்மை.வெள்ளையனின் ஆட்சியில் நிறவெறிக் கொள்கை தாண்டவத்தை எதிர்த்து போராடிய போர்வாள்!.

 மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சை போராட்டமாக தொடங்கி பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு மாறி கடைசியில் கெரில்லா தாக்குதலுக்கும் தலைமையேற்றவர். விடுவானா வெள்ளையன்? மண்டேலா மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் தள்ளினான். தீவொன்றில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலாவுக்கு அடுத்த 27 ஆண்டுகள் அதுவே வீடாகிப் போனது. கொடிய சிறைவாசத்தின் ஒரு கட்டத்தில் காச நோய்க்கு ஆளாகி மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பியவர்.
இளவயது மண்டேலா

சிறைக் கம்பிகளுக்கு பின்னால் மண்டேலா



மன்னிப்புக் கேட்டால் விடுதலை என வெள்ளையர் அரசாங்கம் பேரம் பேச, உயிரே போனாலும் வெள்ளையனிடம் மண்டியிட மாட்டேன் என மண்டேலா திடமாக இருந்து விட்டார். அவரின் விடுதலைக்காக உலகமே ஓரணியில் திரள, வெள்ளையர் அரசும் மாற,  27 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து  11.2.1990-ல் சிறையில் இருந்து கறுப்பின மக்களின் ஹீரோவாக விடுதலையானார் அந்த மாமனிதர். மண்டேலா விடுதலையான காட்சிகள் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பாக, அதனைக் கண்டு ஆனந்தக் களிப்பில் கசிந்துருகாத உள்ளங்களே இல்லை எனலாம்.

 

ஆண்டுகள் உருண்டோட 1994-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி 
தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்று வரலாறு படைத்தார் MADIBA ( மண்டேலாவின் செல்லப் பெயர் ). மண்டேலாவின் ஆட்சிக் காலம் வெள்ளையர்களின் ஆட்சியில் கொத்தடிமைகளாக வாழ்ந்த கறுப்பினத்தவர்களின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைத்தது. நிறத்தால் பிரிந்து கிடந்த தென்னாப்ரிக்க மக்கள் மண்டேலாவின் பின்னால் அணி வகுத்து நின்றனர். உலக நாடுகளுக்கு தென்னாப்ரிக்காவின் கதவுகளை திறந்து விட்டார் மண்டேலா. அனைத்துலகச் சமூகத்தால் தனித்து விடப்பட்ட தென்னாப்ரிக்கா மீண்டும் தனது பாதைக்குத் திரும்பியது.

மண்டேலா மலேசியா வந்த போது அப்போதைய பிரதமர் மகாதீருடன்
மண்டேலாவுக்கு  உலகமே சிவப்புக் கம்பள வரவேற்பை நல்கியது. நாடுகளும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு அந்த மாமனிதரை அழைத்து விருந்து கொடுத்து பட்டங்களையும் விருதுகளையும் வாரிக் கொடுத்து சிறப்பு சேர்த்துக் கொண்டன. மண்டேலா பெரிதும் போற்றிய மகாத்மா காந்தடியடிகள் நினைவாக இந்தியா வழங்கும் அமைதி மற்றூம் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி அனைத்துலக விருதை, இந்தியாவுக்கே சென்று பெற்றுக் கொண்டார் அந்த தீர்க்கதரிசி. 

சாகும் வரையில் பதவியை விட்டு போக மாட்டேன் என அடம் பிடிக்கும் அரசியல்வாதிகளின் கன்னத்தில் அறையும் விதமாக 1999-ஆம் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட அந்த அரசியல் மாமேதை மறுத்து விட்டார்.  

 Ronaldo-வுடன் Madiba
2010 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பு தென்னாப்ரிக்காவுக்கு கிடைப்பதற்கு பெரும் பங்க்காற்றியவர் மண்டேலா என்பதும் கூடுதல் தகவலாகும். பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்ற மண்டேலாவை வயதும் உடல் நலமும்  வீட்டிலேயே முடக்கி போட்டு விட்டன. என்றாலும்  94 வயதிலும் அவரின் புகழ் மங்காமல் நாளுக்கு நாள் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. 

மண்டேலா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்  என சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் நிச்சயம் பெருமைதானே...

94 வயது பிறந்தநாளை கொண்டாடும் மண்டேலாவுக்கு வாழ்த்துச் சொல்ல தென்னாப்பிரிக்காவுக்கே பறந்துச் சென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்.

No comments: