அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 15 August 2012

பூப்பந்து சகாப்தம் மறைந்ததே...!


Datuk Punch Gunalan ( 1944 - 2012 )


நாட்டின் பூப்பந்துத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்து வாழும் சகாப்தமாக வலம் வந்த டத்தோ பஞ்ச் குணாளன் இன்று நம்முடன் இல்லை. நீண்ட காலமாகவே புற்று நோயுடன் போராடி வந்த அந்த தங்கமகன் இன்று காலை தனது 68-ஆவது வயதில் இறுதி மூச்சை நிறூத்தி விட்டு நம்மிடம் இருந்து விடைப் பெற்று கொண்டு விட்டார்.

இன்றைய தலைமுறையினருக்கு Datuk Lee Chong Wei எப்படியோ, அப்படித்தான் Datuk Punch Gunalan 1970-ஆம் ஆண்டு தலைமுறைக்கு! ஒற்றையர் இரட்டையர் என இரு பிரிவுகளிலும் தனது அட்டகாசமான ஆட்டத்தால் உலக வரை படத்தில் மலேசியாவுக்கு முகவரி கொடுத்தவர்.

அதுவும் பஞ்ச் குணாளன் - Ng Boon Bee ஜோடி என்றாலே படு பிரபலம். அவர்களின் ஆட்டத்தை காண்பதற்கென்றே அரங்கில் கூட்டம் குவியும்.

பிரசித்திப் பெற்ற தோமஸ் கிண்ணப் பூப்பந்து, அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டி என எதையும் விட்டு வைக்காமல் வெற்றி கொடி நாட்டிய அதிரடி மன்னன்.
Datuk Punch Gunalan - Ng Boon Bee

தீவிர பூப்பந்தில் இருந்து ஓய்வுப் பெற்றவுடன் மலேசிய பூப்பந்து அணிக்கு தலைமை பயிற்றுநராக இருந்து மகத்தான சாதனைகளை புரிந்தவர். அவர் தலைமையில் தான் மலேசியா ஆகக் கடைசியாக 1992-ஆம் ஆண்டில் தாமஸ் கிண்ணத்தை வாகை சூடியது பலருக்கு நினைவிருக்கலாம். 

தனது ஆட்டத் திறமையாலும், பயிற்றுவிக்கும் முறையாலும் வெற்றிகளைக் குவித்த டத்தோ பஞ்ச் காலப் போக்கில் தனது நிர்வாகத் திறமையாலும் அனைவரையும் கவர்ந்தார். மலேசிய பூப்பந்து சங்கம் BAM-முடன் பணியாற்றிய அவர், கடைசியில் அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்திற்கே துணைத் தலைவரானது வரலாறு.

அவரின் வருகைக்குப் பிறகுதான் BWF பல்வேறு மாற்றங்களைச் சந்தித்ததென்பது குறிப்பிடத்தக்கது. சம்மேளனம் என பெயர் மாற்றம் காண்பதற்கு காரணமே அவர் தான் என அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டேன்.  15 புள்ளிக் கணக்கு இன்று 21-ராக மாறியதும் அவராலேயே என தெரிய வருகிறது.


கனிவு, பொறுமை, அரவணைப்பு, விளையாட்டு மீதான ஈடுபாடு, என நற்பண்புகளுக்கு பஞ்சமில்லாது செவ்வனே பணியாற்றுவது அவரின் இயல்பென்பதால், பொது உறவிலும் அவர் தலைச் சிறந்து விளங்கியதில் ஆச்சரியமில்லை.

இன மத பேதமின்றி அனைவரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்ற டத்தோ பஞ்ச் குணாளனின் மறைவு நாட்டுக்கு மட்டுமல்ல உலக பூப்பந்துத் துறைக்கே ஈடு செய்ய முடியா பேரிழப்பு.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போமாக...

1992-ஆம் ஆண்டில் தோமஸ் கிண்ணத்தை வாகை சூடிய போது                                           
1998-ஆம் ஆண்டு கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டி தொடர்பான நிகழ்வொன்றில் பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத்துடன் பஞ்ச் குணாளன்  

பஞ்ச் குணாளனின் குறிப்பிடத்தக்க வெற்றிகள்...

1969 - அமெரிக்கப் பொது டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1969 - SEAP விளையாட்டு ( SEA Games) - 2 தங்கம் ( ஒற்றையர் + இரட்டையர்)

1969 - தேசிய விளையாட்டு வீரர் விருது ( Olahragawan Negara) 

1971 - SEA Games - தங்கம் ( இரட்டையர் )

1973 - SEA Games - தங்கம் ( ஒற்றையர் )

1970 - தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டியில் முதல் பங்கேற்பு

1970 - Edinburgh காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம் ( இரட்டையர்)

1970 - பேங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம் ( ஒற்றையர் + இரட்டையர்) 

1970 - 1972 - டென்மார்க பொது பூப்பந்து இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1971 - அமெரிக்கப் பொது பூப்பந்து போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1971 - அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1971 - கனடா பொது பூப்பந்து போட்டி இரட்டையர் பிரிவு வெற்றியாளர்

1974 -  Christchurch காமன்வெல்த் போட்டி 2 தங்கம் ( ஒற்றையர் + இரட்டையர்)

1974 - தேசிய விளையாட்டு வீரர் விருது ( Olahragawan Negara) 

Tuesday, 14 August 2012

20-ஆம் ஆண்டிலும் சீற்றம் குறையாத இசைப்புயல்!


'எல்லாப் புகழும் இறைவனுக்கே' ! என்ற வாசகத்தை கேட்டவுடனேயே நமக்கெல்லம் நினைவுக்கு வருவது.... A.R.Rahman. இந்திய இசையுலகம் கண்ட மாபெரும் இசை சிற்பி!

காலம் போன வேகமே தெரியவில்லை. இந்த AR.Rahman என்ற புயல் வீசத் தொடங்கி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்று இருக்கும் இளைஞர்களில் பெரும்பாலோர்...இல்லை இல்லை,  ஏறக்குறைய அனைவருமே இவரின் இசையின் தாக்கத்தில் வளர்ந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

 1992-ஆம் ஆண்டில் தென்னத்தில் பெரும் புயலாக கிளம்பிய இந்த இசையரசனின் சீற்றம் இந்த 20 ஆண்டுகளில் மாநிலம், நாடு, கண்டம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து இன்று உலகளவில் விரிந்து வியாபித்து கொண்டிருக்கின்றது.
மணிரத்னத்துடன் ரஹ்மான்

இதே ஆகஸ்ட் 15-ஆம் தேதி மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது ரஹ்மான் வெறும் 25 வயது இளைஞன். அப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே!

'இளைஞன் தானே !,  அப்படி என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் ' என ஏளனம் பேசியவர்களின் வாயை ஒட்டு மொத்தமாக அடைக்கும் அளவுக்கு அப்படத்தின் இசையின் மூலம் சாதித்து காட்டி விட்டார் ரஹ்மான். அந்த முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய தேசிய விருதை வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்

 80-களில் இசைஞானியின் மெல்லிசைக்கு கட்டுப்பட்ட தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய அதுவும் நவீன இசை சுவாசம் கிடைத்தது போன்றதோர் உணர்வு! நவீனமா, அடிதடி இசையா, மனதை வருடும் மெல்லிசையா, சோகமா, சுதந்திரத் தாகமா, இல்லை நாட்டுப் புறமா? கூப்பிடுங்கள் ரஹ்மானை என பணத்தைப் பற்றி கவலைப் படாது தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் அது.

ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்தடுத்து அவர் குவித்த வெற்றிகளை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புயலென புறப்பட்டு தமிழ் நாட்டை கடந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் கடைசியில் ஹிந்தி என மும்பையையும் விட்டு வைக்காத ரஹ்மான், ஒரு கட்டத்தில் இந்தியாவையே தாண்டி எல்லை கடந்த இசை வெள்ளமாகிவிட்டார்.

வந்தே மாதரம்
திரையிசையை தாண்டி தனது திறமையை நாடே போற்றும் விதமாக 1996-ஆம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலுக்கு புத்துயிர் கொடுத்து இந்தியர்களை மெய் சிலிர்க்க வைத்தார். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' இசை இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்திய வம்சாவளியினரையும் புல்லரிக்க வைத்ததென்றால் மிகையில்லை. 

உலகமே கொண்டாடிய Slumdog Millionare படத்தில் Jai Ho பாடலுக்காக எட்டாத கனியாக கருதப் பட்ட ஆஸ்கார் விருதுகளை 2009-ஆம் ஆண்டு அள்ளிக் கொண்டு வந்தாரே.... அந்த தருணத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அதுவும் ஆஸ்கார் மேடையில் வழங்கிய ஏற்புரையை ' எல்லா புகழும் இறைவனுக்கே' என தமிழில் முடித்தாரே... அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து ஆனந்த கண்ணீர் விடாதவர்கள் தமிழர்களாகவே இருக்க முடியாது. விருது வாங்கச் சென்றவர் அம்மாபெரும் சபையில் தமிழுக்கு மகுடம் சூட்டியதை என்னவென்று சொல்வது?

ஆஸ்கார் விருது வென்ற களிப்பில்


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக ' செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடலுக்கு ரஹ்மான் அமைத்த இசை, தமிழ் மொழியின் மாண்பை தமிழ் படிக்காதவர்களிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது. 2012 காமன்வெல்த் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை உருவாக்கி, அதனை போட்டி தொடக்க விழாவில் பாடும் அரிய வாய்ப்பை பெற்ற ரஹ்மான் , Jai Ho இசைப் பயணத்துடன் உலக வலம் வந்து கொண்டிருக்கின்றார். போகும் இடமெல்லாம் தமிழுக்கும் பெருமை சேர்த்து வரும் இந்த இசைப்புயல் தமிழ் இசைத் துறைக்கு கிடைத்த பொக்கிஷம். இன்னும் 20 ஆண்டுகளை கடந்தாலும் ரஹ்மானின் இசை நம்மையெல்லாம் கட்டிப் போடத் தான் செய்யும்......


A.R.Rahman மூலம் பெருமைத் தேடிக் கொண்ட விருதுகள்....

Oscar  : 2
Grammy: 2
BAFTA : 1
Golden Globe 1
Indian National Award : 4
Filmfare Awards ( North) : 15
Filmfare Awards ( South) : 13
Tamil Nadu State Film Awards : 6

Guinness World Records in 2010 as the original composer of "Maa Tujhe Salaam", from the album Vande Mataram – the song performed in the most number of languages worldwide (265).


தமிழ் கூறு நல்லுலகம் இருக்கும் வரை மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா வரிசையில் இசைப்புயலும் போற்றப்படுவார் என்பது திண்ணம்!


மக்கள் தொகையில் நம்பர் 2, ஒலிம்பிக்கிலோ நம்பர் 55

ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணி

தலைப்பை கண்டதுமே கண்டு பிடித்து விட முடிகிறது தானே! உங்கள் கணிப்பின் படி உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒலிம்பிக் அடைவுநிலை பற்றிய சிறிய அலசல்  தான் இது.

ஆகக் கடைசி புள்ளி விவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. 134 கோடி மக்களுடன் முதலிடத்தில் உள்ள சீனாவைக் காட்டிலும் வெறும் 12 கோடி வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் உலகத்தில் வாழும் மனிதர்களில்  17 விழுக்காட்டினர் இந்தியாவில் வசிப்பவர்கள். அப்படியிருக்க,  நடந்து முடிந்த லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வாங்கிய பதங்கங்கள் எத்தனை தெரியுமா?

தங்கம் 0, வெள்ளி 2, வெண்கலம் 4. பங்கேற்ற 204 நாடுகளில் பதக்கப்பட்டியலில் இடம் பிடித்த 85 நாடுகளில் இந்தியாவுக்கு 55-ஆவது இடம். ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் மட்டும் 8 தங்கப் பதங்ககளை வாங்கிய இந்தியாவுக்கா இந்த நிலைமை என்று பழையவர்கள் ஆச்சரியப்படக் கூடும்.

இறுதி பதக்கப் பட்டியல்
வெறும் 27 லட்சம் ஜனத் தொகையை கொண்ட ஜமைக்கா கூட 4 தங்கப் பதக்கங்களை அள்ளி கொண்டு போய் விட்டது. ஆனால், இந்தியாவுக்கு 1 தங்கம் கூட கிடைக்காதது சற்று ஏமாற்றம் தான்.

காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நன்றாக செய்யும் இந்திய விளையாட்டாளர்கள் பெரும்பாலும் ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறி விடுகின்றனர். நிச்சயமாக இந்தியர்களின் திறமை குறித்தோ, ஆர்வம் குறித்தோ யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை. தொழில் நுட்பத் துறையில் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளே வியக்கும் அளவுக்கு கெட்டிக் காரர்களை தன்னகத்தே கொண்ட இந்தியாவுக்கு திறமைசாலிகளுக்கா பஞ்சம்?  கண்டிப்பாக இல்லை!

ஆனால் எங்கேயோ தவறு நடக்கிறது. அது விளையாட்டுத் துறை மேம்பாட்டிலா? அல்லது போதிய வசதி இல்லாத்தாலா? அல்லது வேறு எதனாலோ? உரிய Post-Mortem செய்து ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுத்தால் நிச்சயம் முன்னேற்றம் தெரியும். இல்லையென்றால் போகிற போக்கில் குட்டித் தீவுகள் எல்லாம் இந்தியாவை முந்திச் சென்று விடும். 

மற்ற சில முக்கிய நாடுகளுடனான ஒப்பீடு
Rankநாடுஜனத்தொகை தங்கம் 
1 சீனா134 கோடி38
2 இந்தியா121 கோடி0

3 அமெரிக்கா31 கோடி 46
9 ரஷ்யா14 கோடி24
10 ஜப்பான்12 கோடி7





இந்த வேளையில், இம்முறை இந்தியா வென்ற பதக்கங்களில் குறிப்பிடத்தக்கது பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இளம் தாரகை Saina Nehwal வென்ற வெண்கலம். 2012 காமன்வெல்த் போட்டியிலேயே தங்கம் வென்று பரபரப்பை ஏற்படுத்திய Saina சீன வீராங்கணைகளிடம் போராடி தோற்றது பெருமைக்குரிய விஷ்யமே!

இனி வரும் பெரிய போட்டிகளில் இந்தியா சாதிக்கும் என எதிர்பார்ப்போம்.!

Saina Nehwal



Friday, 10 August 2012

சகாப்தம் ஆனார் Usain Bolt




லண்டனில் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தை 19.32 வினாடிகளில் ஓடி முடித்து ஜமைக்காவின் Usain Bolt தங்கம் வென்றார். வெள்ளி வெண்கலப் பதக்கங்களையும் ஜமைக்காவே அள்ளியது.  வெள்ளி Yohan Blake. வெண்கலம் Warren Weir. ஏற்கனவே 100 மீட்டரில்  தங்கம் வென்ற Bolt, இந்த தங்கத்தையும் சேர்த்து ஒலிம்பிக்கில் இதுவரை 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கெல்லாம் மேலாக, ஒலிம்பிக் வரலாற்றில் 100, 200 மீட்டர் ஒட்டங்களில் வென்ற தங்கப் பதக்கத்தை மீண்டும் தற்காத்துக் கொண்ட முதல் ஓட்டக்கார் என்ற மிகப்  பெரிய பெருமையை Bolt பெறுகிறார். 2008 பெய்ஜிங்க் ஒலிம்பிக்கில் 100, 200 ஓட்டங்களிலும் பின்னர் 4x100 மீட்டர் ஓட்டத்திலும் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றவர் Bolt என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் கண்ட மிகச் சிறந்த ஓட்டப்பந்த சகாப்தம் என்ற தனது கனவை நனவாக்கியுள்ளார் 25 வயது Bolt. 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் மலேசியப் பெண் Pandalela Rinong


Pandalela Rinong Pamg

ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு பெண் முதன் முறையாக மலேசியாவுக்கு பதக்கம் வென்று  கொடுத்துள்ளார்.இன்று அதிகாலை நடைபெற்ற பெண்களுக்கான முக்குளிப்புப் போட்டியின் ( Diving ) 10 மீட்டர் platform பிரிவில் தேசிய வீராங்கணை Pandalela Rinong வெண்கலப் பதக்கம் வென்று அப்பெருமையைச் தட்டிச் சென்றார்.  ஏற்கனவே 2012 காமன்வெல்த் போட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்றவரான இந்த சரவாக்கியப் பெண், உலக முக்குளிப்புத் தொடரிலும் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் மலேசியா பெற்றுள்ள இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக பூப்பந்து போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Datuk Lee Chong Wei வெள்ளிப் பதக்கம் வென்றார். Pandalela-வின் வெண்கலம் வாயிலாக, ஒலிம்பிக்கில் முதல் முறையாக பூப்பந்து இல்லாத போட்டியொன்றின் மூலமாக மலேசியா பதக்கம் வென்றுள்ளது.

மலேசியாவின் ஒலிம்பிக் பதக்க வரலாறு:
 BronzeRazif Sidek & Jalani Sidek1992 Barcelonaபூப்பந்துஆண்கள் இரட்டையர்
 SilverCheah Soon Kit & Yap Kim Hock1996 Atlantaபூப்பந்துஆண்கள் இரட்டையர்
 BronzeRashid Sidek1996 Atlantaபூப்பந்துஆண்கள் ஒற்றையர்
 SilverLee Chong Wei2008 Beijingபூப்பந்துஆண்கள் ஒற்றையர்
 SilverLee Chong Wei2012 Londonபூப்பந்துஆண்கள் ஒற்றையர்
 BronzePandelela Rinong Pamg2012 Londonமுக்குளிப்புபெண்கள் 10m platform

Monday, 6 August 2012

ப்ளீஸ் கதவைத் திறங்கப்பா : இப்படிக்கு Chimpanzee !

இங்கிலாந்து மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒரு Chimpanzee குரங்கு, வருகையாளரிடம் சைகை மொழியில் பேசிய வியக்க வைத்தது. சம்பந்தப்பட்ட சுற்றுப் பயணி, அக்குரங்கு அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பதை கூர்ந்து கவனித்ததில், தான் அடைக்கப்பட்டுள்ள கூண்டின் கதவைத் திறந்து விட சொல்லி அது சைகை செய்திருக்கிறது. பதிலேதும் வராதததை அடுத்து கதவை எப்படி திறக்க வேண்டும் என்பதை சொல்லிக் காட்டும் விதமாகவும் அது சைகை புரிந்தது, ஒரு வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், மறு பக்கம் நம்மை யோசிக்கவும் வைக்கிறது. மனிதனுக்கு மட்டுமா ஆறறிவு?





Usain Bolt தங்கம் வென்றார் !



பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் Usain Bolt, 9.63 வினாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றார். இது புதிய ஒலிம்பிக் சாதனையாகும். மற்றொரு ஜமைக்கர் Yohan Blake 9.75 வினாடிகளில் வெள்ளிப் பதக்கமும், முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் Justin Gatlin வெண்கலமும் வென்றனர். 

ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவு கலைந்தது!


Datuk Lee Chong Wei

ஒலிம்பிக் தங்கத்தை மலேசியா மீண்டும் ஒரு முறை நழுவ விட்டுள்ளது. லண்டனில் இன்று நடைபெற்ற பூப்பந்து போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்,  Datuk Lee Chong Wei, தனது பரம வைரியான சீனாவின்  Lin Dan-னிடம் மூன்று செட்களில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார். 

முதல் செட்டை 21-15 என அட்டகாசமாக தொடங்கிய Chong Wei  இரண்டாம் செட்டில் சற்று சொதப்பியதால் 10-21 என தோல்வி கண்டார். மூன்றாவது செட்டில் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடியபோதும் கடைசியில் 19-21 என்ற புள்ளிக் கணக்கில் அவர் தோல்வியுற்றார்.

 தங்கம் வென்ற மகிழ்ச்சியில் Lin Dan அரங்கை சுற்றி ஆரவாரத்துட ஓட, Chong Wei சோகம் தோய்ந்த முகத்துடன் அரங்கிலேயே உட்கார்ந்து விட்டார். முதல் தங்கப் பதக்கத்தை கொண்டாட தயாரான  2 கோடியே 80 லட்சம் மலேசியர்களும் இதனால் ஏமாற்றமடைந்தனர். 2008 Beijing ஒலிம்பிக்கில் கண்ட தோல்விக்கு வஞ்சம் தீர்க்கத் தவறியதால் Chong Wei தனது கடைசி ஒலிம்பிக்கில் இருந்து வெள்ளிப் பதக்கத்துடன் விடைபெறூகிறார்.

எது எப்படி இருப்பினும், காயத்தில் இருந்து குணமடைந்து வந்தாலும், நாட்டுக்காக கடைசி வரை போராடிய Chong Wei-யை பாராட்ட மலேசியர்கள் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம். ஒலிம்பிக் வரலாற்றில் மலேசியா இதுவரை பெற்றுள்ள 5 பதங்களில் 2 பதக்கங்கள் Chong Wei வென்றவை ஆதலால், மலேசியாவின் விளையாட்டு சகாப்தங்கள் வரிசையில் அவருக்கு நிச்சயம் இடமுண்டு. 

Lin Dan

LIN DAN

அதே சமயம், பூப்பந்து உலகின் 'Usain Bolt' என அழைக்கப்படும் Lin Dan-னையும் இந்த நேரத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒலிம்பிக் தங்கத்தை தற்காத்துக் கொண்ட முதல் ஆடவர் ஒற்றையர் வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஏற்கனவே உலக விருதுகளை அள்ளிக் குவித்தவரான Lin Dan இதன் மூலம் உலகம் கண்டம் மிகச் சிறந்த பூப்பந்து வீரராக வரலாற்றில் இடம் பெறுகிறார்

Saturday, 4 August 2012

ஒலிம்பிக் தங்கத்தை நெருங்குகிறார் Lee Chong Wei

LEE CHONG WEI
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு நாளை இரவு நனவாகலாம்! அந்த சரித்திரப்பூர்வ தங்கத்தை பூப்பந்து போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் Datuk Lee Chong Wei பெற்றுத் தரக்கூடும். 

ஆனால், அதற்கு ஒரே தடைக்கல்லாக இருக்கப் போவது வேறு யாருமல்ல, Chong Wei-யின் பரம வைரியான சீனாவின் Lin Dan தான். இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் Chong Wei, மற்றொரு சீன போட்டியாளரை தோற்கடித்த நிலையில், Lin Dan தென் கொரிய வீரரை வீழ்த்தி இறுதியாட்டத்திற்குள் நுழைந்தார்.

LIN DAN 
இதே 4 ஆண்டுகளுக்கு முன்பு, Beiing ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் நேருக்கு நேர் மோதிய அவ்விருவரும் நாளை மீண்டுமொருமுறை சவாலில் இறங்கவிருப்பது பூப்பந்து ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. Beijing-ங்கில் தங்கத்தை நழுவ விட்ட Chong Wei, நாளை அதற்கு வட்டியும் முதலுமாக  வஞ்சம் தீர்ப்பாரா ? அல்லது மற்றொரு வெள்ளிப் பதக்கத்துடன் தனது கடைசி ஒலிம்பிக்கில் இருந்து விடைபெறுவாரா ? என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Chong Wei வென்றாலும், தோற்றாலும் மலேசிய அணி வெறுங்கையுடன் நாடு திரும்பாது என்பது  மட்டும் உறுதி!


கூடுதல்  தகவல்: 
ஒலிம்பிக்கில் மலேசியா இதுவரை 2 வெள்ளிப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் மட்டுமே வென்றிருக்கின்றது. அவை:

1992  Barcelona : வெண்கலம் ( Razif- Jalani Sidek - ஆண்கள் பூப்பந்து இரட்டையர்)
1996 Atlanta : வெண்கலம் ( Rashid Sidek - ஆண்கள் பூப்பந்து ஒற்றையர் )
1996 Atlanta : வெள்ளி ( Cheah Soon Kit - Yap Kim Hock - ஆண்கள் பூப்பந்து இரட்டையர் )
2008 Beijing : வெள்ளி ( Datuk Lee Chong Wei - ஆண்கள் பூப்பந்து ஒற்றையர் )  


Sunday, 22 July 2012

புதுக்கவிதைப் போட்டி



மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இலக்கியப் போட்டிகளில், புதுக்கவிதைப் போட்டியை மக்கள் ஓசை நாளிதழ் ஏற்று நடத்துகிறது.

பாடு பொருள்

புதுக்கவிதையின் பாடுபொருள், மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். 30 முதல் 50 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

புதுக்கவிதையில் வெற்றிப் பெறுபவதே அஃது உணர்த்தும் கருத்தே ஆகும். எனவே, கருத்துச் செறிவும் அடர்ச்சியும் படைப்பில் இருத்தல் வேண்டும்.

10. 09. 2012-ஆம் தேதிக்குள் படைப்புகள் அனைத்தும் வந்து சேர்ந்து விட வேண்டும். 


பரிசுகள்:

முதல் பரிசு : 2,000 ரிங்கிட்

இரண்டாம் பரிசு :  1,000 ரிங்கிட்

மூன்றாம் பரிசு : 750.00 ரிங்கிட்

5 ஆறுதல் பரிசுகள் : தலா 250.00 ரிங்கிட்


விதிமுறைகள்

படைப்புகள் அனைத்தும் கணினியில் எழுத்துரு 12 அளவில் ( fonts 12) தட்டச்சு செய்திருக்க வேண்டும். கணினி தட்டச்சு செய்யப்படாத படைப்புகள் ஏற்புடையதாகா. படைப்பாளர்கள் தங்களது பெயர், முழு முகவரி, தொலைப்பேசி எண்கள் ஆகியவற்றை தனித்தாளில் தேசிய மொழியில் எழுதி, அடையாள அட்டை நகலோடு அனுப்பி வைக்க வேண்டும்.

சங்கத்தின் பொன்விழாவின் போது பரிசளிப்பு நடைபெறும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

'புதுக்கவிதைப் போட்டி'
 MAKKAL OSAI
19, Jalan Murai Dua, Batu Complex off Jalan Ipoh,
51200 Kuala Lumpur.

( தொடர்புக்கு : 012-2668416 ஆ. குணநாதன் )

Saturday, 21 July 2012

மர்ம உறுப்பில் பூட்டு : நரக வேதனையில் மனைவி !

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள இந்தூர் எனுமிடத்தில் எலி பாசாணம் குடித்து தற்கொலைக்கு முயன்ற குடும்ப மாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சிதான் அடுத்த ஹைலட். காரணம்.... அப்பெண்ணின் மர்ம உறுப்பில் மாட்டப்பட்டிருந்த பூட்டு ! ஒரு கணம் ஆடிப் போன மருத்துவர்கள் விசாரித்ததில் அப்பெண் கூறிய வாக்குமூலம் வேதனைக்குள்ளானது.

சந்தேகத்தின் மறுபிறவியான தனது கணவனுக்கு தான் துரோகம் செய்து விடுவேனோ என்ற பயத்தில், நான்காண்டுக்கு முன் தனது மர்ம உறுப்பில் துளை போட்டு அதில் அவன் பூட்டை போட்டு விட்டானாம். தினமும் காலை வேலைக்குச்ச் செல்லும் முன் பூட்டைப் போட்டு விட்டு சாவியை எடுத்து விட்டு சென்று விடுவானாம் அந்த மெக்கானிக். சிறுநீர் கழிக்கக் கூட  சிரமப்பட்டு நரகவேதனை அனுபவித்த அப்பெண் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். கணவன் திருந்தவில்லை. பொங்கி எழுந்த அப்பெண் கணவனை ஒன்றும் செய்யாமல் தானே விஷம் குடித்து விட்டார்.

மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதான அந்த மெக்கானிக் தற்போது லாக்கப் அறையில்....

- நன்றி என்.டி.டிவி

Thursday, 19 July 2012

பறக்கும் பாவை ஜி. சாந்தி



G. Shanti
G. Shanti ( Ratu Pecut Malaysia )

நாட்டின் பறக்கும் பாவை என அழைக்கப்பட்ட ஓட்டப்பந்தய வீராங்கணை ஜி.சாந்தியின் சாதனைகளை எடுத்துரைக்கும் புகைப்படங்களுடன் Facebook பக்கமொன்றை உருவாக்கியுள்ளேன். நேரம் கிடைத்தால் இந்த முகவரியை வலம் வரவும். http://www.facebook.com/Govindasamy.Shanti

Wednesday, 18 July 2012

94 அகவையில் காலடி வைக்கும் MADIBA


நெல்சன் மண்டேலா
ஆப்ரிக்க ஜோதி
மனிதேய மாணிக்கம்
வாழும் மகாத்மா காந்தி;
கறுப்பு கண்டத்தின் வெளிச்சம் ; 
தென்னாப்ரிக்க மக்களின் விடிவெள்ளி....

என இவரை எப்படி அழைத்தாலும் தகும்.அந்த பட்டப் பெயர்களால் அவருக்கு பெருமையல்ல, அவரால் தான் அப்பட்டங்களுக்கே பெருமை என்பது ஊரறிந்த உண்மை.வெள்ளையனின் ஆட்சியில் நிறவெறிக் கொள்கை தாண்டவத்தை எதிர்த்து போராடிய போர்வாள்!.

 மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சை போராட்டமாக தொடங்கி பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு மாறி கடைசியில் கெரில்லா தாக்குதலுக்கும் தலைமையேற்றவர். விடுவானா வெள்ளையன்? மண்டேலா மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் தள்ளினான். தீவொன்றில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலாவுக்கு அடுத்த 27 ஆண்டுகள் அதுவே வீடாகிப் போனது. கொடிய சிறைவாசத்தின் ஒரு கட்டத்தில் காச நோய்க்கு ஆளாகி மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பியவர்.
இளவயது மண்டேலா

சிறைக் கம்பிகளுக்கு பின்னால் மண்டேலா



மன்னிப்புக் கேட்டால் விடுதலை என வெள்ளையர் அரசாங்கம் பேரம் பேச, உயிரே போனாலும் வெள்ளையனிடம் மண்டியிட மாட்டேன் என மண்டேலா திடமாக இருந்து விட்டார். அவரின் விடுதலைக்காக உலகமே ஓரணியில் திரள, வெள்ளையர் அரசும் மாற,  27 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து  11.2.1990-ல் சிறையில் இருந்து கறுப்பின மக்களின் ஹீரோவாக விடுதலையானார் அந்த மாமனிதர். மண்டேலா விடுதலையான காட்சிகள் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பாக, அதனைக் கண்டு ஆனந்தக் களிப்பில் கசிந்துருகாத உள்ளங்களே இல்லை எனலாம்.

 

ஆண்டுகள் உருண்டோட 1994-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி 
தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்று வரலாறு படைத்தார் MADIBA ( மண்டேலாவின் செல்லப் பெயர் ). மண்டேலாவின் ஆட்சிக் காலம் வெள்ளையர்களின் ஆட்சியில் கொத்தடிமைகளாக வாழ்ந்த கறுப்பினத்தவர்களின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைத்தது. நிறத்தால் பிரிந்து கிடந்த தென்னாப்ரிக்க மக்கள் மண்டேலாவின் பின்னால் அணி வகுத்து நின்றனர். உலக நாடுகளுக்கு தென்னாப்ரிக்காவின் கதவுகளை திறந்து விட்டார் மண்டேலா. அனைத்துலகச் சமூகத்தால் தனித்து விடப்பட்ட தென்னாப்ரிக்கா மீண்டும் தனது பாதைக்குத் திரும்பியது.

மண்டேலா மலேசியா வந்த போது அப்போதைய பிரதமர் மகாதீருடன்
மண்டேலாவுக்கு  உலகமே சிவப்புக் கம்பள வரவேற்பை நல்கியது. நாடுகளும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு அந்த மாமனிதரை அழைத்து விருந்து கொடுத்து பட்டங்களையும் விருதுகளையும் வாரிக் கொடுத்து சிறப்பு சேர்த்துக் கொண்டன. மண்டேலா பெரிதும் போற்றிய மகாத்மா காந்தடியடிகள் நினைவாக இந்தியா வழங்கும் அமைதி மற்றூம் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி அனைத்துலக விருதை, இந்தியாவுக்கே சென்று பெற்றுக் கொண்டார் அந்த தீர்க்கதரிசி. 

சாகும் வரையில் பதவியை விட்டு போக மாட்டேன் என அடம் பிடிக்கும் அரசியல்வாதிகளின் கன்னத்தில் அறையும் விதமாக 1999-ஆம் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட அந்த அரசியல் மாமேதை மறுத்து விட்டார்.  

 Ronaldo-வுடன் Madiba
2010 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பு தென்னாப்ரிக்காவுக்கு கிடைப்பதற்கு பெரும் பங்க்காற்றியவர் மண்டேலா என்பதும் கூடுதல் தகவலாகும். பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்ற மண்டேலாவை வயதும் உடல் நலமும்  வீட்டிலேயே முடக்கி போட்டு விட்டன. என்றாலும்  94 வயதிலும் அவரின் புகழ் மங்காமல் நாளுக்கு நாள் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. 

மண்டேலா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்  என சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் நிச்சயம் பெருமைதானே...

94 வயது பிறந்தநாளை கொண்டாடும் மண்டேலாவுக்கு வாழ்த்துச் சொல்ல தென்னாப்பிரிக்காவுக்கே பறந்துச் சென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்.

Tuesday, 17 July 2012

மின்னலே உன் பெயர்தான் FLOJO-வா ?

உலகம் கண்ட அதி மின்னல் வேக வீராங்கணை Flojo
FLOJO என செல்லமாக அழைக்கப்படும் Florence Griffith Joyner அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அதிவேக ஓட்டக்காரர். 80-ஆம் ஆண்டுகளின் கடைசியில் உலக ஓட்டப்பந்தய அரங்கையே புரட்டிப் போட்டவர். இவர் செய்த உலக சாதனை நேரத்தை இன்று வரை நெருங்கக் கூட ஆளில்லை. 1988 சோல் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை வென்று ஒலிம்பிக் நட்சத்திரமாக மின்னியவர்.  


இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கும் Flojo-வின் உலக சாதனை நேரம்
100 மீட்டர் : 10.49 வினாடிகள் ( 1988 ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க தகுதிச் சுற்று)
200 மீட்டர் : 21.34 வினாடிகள் ( 1988 சோல் ஒலிம்பிக்)



தனிச்சிறப்பு
சிலர் ஓட்டத்தால் மட்டும் ரசிகர்களைக் கவருவார்கள், இன்னும்  சிலர் ஓட்டத்துக்குப் பிறகு வெற்றியை கொண்டாடி கவருவார்கள், ஒரு சிலர் சர்ச்சைகளால் பேசப்படுவார்கள். ஆனால் ஓட்டப் பந்தயத் துறைக்கு ஒரு புதிய Fashion-னை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ் பெற்றவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். ஒரு காலில் நீளமாகவும், மற்றொரு காலில் நீச்சல் உடை போலவும் அணிந்து ஓட்டத் துறைக்கே புதிய அடையாளத்தை ஏற்படுத்தியவர். பல வண்ணங்களில் நீண்டு  வளைந்த நகங்கள் இவரின் Trademark. இந்த கவர்ச்சிப் புயலைப் பார்ப்பதற்கென்றே அரங்கில் ரசிகர்கள் குவிந்து கிடந்த காலம் அது.

'நக' அழகி


 100 மீட்டரில் Flojo செய்த உலக சாதனை நேரத்தைக் காண இங்கே சொடுக்கவும்

200 மீட்டர் உலக சாதனை நேரம்


Flojo-வின் குறிப்பிடத்தக்க வெற்றிகள்...

1984 Los Angeles ஒலிம்பிக்    :  200 மீட்டர் வெள்ளி
1988 Seoul ஒலிம்பிக்           :  100 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக்           :  200 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக்              :  4x100 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக்                 :  4x400 மீட்டர் வெள்ளி




1988 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், அமெரிக்காவின் மும்முறை நீளம் தாண்டும் வீரரான தனது கணவர் Joyner-ருடன் ஆறு மாதங்கள் அதுவும் விடியற்காலையிலேயே இராணுவத்தைஒத்த பயிற்சிகளை Flojo மேற்கொண்டிருக்கின்றார். உலகமே வியக்கும் அளவுக்கு தான் செய்த சாதனையின் இரகசியத்திற்கு அதுவே காரணமென்றும் ஒரு முறை அவர் கூறியுள்ளார்.

தனது மின்னல் வேக ஓட்டத்தால், வித விதமான ஆடைகளால், நீண்ட நகங்களால் இரசிகர்களின் மனதில் அழகுப் பதுமையாக வலம் வந்த இந்த சிறகு மான், 1998-ஆம் ஆண்டு தனது 38-ஆவது வயதிலேயே மூச்சை நிறுத்தி விட்டு உலகில் இருந்து விடைப் பெற்றுக் கொண்டது. லண்டன் ஒலிம்பிக்கிலாவது Flojo-வின் சாதனைகளை யாராவது முறியடிப்பார்களா என பார்ப்போம்.  

" 24 ஆண்டுகளுக்கு முன் 100 மீட்டரில் Flojo செய்த நேரம் 10.49 வினாடிகள். ஆனால் இன்று உலகின் அதி வேக வீராங்கணையின் மிகச் சிறந்த நேரம் எவ்வளவு தெரியுமா? 10.70 வினாடிகள் மட்டுமே ! இப்போது தெரிகிறதா Flojo-வின் சாதனை அளவு "

தீக்குளித்த முதியவரின் வாயில் ஐஸ் கிரீம்


இஸ்ரேலில் நடந்த பேரணி ஒன்றில் பங்கேற்ற 57 வயது முதியவர் திடீரென தீக்குளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். உடன் இருந்தவர்கள் மிகவும் போராடி அவரைக் காப்பாற்றி உற்கார வைத்தனர். உடல் முழுவதும் தீயில் வெந்து கொண்டிருந்த அவருக்கு சாப்பிட ஐஸ் கிரீம் கொடுக்கப்பட, அவரும் அதை வாங்கி நிதானமாக சாப்பிட்டிருக்கின்றார். 80 விழுக்காட்டு தீப்புண் காயங்களுடன் கவலைக் கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.