அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Friday, 31 July 2020

ஒரே நாளில் உச்சம் தொட்ட சபா ஆளுநர்!

இவரா அவரா என முதல் அமைச்சர் நாற்காலி சண்டை தொடங்கி ஓய்வதற்குள் "பேச்சே இல்லை, போ!" என்று ஒரே போடாய் போட்டிருக்கிறார் மேதகு சபா ஆளுநர்!

அண்மையக் காலங்களில் #வியன் போட்ட கணக்கு மிஸ் ஆனது இதுவே முதன் முறை.

இன்னமும் அந்த அதிர்ச்சியில், ஆச்சரியத்தில் இருந்து வியன் மீளவில்லை..

என்றாலும், சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறான் வியன்.

மேதகு சபா ஆளுநர் Juhar Mahiruddin
யாருக்கும் இல்லை, மக்களே முடிவு செய்யட்டும் எனக் கூறி சட்டமன்றத்தைக் கலைத்து திடீர் தேர்தலுக்கே வித்திட்டு விட்டார் Tun Juhar Mahiruddin.  

புதிய முதல் அமைச்சராக Tan Sri Musa Aman காலையில் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதி எனத் தான் எல்லாரும் நம்பியிருந்தனர்.

அந்த அளவுக்கு, உறுதியாக நேற்று பில்டப் கொடுத்திருந்தவர், இன்று காலை தனது பரிவாரங்களோடு ஆளுநர் மாளிகைக்குச் சென்று விட்டார்.

"திரும்பி வரும் போது முதல் அமைச்சராகத் தான் வருவேன்" என்று திடமாக நம்பியிருந்தார்.

ஆனால், விதி விளையாடி விட்டது.

ஆளுநர் மாளிகையில் இருந்து புன்னகையுடன் வந்தவர் என்னமோ முதல் அமைச்சர் Datuk Seri Shafie Apdal தான். 

வந்தவர் நேராக Warisan கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தும் போதே, அவர் கதை முடிந்தது , பிரியாவிடை உரை ஆற்ற வருகிறார் என்று தான் நினைத்தார்கள்.

ஆனால், "சட்டமன்றத்தைக் கலைத்து மக்களிடமே முடிவை விட்டு விட பரிந்துரைத்தேன், ஆளுநரும் அதை ஏற்றுக் கொண்டு கலைத்து விட்டார்!" என சொன்ன மாத்திரத்தில் வியனுக்கு உள்ளபடியே சிலிர்த்து விட்டது.

இருக்காதா பின்னே?

எவ்வளவு பெரிய முடிவு அது ? 

வரிசையாக மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசுகள் கவிழ்ந்து வந்த நிலையில், இதுவொரு முன்னுதாரணமான நடவடிக்கையாக அமைகிறது.

இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்க முடியும்?

காளான்களே வெட்கித் தலைக்குனியும் அளவுக்கு வழக்கமாகி விட்ட கட்சித் தாவல் கலாச்சாரத்தைத் தவிர!
ஓட்டுக் கேட்டு போட்டியிடுவது ஒரு சின்னத்தில், பிறகு வரவு செலவு கணக்கைப் பார்த்து செட்டிலாவது இன்னொரு சின்னத்தில்!

காலங்காலமாக எல்லா நாடுகளிலும் இது உள்ளது தான் என்றாலும், இங்கு இப்போது ஒரு trend-டாகவே மாறி விட்டது.

தமிழகத்தில் கட்சித் தாவியவர்கள் இயல்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டு இடைத் தேர்தல் நடக்கும்.

இதற்குத் தான் கட்சித் தாவல் தடை சட்டத்தை இயற்றுங்கள் என பாட்டாய் படித்தும், நம்மூர் அரசியல்வாதிகள் 'செவிடன் காதில் சங்கூதியது போல்', இருந்து விட்டனர்; இருக்கின்றனர்.

2018-ல் வரலாறு காணாத வெற்றியுடன் ஆட்சியமைத்த பக்காத்தானாவது அதனை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்தால், அம்னோவில் இருந்து MP-களை இறக்குமதி செய்து, தனது BERSATU கட்சியை பலம் பெற வைப்பதில் பிசியாக இருந்தார் பெரியவர்.

விளைவு? 

கட்சி மாறிகளால், அவரின் ஆட்சியே ஒரேடியாகப் படுத்து விட்டது.

பூனைக்கு யார் தான் மணி கட்டுவது ? என்ற கேள்வியை எல்லாரும் மறந்து போயிருந்த நிலையில் தான் சபா ஆளுநர் அதிரடி காட்டியுள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் அம்னோவில் இருந்து வந்தவர்.

ஆட்சிக் கட்டிலுக்குத் திரும்ப படாத பாடு படும் Musa Aman முன்பு முதல் அமைச்சராக இருந்த போது, சபா சட்டமன்ற சபாநாயகரே இவர் தான். 

என்றாலும், ஆளுநர் என்பவர் நடுநிலை நாயகமாக இருக்க வேண்டும். 

அதை இன்று அவர் செயலில் காட்டியிருக்கிறார்.

கண்டிப்பாக சீர்தூக்கிப் பார்த்தே, சட்ட வல்லுநர்களின் ஆலோசணைகளைப் பெற்றே அவர் சட்டமன்றத்தைக் கலைத்திருக்கின்றார். 

சரி, தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறிக் கொள்ளும்  மூசாவுக்கு அதனை நிரூபிக்க ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம்.

வியன் விளக்குகிறான் வாருங்கள்....

2018-க்குப் போவோம்.....

மே 9 பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் ( 31 இடங்களில் வெற்றிப் பெற்று ) முதலில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றது என்னமோ அம்னோவைச் சேர்ந்த மூசா அமான் தான். 

சூறாவளிப் பயணத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஷாஃவியி அப்டால், 29 இடங்களை மட்டுமே வென்றதால், முதல் அமைச்சர் கனவு நிறைவேறவில்லை. 

ஆனால் 2 வாரங்களுக்குள் இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கமாக சிலர் தாவியதால், மூசா அமான் பெரும்பான்மை இழக்க, ஷாஃபியி முதன் முறையாக முதல் அமைச்சர் ஆனார்.

ஆக, ஆளுநர் கணக்கின் படி, பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி அமைக்க இருவருக்குமே உரிய வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இப்போது மீண்டும் அதே இருவர் நீயா நானா போட்டியில் வந்து நிற்கின்றனர். 

கட்சித் தாவலால் அமையும்  ஆட்சி எப்போதுமே நிலைத்தன்மையுடன் இருக்காது. 

யார் எந்த நேரத்தில் எந்தப் பக்கம் தாவுவார்கள் என்பதை சொல்ல முடியாது என்பதால், ஆட்சிக்கு மேலே எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலை தான்.

எனவே, இனி மீண்டும் மக்கள் முடிவுக்கே விட்டு விடுவதே சிறந்தது என்ற நியாயமான தீர்ப்புக்கு வந்திருக்கிறார் ஆளுநர். 

அதற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் சபாஷ் போடுவான் வியன் 👍

( இந்த அம்சத்தை தான் மத்தியில் மீண்டும் ஆட்சி மாற்றம் என செய்தி வந்த போது வியன் சுட்டிக் காட்டினான். பக்காத்தான் என்ன தான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாலும், நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வராமல், அதனால் புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்ற முடியாது என்று! என்னதான் உங்களிடம் 130 MP-கள் வந்தாலும், வாய்ப்பு இல்லை. ஏன் என்றால், ஒரு முறை ஆட்சியில் அமர உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது ( மக்களே அமர்த்திய ஆட்சி). பிறகு, நீங்கள் கவிழ, பெரும்பான்மை அடிப்படையில் தேசியக் கூட்டணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அதன் ஆட்சி நடக்கிறது. 

திடீரென ஆட்சியில் சிக்கல் ஏற்பட்டால், உடனே மாமன்னர் அன்வாரை அழைத்து நீங்கள் ஆட்சி அமையுங்கள் என்ற சொல்ல வாய்ப்பே இல்லை. காரணம், இரு தரப்புக்குமே வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது, ஆக அடுத்து மக்களிடம் தான் முடிவு விடப்படும். அதாவது முகிதின் அரசு இடைப்பட்ட காலத்தில் கவிழ்ந்தால் கூட, நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வருமே தவிர, பக்காத்தான் கைக்கு ஆட்சி மாறாது. இது தான் நிதர்சனம். )

ஆனால், நண்பர்கள் பலர் ஏற்கவில்லை. 
பரவாயில்லை, thank me later 😛

சரி, முன்னாள் அம்னோ உறுப்பினரான Juhar நினைத்திருந்தால் எதற்கு நமக்கு வீண் வம்பு? பேசாமல் மூசாவிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, சீட்டை காப்பாற்றிக் கொண்டிருப்பார்!

ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.

வியன் அவரை பாராட்டுவதே அந்தத் துணிச்சலுக்காகத் தான்...

இன்று அவரெடுத்துள்ள முடிவு தனிப்பட்ட வகையில் அவருக்கு பாதகமாக முடிய வாய்ப்புண்டு. எப்படி?

நடப்பு பதவிக் காலம் முடியும் போதோ, அல்லது அதற்கு முன்பாகவோ ஆளுநர் மாற்றப்படலாம். 

ஆனால், அப்படி எதுவும் நடக்காது என நம்புவோம். 👏


சபா மக்களே, நடந்தவற்றை கண்களால் கண்டீர்கள் அல்லவா?

ஆக, இம்முறை நிச்சயம் ஒரு தெளிவான தீர்ப்பைக் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை.

இருவரில் யார் உங்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவார் என்பதை அறிந்து, அவருக்கே தெளிவான, தீர்க்கமான வெற்றியைக் கொடுங்கள்.

இல்லையென்றால், நாற்காலி சண்டையில் அரசியல்வாதிகள் மீண்டும் உங்களை நட்டாற்றில் விட்டு விடுவார்கள்!



எது எப்படியோ, கட்சித் தாவல் கலாச்சாரத்திற்கு இது மிகப் பெரிய சவுக்கடி.

இனி வரும் காலத்தில், கட்சித் தாவினால் உடனே ஆட்சியும் மாறி விடும் என்ற நிலை வந்து விடாது; 

குறைந்தபட்சம் சபா ஆளுநரின் முடிவை உதாரணம் காட்டுவர்.  
அதுவே பெரிய மாற்றம் தானே?

மேதகு ஆளுநர் Juhar அவர்களே,

உங்களின் நடுநிலை நாயகத்தைக் கண்டும், தைரியத்தை வியந்தும்  

வணங்குகிறான்  #வியன் !

Wednesday, 29 July 2020

பீதியைக் கிளப்பும் அம்னோ ! கலவரத்தில் முகிதின் ?


"அம்னோ மிகப் பெரிய அரசியல் முடிவை எடுக்கும்!"

நஜீப்க்கு எதிராக தீர்ப்பு வந்த கையோடு அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடி நீதிமன்ற வளாகத்தில் பேசிய வார்த்தை அது. 

ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் அது என்னவாக இருக்கும் என மண்டையப் போட்டு குழப்பிக் கொள்ளாத குறைதான் பலருக்கு.

அந்தப் பரபரப்பே அடங்கவில்லை, இன்று மீண்டுமொரு பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார் அந்த முன்னாள் துணைப் பிரதமர்.

" வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொள்ளவே உண்மை மனப்பான்மையும் நேர்மையும் முக்கியக் கோட்பாடாக உள்ள பட்சத்தில், அதிகாரப் பகிர்வுக்கு சொல்லவா வேண்டும்?" 

" அவ்விரு குணங்களும் புறக்கணிக்கப்படும் போது , எந்தவொரு பகிர்வும்  மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்!"

இதுதான் அவர் பதிவேற்றிய Status-சின் மொழியாக்கம்.

அந்த பாகான் டத்தோ MP, நீதிமன்ற தீர்ப்புடன் தான் முடிச்சுப் போடுகிறார் என்பதை அரசியல் நோக்கர்கள் அப்போதே புரிந்துக் கொண்டிருப்பர்.

எல்லாருக்கும் புரியும் படி சொன்னால்....

"Perikatan Nasional கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம்!" என்பதை தான் சுற்றி வளைத்தும், வளைக்காமலும் சொல்லியிருக்கிறார்.

உண்மையிலேயே அவர் அந்த அர்த்தத்தில் தான் சொன்னார் என்றால்....

இப்பொழுது அப்படி என்ன நடந்து விட்டது? அப்படியொரு முடிவை எடுக்க?

அரசாங்கத்தில் இரண்டாவது மிகப் பெரிய பதவியை வகித்தவர் என்ற முறையில் அவரிடம் இதை வியன் எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் பொது வெளியிலாவது எதிர்பார்க்கவில்லை. 

இப்போது அவரின் பேச்சை வைத்து பெரிய பட்டிமன்றமே நடந்துக் கொண்டிருக்கிறது.

"இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? மிரட்டலோ? உண்மையிலேயே வெளியாகிருவாங்களோ? ஆட்சி கவுந்துருமோ?".... என !

ஆட்சியை அமைத்தது நீங்கள்; MP-களின் எண்ணிக்கை அடிப்படையில் தனிப் பெரும் கட்சியும் நீங்கள்; அதற்கெல்லாம் மேலாக, நாட்டிலேயே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்திருக்கும் அசுர பலம் பெற்ற கட்சி நீங்கள்....

நிலைமை இவ்வாறிருக்க, எதிர்பார்த்தது நடக்கவில்லை, அதனால் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வோம் என்ற அர்த்தம் வரும்படியாக பேசுவது எவ்வகையில் நியாயம்? நியாயம் என்பதை விட, வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் அல்லது மீண்டு வரத் துடிக்கும் உங்கள் கட்சியின் தோற்றத்திற்கு அது உகந்ததா?

உங்களின் உற்றத் தோழரும் நிரந்தரத் தலைவருமான முன்னவருக்கு உயர் நீதிமன்றம் தான் தீர்ப்பு வழங்கியிருக்கிறது; 

இதுவே உலகின் கடைசி நாள் அல்ல, இடிந்து போய் விழ!

இன்னும் மேல்முறையீட்டு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் என வாய்ப்புகள் இருக்கின்றன. 

யாருக்குத் தெரியும், அங்கே அவர் ஜெயிக்கலாம் அல்லவா?

இன்றைய உங்கள் முகநூல் பதிவேற்றம் பல்வேறு ஆருடங்களுக்கு வித்திட்டிருக்கிறது. உங்கள் எதிர்ப்பாளர்களுக்கு அல்வாவே கிடைத்து விட்டது.

நீதித் துறையில் தலையீடா? என்ற ரீதியில் அல்லவா போகும் விவாதம். 

அதுவும் இவ்வளவு தைரியமாக ஒருவர் வெளியே சொல்கிறார் என்றால், முன்பு ஆட்சியில் இருந்த போது இப்படித் தான் நடந்து வந்ததா என்ற கேள்வி எழாதா?

ஒருவேளை உண்மையிலேயே " நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக இல்லை; அதனால் வெளியேறுகிறோம்!" என்றறிவித்து விட்டு வெளியே போனீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் அரசியல் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் மிகப் பெரிய சரிவாக அது இருக்கும்.....
தேசிய முன்னணி MP-களுடன் இன்று அவசர சந்திப்பு நடத்திய ஜாஹிட்

இப்படியெல்லாம் தான் #வியன் கேட்பான், கேட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்..... 😜😜😜

அதற்கு எந்த அவசியமும் இல்லாமல் செய்து விட்டார் ஜாஹிட்.


ஆம், பிற்பகலில் தான் பதிவேற்றியிருந்த கருத்துக்கு நீண்ட விளக்கத்தை அளித்து தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

" நீதிமன்றத் தீர்ப்பைக் கையாள்வதில் UMNO/BN மிகச் சிறந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும். அதே சமயம் BN, Muafakat Nasional, Perikatan Nasional கூட்டணிக் கட்சிகளுடனான சகோதரத்துவம் தொடர்ந்து பேணப்படும். அதிகாரப் பகிர்விலும் நட்பிலும் நேர்மை, உண்மை மனப்பான்மை தொடர்ந்து முக்கியக் கோட்பாக இருக்கும்; கட்டிக் காக்கப்படும்" 

  
என்னடா இப்படி புஸ்வானம் ஆகிடுச்சேனு பார்க்குறேலே? பின்னே?

எல்லாம் அரசியல் சால்சால்பு தான், மக்களே!

பக்காத்தான் தலைவர்களுக்கே தெரியாமல் பிரதமர் பதவியைத் தூக்கி போட்டு விட்டு போக இவர்கள் என்ன மகா தீரரா? 

பதவிக்கு வந்து இப்போது தான் ஐந்தாவது மாதத்தையே தொடப் போகிறார்கள். இதில், முதலிரண்டு மாதங்களுக்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு சம்பளம் இல்லை.... ஆக......

#வியன் சொல்ல வருவது என்னவென்றால், உள்ளிருப்பவர்கள் ஒன்றும் எதுவும் அறியாதவர்கள் அல்லர்.

வெளியில் தான் ஏதோ, அவரவர் கட்சித் தொண்டர்களுக்கு அவ்வப்போது இப்படி எதையாவது பேசி வைத்து விட்டுப் போவார்கள்.

மீசையை முறுக்கிக் கொண்டு வெளியே போவதை விட, ஆட்சியில் இருப்பதே இப்போதைக்கு உத்தமம். 



புரிஞ்சவன் பிஸ்தா !

#வியன் 👋


Saturday, 25 July 2020

உள்ளே வெளியே : கிலியில் United - Chelsea ரசிகர்கள்!

ங்லீஷ் பிரிமியர் லீக் பருவம் நாளையோடு முடிவுக்கு வருகிறது!

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஆட்டங்கள் தொடருமா இல்லையா? லீக் பட்டம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்வியெல்லாம் போய், #லிவர்பூல் பட்டத்தை வென்று 30 ஆண்டு கால கனவை நிறைவேற்றியும் விட்டது.

பட்டத்தைத் தற்காக்கத் தவறிய #ManchesterCity இரண்டாம் இடத்தை உறுதிச் செய்து, #ChampionsLeague -கிற்குத் தகுதிப் பெற்று விட்டது.



இப்போது வழக்கம் போல், எஞ்சிய 2 இடங்கள் யாருக்கு என்பது தான்!

இந்த உள்ளே வெளியே போட்டியில் வந்து நிற்பது முன்னாள் வெற்றியாளர்கள் மூவர்

Manchester United, Chelsea, Leicester City

இதில் பேருந்தைத் தவற விடப் போவது யார் ?

எங்கே நமது அணி வெளியே போய் விடுமோ என்ற ஒரு வித அச்சம் ரசிகர்களை ஆட்கொண்டிருந்தாலும், வெளியில் நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள்.

எது நடந்தால் உள்ளே, எது நடந்தால் வெளியே என்பதைப் பார்ப்போமா?


Manchester United

கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து கடந்த வாரம் வரை முதல் 4 இடங்கள் பக்கமே தலைக் காட்டாத United, இப்போது மூன்றாமிடத்தில்! 

கடைசி 2 ஆட்டங்களில் வெற்றியை நழுவ விட்டு, சமநிலை கண்டாலும், Chelsea புண்ணியத்தில் (  The Blues-சின் அடுத்தடுத்தத் தோல்விகளால்)  3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது United.

United - Chelsea இரு அணிகளுமே சமமாக 63 புள்ளிகளை வைத்திருக்கின்றன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் தான் United மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. 


என்றாலும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், கோல் வித்தியாசமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

சரி, United-டுக்கு முதல் 4 இடங்கள் உறுதியாக வேண்டுமென்றால் நாளை என்ன நடக்க வேண்டும்?




அப்படி ஒன்றும் பெரிதாக செய்து விட வேண்டியதில்லை; Leicester-ரிடம் தோல்வி காணாமல் பார்த்துக் கொண்டாலே போதும். 

அதாவது குறைந்தபட்சம் சமநிலைக் கண்டு 1 புள்ளியைப் பெற்று விட வேண்டும். Leicester-ருக்கும் ஒரு புள்ளி கிடைத்தாலும், அதன் மொத்தப் புள்ளிகள் 63-ராக அதிகரிக்குமே தவிர, United-டின் 64 புள்ளிகளைத் தொட முடியாது. 

ஆக, Chelsea - Wolves ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி கவலைப்படாமல் United அசால்டாக Champions League தகுதிச் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

ஒருவேளை, United தோல்வி கண்டு, Chelsea-யும் Wolves-சிடம் தோற்று விட்டாலும் கூட, United-டுக்கு நான்காம் இடம் உறுதியாகி அது நுழைந்து விடும் ( காரணம், Chelsea-யின் கோல் வித்தியாசம், United-டை விட பலவீனமாக இருப்பது)


என்றாலும், சுருக்கமாகச் சொன்னால், United-டுக்குத் நாளைத் தேவை 1 புள்ளியே!




"நான்காம் இடம் என்னங்க, நான்காம் இடம்? மூன்றாம் இடத்திற்கே போவோம்! Leicester-கூட தான் ஆட்டம், வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது"

அறிவானந்தன் மாரிமுத்து 






" Top 4 Confirm-ங்கோ! அம்புட்டு தான்..."






" கொஞ்சம் இருக்கு வாய்ப்பு. Leicester கூட ஜெயிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா, draw பண்ணலாம் " 

அழகேந்திரன் கிருஷ்ணன்





" எப்படியும் Champions League போயிருவோம்னு நம்பிக்கை இருக்கு!"




Chelsea

Frank Lampard-டின் அணி கொஞ்சம் கொஞ்சமாக Leicester-ரை விரட்டிப் பிடித்து 3-வது இடத்தைப் பிடித்திருந்தது. Confirm என்ற உறுதியாக நினைத்திருந்த நிலையில் தான், ஆகக் கடைசி 2 ஆட்டங்களில் கண்ட தோல்வியால் சற்று ஆட்டம் கண்டு, இன்று நான்காம் இடத்தில் உள்ளது.



இப்போது கூட, நிலைமை அதற்குச் சாதகமாகத் தான் உள்ளது. ஆனால், எதிரே வில்லனாக நிற்பது Wolves. 

ஒரு காலத்தில் பெரிய அணிகள் எல்லாம் 'துவைத்து' எடுக்கும் அளவுக்கு பலவீனமாகக் கருதப்பட்ட Wolves, இப்பருவ ஐரோப்பா லீக்கில் இருக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது. 

அந்த அளவுக்கு பலம் பெற்று ( அதுவும் Tottenham, Arsenal, Everton அணிகளை எல்லாம் கீழே தள்ளி விட்டு ) திகழ்கிறது.

59 புள்ளிகளுடன் இருக்கும் Wolves-சுக்கும் நாளைய ஆட்டம் முக்கியம். வெற்றிப் பெற்றால் ஆறாம் இடத்தை உறுதிச் செய்து கொண்டு மீண்டுமொரு முறை ஐரோப்பா லீக்கிற்குள் நுழைந்து விடலாம். 

பின்னால் Tottenham-மும் துரத்தி வருவதால், Wolves கண்டிப்பாக வெற்றிப் பெறவே போராடும்.

ஆக, என்னதான் ஆட்டம் நாளை Stamford Bridge-ஜில் நடைபெற்றாலும், Chelsea-யைச் சந்திக்கப் போவது சாதாரண Wolves அல்ல.


Chelsea-க்கு குறைந்தபட்சம் தேவைப்படுவது 1 புள்ளி. ஆனால், United-டிடம் Leicester தோற்க வேண்டும். அப்போது தான் 4-காம் இடம் Chelsea-க்கு உறுதியாகும். 


ஒருவேளை Wolves-சிடம் தோற்றால் கூட Chelsea-க்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது, அதாவது Leicester-ரும் தோற்க வேண்டும். எதற்கு இப்படி குழப்பிக் கொண்டு? 

பேசாமல் வென்று விடுங்களேன், மூன்றாவது இடம் கூட கிடைத்து விடும். ரசிகர்களும் நிம்மதி அடைவார்கள்.


"வாய்ப்பு இருக்கு. 3-வது 4-வது இடம் எப்படியும் இருக்கு. Lampard coach-சா வந்து இந்த மாதிரி young players-சை வச்சிக்கிட்டு இந்த அளவுக்கு team-மை கொண்டு வந்ததே பெரிய விஷயம்!" 







"எப்படினு பார்ப்போம். எதையும் predict பண்ண முடியாது!"






வெற்றி வாய்ப்பு இன்னமும் எங்கள் பக்கமே. சமநிலை கண்டாலே போதும் என்ற நிலை தான்; Leicester வெற்றிப்  பெற்றால் மட்டுமே எங்கள் பாட்டம் திண்டாட்டம். தற்காப்பு அரணும் வலுவிழந்து உள்ளதால் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். Chelsea-யுடன் United-டும் தகுதிப் பெறும் என்றே நினைக்கிறேன். 

வீரசேனன் குணசேகரன்





"நான் கண்டிப்பா நம்புறேன், மூனாவது இடம் Chelsea-கு தான். Wolves கிட்ட ஜெயிப்போம், சந்தேகமே இல்ல. Kante வேற வந்துட்டாரு, அப்போ பார்த்துக்கோங்களேன்!"


Elvin Prince Jay






"கஷ்டம் தான் Top Four வரது. Points-லாம் ரொம்ப ரொம்ப கிட்ட இருக்கு. இருந்தாலும் நாளைக்கு game ஜெயிச்சே ஆகனும். ஏனா, United - Leicester என்ன ஆகும்னு தெரியாது. இங்க ஜெயிச்சா தான் உண்டு. எனக்கு என்னமோ FA Cup ஜெயிக்கிற வாய்ப்பு தான் பிரகாசமா இருக்குனு தோணுது"  


Prem Kumar




Leicester City

பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. பின்னே, மூன்றாவது இடத்தில் இருந்து சரிந்து இன்று 5-வது இடத்தில் அல்லவா உள்ளது! 

எல்லாம் கடைசி 8 ஆட்டங்களில் வெறும் 2-டில் மட்டுமே வெற்றிப் பெற்றதால் வந்தது.

United-டைத் தோற்கடித்தால் Leicester கண்டிப்பாக உள்ளே! ஆனால், அது சாதாரண விஷயம் இல்லை என்பது அதற்கே தெரியும். 

ஒருவேளை சமநிலைக் கண்டால் கூட Leicester-ருக்கு வாய்ப்பு உண்டு - ஆனால், Chelsea, Wolves-சிடம் தோல்வி காண வேண்டும். 

அப்படி நடந்தால் இரு அணிகளுமே தலா 63 புள்ளிகளைக் கொண்டிருக்கும், ஆனால் கோல் வித்தியாசம் Leicester-ருக்கே சாதகமாக இருப்பதால் நாங்காவது இடம் Leicester-ருக்கே!



தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒன்று வெற்றிப் பெற்று ராஜாவாக  உள்ளே நுழைவது, அல்லது சமநிலைக் கண்டு, Chelsea-யின் புண்ணியத்திற்காகக் காத்திருப்பது! இந்த இரண்டு தேர்வுகள் தான் உள்ளன.


இந்த உள்ளே வெளியே போட்டி குறித்து சமூக வலைத்தளங்களில் memes-களுக்கு குறைவில்லை. குறிப்பாக United  Chelsea அணிகளைக் கிண்டலடித்து....





கடைசி ஆட்டம் என்பதால் நாளை அனைத்தும் ஒரே நேரத்தில் இரவு 11 மணிக்குத் தொடங்கும். 

மறுநாள் அதிகாலைத் தெரிந்து விடும்...

Liverpool, Manchester City-யுடன் Champions League-கிற்குள் நுழையப் போவது யார்? 

இரண்டாம் டிவிஷனுக்குக் கீழிறங்கப் போவது யார் என்று!

திங்கட்கிழமை காலை Facebook வந்தால் தெரியும்......

அதுவரை, முழு மனமில்லை என்றாலும் 3 குழுக்களையும் வாழ்த்துகிறான் #வியன்  


Wednesday, 22 July 2020

ஓரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது!

'யானை வரும் பின்னே, மணியோசை வரும்  முன்னே' என்பது போல, பின்னால் நடக்கப் போவதை இப்போதே காதில் போட்டு விட்டுப் போகும் வகையில் செய்தி வந்திருக்கிறதோ?

15-ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த 'முக்கியப் புள்ளி' ஒருவர் பேசியிருக்கிறார். 


அவர் எந்தளவுக்கு முக்கியப் புள்ளி என்பது இருக்கட்டும் ( அட முன்னாள் மக்கள் பிரதிநிதிங்க) வந்த செய்தி தான் முக்கியம். 

யாரோ எவரோ எதையோ சொல்லி விட்டுப் போகிறார், அவர் என்ன கட்சித் தலைவரா? அதற்கெல்லாமா react செய்வது என நினைக்கலாம். 


இப்படி பல சந்தர்ப்பங்களில் அலட்சியமாக இருந்து கோட்டை விட்டவர் பலருண்டு. 


" நாங்கள் உங்கள் மீது பாசம் வைத்திருக்கிறோம். எனவே, போட்டியிட வேண்டாம். தேர்தல் முடிந்தப் பிறகு, சபாநாயகரோ, செனட்டரோ, அல்லது அமைச்சரவையில் இடமோ தருகிறோம்!"

நம்பவில்லையா?  ↠ சொடுக்கவும் 


2018 பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்கட்சியான தேசிய  முன்னணி, பரம வைரியான பாஸ் கட்சியுடன் இணங்கிப் போய், கைக் கோர்த்த போதே,  உள்ளபடியே இது #வியன் ஏறக்குறைய எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் இத்தனை சீக்கிரமாக நடக்கும் என நினைக்கவில்லை.

அதுவும் அவர் பயன்படுத்தியிருப்பது "தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால், ம.இ.காவுக்கு அது மரியாதையாக இருக்கும்!" எவ்வளவுப் பெரிய வார்த்தை?


அதாவது என்ன சொல்கிறார் என்றால், "வீம்புக்குப் போட்டியிட்டு, இருக்கும் ஓரிடத்தையும் இழந்து விடாதீர்கள்!"
இது அவரின் சொந்தக்  கருத்தா, அல்லது மேலிடம் சொல்ல சொன்ன கருத்தா? என்ற கேள்வியை வியன் உங்களிடமே விட்டு விடுகிறான். ஏன் என்றால், நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் அல்லவா?

இரு நாட்களுக்கு முன்னர் தான் இன்னொரு செய்தி வந்தது. அம்னோவின் நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி....

அதாகப்பட்டது,

அடுத்தப்  பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் MCA, 22-28 இடங்கள் வரை போட்டியிடும் என்று... அதாவது 14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 39 இடங்களை விட 10-15 இடங்கள் கம்மியாக. ( இது MCA தலைவர்களுக்கே தெரியுமா என தெரியவில்லை). 

MCA-வுக்கே அந்த நிலை என்றால், ம.இ.கா ? என வியன் வாயை திறந்து மூடுவதற்குள் 'ஆப்பு' அடுத்த வரியில் வந்தது...

ம.இ.காவுக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகள் தான் என்று! ( என்னப்பா, கடந்த பொதுத் தேர்தலில் 9-ல் போட்டியிட்டு வென்ற 2 தொகுதிகள் தான் என முடிவே பண்ணி விட்டீர்களா? )

கேமரன் மலையை விட்டுக்  கொடுத்ததால் தப்புக் கணக்குப்  போட்டு விட்டீர்களோ?

அந்தச் செய்தியையே பலர் படித்திருக்க மாட்டார்கள்; அதற்குள் இப்போது புதிதாக இது. இரண்டு கூட எதற்கு, பேசாமல் ஒதுங்கிக் கொள்ளுங்களேன் மரியாதையாக என்று சொல்லியிருக்கிறார் இவர்.


அதற்கு அவர் கூறும்  காரணம் என்னவென்றால், அப்படியொன்றும் கேட்டால் புல்லரித்து விடும் வகையறா அல்ல. அதே அரிதப் பழசான... "இந்த நாட்டில் எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் இந்தியர்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக இல்லை. ஏறக்குறைய 10 விழுக்காடு தான். இந்த நிலையில் அவர்களைப்  போய் நிறுத்தினால், மலாய்க்காரர்களின் வாக்குகள் எப்படி கிடைக்கும்? அரசியல்வாதிகள் திறந்த மனதுடன் தியாக மனப்பான்மையைக்  கொண்டிருக்க வேண்டும்"


"கவலைப் படாதீர்கள், தேர்தலில் தான்  போட்டியில்லை. ஆனால், அரசாங்கம் அமைந்ததும் ஒன்றோ அல்லது இரண்டு முழு அமைச்சர்களையோ, சில துணை அமைச்சர்களையோ நியமித்துக் கொள்ளலாம். இருக்கவே இருக்கிறது செனட்டர் பதவி" என அவர் தொடருகிறார்.  

"ஆனால், MCA போட்டியிடலாம். சீனர்கள் பெரும்பான்மையாக உள்ளத் தொகுதிகளில் DAP-யுடன் நேருக்கு நேர் மோதி வெற்றிப் பெற அவர்கள்  போட்டியிட வேண்டும்."

ஐயா சாமி, "போனால் போகட்டும், எதையோ தட்டில் வைத்துப் போடுவது" போல் அல்லவா இருக்கிறது உங்கள் பேச்சு?

தேசிய முன்னணியின் கோட்பாட்டையே சிதைக்குறீரே?

இன்பத்திலும் துன்பத்திலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கூடவே இருக்கும் உற்றத் தோழனுக்கு நீங்கள் செய்யும் கைமாறா இது? அந்த உற்றத் தோழனின் தோல்விக்கும் சறுக்கல்களுக்கும் ஒருவகையில் நீங்களும் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

சிறுபான்மை இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சியாக உங்களுடன் வைத்துக்  கொண்டு, நேரம் பார்த்து அடிப்பது நன்றாகவா இருக்கிறது?

Friends படத்தில் மூன்று இணைப்பிரியா நண்பர்களும் கைக் கோர்த்து நடந்து வருவதைப் போல் பொதுவில் காட்டிக் கொண்டு, பின்னாடி இந்த வேலையைப் பார்ப்பதா?

2018 பொதுத் தேர்தல் தோல்வி என்பது ஒட்டுமொத்த தேசிய முன்னணியின் 60 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கே கிடைத்த மரண அடி. மேலே நஜீப் தொடங்கி கீழே கடைநிலை வேட்பாளர் என மொத்தமாக சாய்ந்தார்கள். எல்லா பக்கமும் பிரச்னை தூக்கி அடிக்க, சரிந்தது சாம்ராஜ்யம்.

அம்னோ தோற்றால், அது மும்முனையால் ஏற்பட்டது? ம.இ.கா தோற்றால், அதன் பலமே அவ்வளவு தான் ! அப்படியா?

இப்போது நிலைமை அப்படி அல்ல. 2 வருடங்களுக்குள் ஆட்சிக் கட்டிலுக்குள் திரும்பி விட்டீர்கள். தேரை வேறொருவர் செலுத்தினாலும், பின்னால் தனிப் பெரும் கட்சியாக இருப்பது நீங்கள் தான்.    

சரி இப்படி எல்லாம் வியூங்கள் வகுக்கப்படுவது ( ஒரு பேச்சாகவே இருக்கட்டுமே) எல்லாம் எதற்காக? வேறு எதற்காக, புதியக்  கூட்டாளிகளுடன் சமப் பங்காய் தொகுதிகளைப்  பிரித்துக் கொள்வதைத் தவிர?

#MuafakatNasional என்ற பெயரில் பாஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த அம்னோ, முன்பெப்பொழும் இல்லாத வகையில் இம்முறை அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. சபா-சரவாக் கட்சிகள் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துச் சென்று விட்டது, அதற்கு இன்னும் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டது. தீபகற்பத்தில் 11 தொகுதிகளில் போட்டியிட்டு வந்த கெராக்கானும் போய் விட்டது. ஆக எல்லா பக்கமும் அம்னோவுக்கு இலாபம் தானே!



ஆனால் அந்தக் கணக்கு, மார்ச் மாத ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சற்று ஆட்டம் கண்டிருக்கிறது என்பது தான் உண்மை. இப்போது BERSATU-வும்,  கூடவே ஆட்சி மாற்றத்திற்கு பெரிதும்  உதவிய Azmin Ali-யும் வந்து விட்டார்கள். பிரிந்து போன சபா-சரவாக் கட்சிகளும் #PerikatanNasional உறுப்புக் கட்சிகளாக (அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும்) வந்து விட்டன. இதில் GPS கண்டிப்பாக 20 தொகுதிகளுக்கும் குறைவாக வாங்காமல் விடாது. சபாவிலும் அப்படித் தான். 

ஆக, அம்னோ போட்ட கணக்கு பிணக்காகி விடும்  போலிருக்கிறது. திடீர் தேர்தல் வந்தால் முகிதின் யாசினே பிரதமர் வேட்பாளர் என்ற பட்சத்தில், பெர்சாத்துவுக்கும் கணிசமான தொகுதிகளை ஒதுக்கியாக வேண்டும்.  என்னதான் பக்காத்தானில் போட்டியிட்ட 56 தொகுதிகள் இம்முறை பெர்சாத்துவுக்கு கிடைக்காது என்றாலும், குறிப்பிட்ட தொகுதிகளைக் கொடுத்தே ஆக வேண்டும். முகிதின் செல்வாக்கு பெரிக்காத்தானுக்கு அல்வா மாதிரி. ஒதுக்கிட முடியாது. 


இதில் சிக்கல் என்றால், கடந்தப் பொதுத் தேர்தலில் அம்னோ, பெர்சாத்து, பாஸ் ஆகிய மூன்றும் தான் முக்கால்வாசி இடங்களில் மும்முனைப் போட்டியில் இறங்கின. ஆக, இவர்களுக்குள் இப்போது சீட்டைப் பிரித்துக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல ( அது பெரிய பஞ்சாயத்தில் தான் போய் முடியும், பாருங்கள்) 

சபா - சரவாக் கட்சிகளையும்  பகைத்துக் கொள்ள முடியாது. சுளையாக 57 தொகுதிகள் அங்கிருந்து வருகின்றன.

ஆக, யார் மடியில் கை வைப்பது என்ற முடிவுக்கு வரும் போது, கண்ணில் படுவது வேறு யாராக இருக்கும்? மசீச - மஇகாவைத் தவிர? 

"2008 பொதுத் தேர்தல் தொடங்கி உங்களால் தான் எங்களுக்கு வீழ்ச்சி,  நாங்களாவது தட்டுத் தடுமாறி சீட்டுகளை வெல்கிறோம். நீங்கள்? எனவே பழைய கதையெல்லாம் இங்கு எடுபடாது! கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையென்றால் நடையைக்  கட்டுங்கள்!" என்ற ரீதியில் சூழ்நிலை போகவும் வாய்ப்பு உண்டு.

அதன் முன்னோட்டமாகத் தான், இந்த 2 சீட்டு கதை, சீட்டே இல்லை என்ற தகவல்கள் அங்கும்  இங்குமாக  முளைக்கின்றன.

புரிந்தவன் பிஸ்தா! 

#வியன் சொல்ல வருவது என்னவென்றால், அரசியலில் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உரிமை என வரும் போது பேசித் தான் ஆக வேண்டும்.

வியன் ஏற்கனவே சொல்லி வந்திருப்பது போல, யார் ஆட்சி அமைத்தாலும் நமது பிரதிநிதித்துவம் முக்கியம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சில மாநிலங்களிலும் ஆட்சி மாறிய போது, அரசு ஆட்சிக் குழுவில் நமக்கு ஆள் இல்லை என்பதை கவனித்தீர்களா?

ஆக, எண்ணிக்கை முக்கியமல்ல, என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்ற பொதுவான வாதம், எல்லா நேரத்திலும் எடுபடாது. இந்த விஷயத்திலும் அப்படித் தான்.

9 சீட்டுகள் அதிரடியாகக் குறைந்து 2-ல் வந்து நின்றால் என்னாவது? பறிபோன அல்லது விட்டுக் கொடுத்த அந்த 7 சீட்டுகள் திரும்பக் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தாலும் அது எப்போது? 60 ஆண்டுகளுக்குப் பிறகா?

ம.இ.கா தானே, அது ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன என்றும் இருந்து விட முடியாது. காரணம், பெரிக்காத்தான் நேஷனலோ அல்லது பழைய பாரிஷான் நேஷனலோ வெற்றிப் பெற்று தொடர்ந்து ஆளுங்கட்சியில் அவர்கள் இடம் பெற்று வந்தால், வெறும் 2 சீட்டுகளை வைத்துக்  கொண்டு என்ன செய்வது? (அது கூட அந்த இரண்டிலும் வெற்றிப் பெற்றால் தான் உண்டு!)

அப்படியொரு நிலைக்கு ம.இ.கா போகாது, தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என வியன் நம்புகிறான். 

இந்தச் செய்தியில் வந்தது போல், இரண்டை மட்டுமே பெற்றுக் கொண்டால், கட்சியினருக்கு பதில்? உதவித் தலைவர்கள் போக, இளைஞர் மகளிர் பிரிவுகளுக்கும் தொகுதி வேண்டுமே!

ஆக, விழிப்போடு இருப்பது நல்லது. மேலவைத் தலைவர் பதவி முடிந்து விட்டது. அடுத்த சுற்று எப்போது வருகிறது என்பது தெரியாது.

தேர்தலுக்கு முந்தைய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உறுதியாக நில்லுங்கள். தொகுதி மாறினாலும் பரவாயில்லை, எண்ணிக்கையில் கை வைக்க விடாதீர்கள். உங்கள் கூட்டணி, ஆட்சிக்குத் திரும்புவது தான் குறிக்கோள், அதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார் ; வேறு வழியின்றி இணங்கிப் போகத்தான் வேண்டும் என்ற நிலை வந்தால் ஓரிரண்டு தொகுதிகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காதீர்கள். அது கூட (ஏற்கனவே தேசிய முன்னணிப் பங்காளிக் கட்சிகளுக்குப் பழகிப் போன) நிபந்தனையோடு தான் இருக்க வேண்டும்...அடுத்தத் தேர்தலில் திருப்பித் தரப்பட வேண்டும் என்று!    

என்னடா, ஒன்றுமே இல்லாத விஷயத்தை வியன் ஊதிப் பெரிதாக்குகிறானே என நினைத்து விட வேண்டாம். " A week is a long time in politics" அதாவது அரசியலில் ஒரு வாரம் என்பது கூட மிகப் பெரியக்  காலக் கட்டம் என சொல்லுவார்கள். 

ஆக, எல்லாம் சரியாக நடக்கும், வரும்  போது பார்த்துக்  கொள்ளலாம் என்று விட்டு விட முடியாது. வெறும் ஒரே வாரத்தில் தான் இந்த நாட்டில் ஆட்சியே மாறியது!

தேர்தல் பேச்சு அடிபடும் நேரத்தில், இது போன்ற செய்திகள் வெளிவருவது கண்டிப்பாக பல யூகங்களை எழுப்பத் தான் செய்யும். ஆமா? அப்படியா? ஐயயோ? அப்போ நமக்கு சீட் இல்லையா? என்ற கேள்விகள் தலைவர்களுக்கு மத்தியில் உருவாகத் தான் செய்யும்; தொண்டர்களும் சோர்வடையத்தான் செய்வார்கள்.   

விக்கி, உங்களின் தலைமைத்துவத்திற்கு இது மிகப் பெரிய சவால். இதில் வெற்றிப் பெற்றால், ஒட்டு மொத்தக் கட்சியும் உங்கள் பின்னால் அணி வகுக்கும். தேர்தல் களப்பணியும் செவ்வனே நடைபெறும்.

தேர்தலில் தோற்பதற்கு முன்பே தோற்று விட்டார்களே என்ற அவப்பெயர் வந்து விடக்  கூடாது!

#வியன் நம்பிக்கை இழக்கவில்லை.....