பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் தலைமையிலான #PerikatanNasional ( PN ) அரசாங்கம் மக்களைச் சந்திக்க முடிவு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது!
நிலைமை தமக்குச் சாதகமாகி வருவதை உணர்ந்த முகிதின் திடீர் தேர்தலுக்குத் தயாராகி வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கப்பூர் Straits Times பத்திரிகை பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு முடிவதற்குள் அதனை நடத்தி முடித்திட அவர் எண்ணியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திடீர் தேர்தல் விடும் தனது விருப்பத்தை கடந்த ஜூன் நான்காம் தேதி நடைபெற்ற BERSATU கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் முகிதின் தெரிவித்ததாக, உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் MalaysiaKini -யிடம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
அரசியல் - பொருளாதார - சுகாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு நாட்டில் நிலைத்தன்மை ஏற்பட்டவுடன் கூடிய விரைவில் தேர்தலை நடத்தி முடித்திட முகிதின் விரும்புகிறாராம்.
தமது தலைமையிலான அரசு மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டை முறியடிக்க அது அவசியம் என அவர் நினைக்கிறாராம்.
என்றாலும், தேர்தலை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல் குறித்து அதன் போது விவாதிக்கப்படவில்லையாம். பெர்சாத்து உட்கட்சிப் பூசலைத் தீர்க்கவும் திடீர் தேர்தலே சரியான வழி என்பதை கூட்டத்திற்கு வந்திருந்தோரும் பொதுவில் ஏற்றுக் கொண்டார்களாம்.
பக்காத்தான் ஆட்சிக் கவிழ்ந்து, UMNO -BN, PAS, GPS கட்சிகளை இணைத்துக் கொண்டு முகிதின் PN அரசாங்கத்தை அமைத்த போது, பெர்சாத்துவின் 31 MP-கள் அவர் பக்கம் நின்றனர்.
எதிர்த்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பக்கம் ஐவர் வந்தனர்.
அன்றிலிருந்து முகிதீனா மகாதீரா என பெர்சாத்து பிளவுற்று, உட்கட்சி பூசல் போய்க் கொண்டிருக்கிறது.
முகிதினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர அனுமதி கேட்டு, அதில் மகாதீர் வெற்றியும் பெற்று விட்டார்.
ஆக, ஜூலை அமர்வின் போது , மக்களவையில் முதல் அங்கமே அனல் பறக்கும் என்பது நிச்சயம்.
மே 18 ஒரு நாள் அமர்வின் போது கட்சி உத்தரவுக்கு எதிராக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்ததாகக் கூறி மகாதீர் அவர் மகன் டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் உள்ளிட்ட 5 MP-கள் இயல்பாகவே கட்சி உறுப்பியத்தை இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், கட்சி விவகாரங்களை நீதிமன்றம் எடுத்துச் செல்வோர் பஞ்சாயத்தே இல்லாமல் கட்சி உறுப்பியத்தை இழப்பர் என்ற கட்சி விதிகள் இருப்பதால் மகாதீர் அதில் வெற்றிப் பெறுவது கடினமே. ( இப்படி ஒரு சட்டத்தை 80-களின் இறுதியில் அம்னோவில் கொண்டு வந்தவரே மகா தீரர் தான் )
தேர்தலுக்கு வருவோம்...
PN என்ற கூட்டணியாக பெர்சாத்து தேர்தலைச் சந்தித்தால், அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
எப்படியாவது தனது தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கனவுக் கண்டு கொண்டிருக்கும் அம்னோ, முகிதினுக்கு அவ்வளவு எளிதில் சீட்டுகளை விட்டுக் கொடுக்காது.
ஆனாலும், தமது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அம்னோ பாஸ் இல்லாமல் கூட தேர்தலைச் சந்திக்கும் மனோ தைரியம் முகிதினுக்கு இருக்கிறது என்றே கூறப்படுகிறது.
செல்வாக்குடன் இருக்கும் முகிதின் முதுகில் சவாரி செய்து கூடுதல் இடங்களைப் பிடிக்க கூட்டணிக் கட்சிகள் முன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திடீர் தேர்தல் நடந்து PN வெற்றிப் பெற்றால் முகிதீனே தொடர்ந்து பிரதமராக இருக்கலாம் என உடன்பாடு காணப்பட்டிருப்பதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகியது நினைவிருக்கலாம். ஆனால், ஆனால்....
ஒருவேளை தேர்தல் நடந்து #முகிதின் பக்கம் தோல்வி என்றால், அந்த எட்டாவது பிரதமரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்காமலா 48 ஆண்டு கால அரசியல் அனுபவத்தைக் கொண்ட முகிதின் கணக்குப் போட்டிருப்பார்.
அப்படியே ஒருவேளை தோற்றுப் போனாலும், அவர் இழக்க இனி ஒன்றுமில்லை.
பின்னே, துணைப் பிரதமரோடு அவரின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என நினைத்தவர் பிரதமர் நாற்காலியையும் அலங்கரித்து ( தேர்தலைச் சந்திக்காமல் ) அரசியல் வாழ்வின் உச்சத்தைத் தொட்டு விட்டாரே...!
- #வியன்
No comments:
Post a Comment