தேர்தலுக்குத்
தயார் - அம்னோ தலைவர் அறிவிப்பு!
15-ஆவது பொதுத்
தேர்தலுக்குத் தயார் என போர் முரசு கொட்டியிருக்கிறார் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட்ஹமிடி. முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது வீட்டுக்கு
வந்து உணவருந்தி விட்டு போன நிலையில் அந்த முன்னாள் துணைப் பிரதமர் அவ்வாறு சொன்னார்.
ஜாஹிட் வீட்டில் நஜீப் |
" நாங்கள்
தயார், நீங்கள் தயாரா ? என்ற வாசகத்துடன் தனது முகநூல் பக்கத்தில் நஜீப்புடன் இருக்கும் படத்தை அவர்
பதிவேற்றியுள்ளார். மீண்டுமோர் ஆட்சி
மாற்றமா என கடந்த ஒரு வாரமாகவே நிலவி வரும் வதந்திகளுக்கு மத்தியில் ஜாஹிட் அவ்வாறு
கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் முகிதின் யாசின் |
Sheraton நகர்வின்
மூலம் Pakatan Harapan கூட்டணியில் இருந்து
BERSATU -வை வெளியேற்றி, அம்னோ, தேசிய முன்னணி, PAS, மற்றும் சரவாக் கட்சிகளின் கூட்டமைப்புடன் #PerikatanNasional என்ற புதிய அரசை தான் ஸ்ரீ முகிதின் யாசின் அமைத்தார்.
மலாய்க்காரர்-முஸ்லீம்
பெரும்பான்மை அரசான PN ஆட்சியில் அமர்ந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில்,
அதுவும் அம்னோவின் முக்கியப் புள்ளிகள் அமைச்சர்களாவும், துணை அமைச்சர்களாகவும், அரசு
சார்பு நிறுவனங்களில் இயக்குனர்களாவும் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென ஜாஹிட்
15-ஆவது பொதுத் தேர்தலைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?
இதே ஜாஹிட் தான்,
அடுத்த பொதுத் தேர்தல் 2023-ஆம் ஆண்டு வரும் வரை முகிதின் அரசை ஆதரிப்போம் என கூறியிருந்தார். ஏற்கனவே ஆளுங்கட்சிக்கு
பெரும்பான்மை இல்லை என்ற பேச்சு நிலவுகிறது. முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒரு படி
மேலே சென்று, முகிதின் அரசு சிறுபான்மை அரசு, எனவே அதனை தகுதி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அனுமதியும் பெற்று விட்டார்.
மலேசிய நாடாளுமன்றம் |
ஜூலை மாத அமர்வின்
போது மகாதீரா முகிதினா என்ற உச்சக்கட்ட போர் மக்களவையில் நிச்சயம் என எல்லாரும் காத்திருக்கும்
நிலையில் தான், அரசியலில் கடந்த ஒரு வாரமாக இன்னொரு வதந்தி சூடு பிடித்துள்ளது.
அதாவது ஜூலை மாததிற்கு
முன்பாகவே மீண்டும் ஆட்சியில் அமரும் அளவுக்கு பக்காத்தான் பெரும்பான்மை பலம் பெற்றிருப்பதாக
அக்கூட்டணி தலைவர்கள் சிலரே வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.
அன்வார் இப்ராஹிம் |
129 MP-கள் தங்கள்
பக்கம் வந்து விட்டதாகவும், அவர்களின் பெயர்ப்
பட்டியலுடன் மாமன்னரைச் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவி
வருகின்றன. ஆனால் அது குறித்து கருத்துரைத்த பக்காத்தானின் தற்போதையத் தலைவர் டத்தோ
ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , அது இன்னமும் இறுதிச் செய்யப்படவில்லை என்றார்.
ஆக, ஒரு பக்கம்
ஆட்சி மாற்றம் குறித்த வதந்திகள் சூடு பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியில் ஓர் அங்கமான
அம்னோவின் தலைவரே திடீரென தேர்தல் குறித்து
ஆருடம் கிளப்பியுள்ளார். புதிய ஆட்சி அமைக்க படாதப் பாடு பட்டு விட்டு, இன்று சம்பந்தமே இல்லாமல்
திடீரென தேர்தலுக்குத் தயார் என ஜாஹிட் கூறுவதால் ஒருவேளை பெரும்பான்மை இல்லையோ என்ற
சந்தேகம் எழாமலும் வலுக்காமலும் இல்லை.
ஒரு வேளை நாளையே திடீர் தேர்தல் வந்தாலும் நாம் வெற்றிப் பெறுவது திண்ணம், ஆட்சிக் கட்டிலில் அமரப் போவதும் உறுதி என ஜாஹிட் அதீத நம்பிக்கைக் கொண்டிருக்கின்றாரோ?
ஆனால், கொரோன வைரஸ்
பெருந்தொற்றுக்கு எதிராக முகிதின் அரசு போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு
திடீர் தேர்தல் விடப்படுமா என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வி.
ஏற்கனவே பொருளாதார
பின்னடைவு, வேலை இழப்பு என மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில்
தேர்தலை நடத்தி மீண்டும் பெரும் செலவு செய்ய வேண்டுமா என்ற வாதமும் நியாயமே. கடந்த
14-ஆவது பொதுத் தேர்தலை நடத்த 40 கோடி ரிங்கிட்டை தேர்தல் ஆணையம் செலவிட்டிருந்தது.
ஒருவேளை ஆட்சி
மாற்றத்திற்காக மற்றுமோர் அரசியல் நகர்வு எடுக்கப்பட்டு, கட்சித் தாவல் அரங்கேறுகிறது
என்றே வைத்துக் கொள்வோம், அப்போது மாமன்னர்
என்ன முடிவு எடுப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால், அண்மைய ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வின் போது மாமன்னர் ஆற்றிய உரையை கூர்ந்து கவனித்தால் என்ன நடக்கும், நடக்கலாம் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.
↠ மாமன்னர் உரை ↞
வரலாறு காணாத வகையில் நாடு ஒரே நேரத்தில் அரசியல்-பொருளாதார-சுகாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இவற்றை எதிர்கொள்ள நிலையான அரசு தேவை. எனவே இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கி விடாதீர் என மக்களவை உறுப்பினர்களுக்கு மாமன்னர் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆக, இவ்வாண்டு இறுதிக்குள் திடீர் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவே என்பதே வியனின் கணிப்பு.
அதுவரையில் நடக்கும்
'நாடகங்களை' #சிந்தித்தவேளை -யுடன் நீங்களும் கண்டு மகிழுங்கள்.
1 comment:
Arumai
Post a Comment