நன்றி வணக்கம்!
ஐயா சாமி, நீங்க செஞ்சதெல்லாம் போதும், போய்ட்டு வாங்கப்பு...
என்று மகாதீருக்கு ஒரு வழியாக பெரிய கும்பிடு போட்டிருக்கிறது PKR ( இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் )
பக்காத்தான் ஆதரவாளர்கள் குறிப்பாக PKR உயிர் தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட வாய்ப்பு வந்திருக்கிறது.
பின்னே, ஒன்பதாவது பிரதமர் லிஸ்டிலும் தங்களின் அன்புத் தலைவர் அன்வார் இல்லையென கடந்த சில நாட்களாகவே அரசல் புரசலாகவும், ஏன் சில சமயங்களில் வெளிப்படையாகவுமே வெட்ட வெளிச்சமானதால் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இன்று வெளியாகியுள்ள தகவல் ஊக்கம் கொடுக்காமலா இருந்திருக்கும்?
இன்று இயங்கலை வாயிலாக கூடிய PKR மத்திய செயலவை உறுப்பினர்களும் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகாதீர் மீண்டும் பிரதமராவதை ஏகமனதாக நிராகரித்தினர்.
நம்பிக்கைக் கூட்டணி ஏற்கனவே ஒருமனதாக எடுத்த முடிவின் படி அன்வாரையே அடுத்தப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக கூட்டாக அறிவித்தனர்.
என்றாலும் கூட, 'மலேசியாவைக் காப்பாற்றும் முயற்சியிலும், மக்கள் அளித்தத் திர்ப்பை நிலைநாட்டவும்' மகாதீர் உட்பட எல்லா தரப்புடனும் பேசுவதற்குத் தயார் என அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அதே சமயம், எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் விடப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதால், அதனை எதிர்கொள்ளும் முயற்சியிலும் PKR முழு கவனத்தைத் திருப்பி செயலாற்றும் என உறுதி பூண்டிருக்கிறார்கள் என்று அறிக்கையை முடித்திருக்கிறார் PKR பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ Saifuddin Nasution Ismail.
2018 பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு மகாதீர் - அன்வார் சமரசம் செய்து கொண்டதில் இருந்து மகாதீருக்கு எதிராக பிகேஆர் வெளிப்படையாக இப்படியொரு முடிவை எடுத்திருப்பது இதுவே முதன் முறை.
நடுநிலையாளர்களும் இதை வரவேற்கவே செய்கின்றனர்.
காரணம், மகாதீரால் 2 முறை பிரதமர் நாற்காலியைப் பறிகொடுத்த அன்வார், மூன்றாவது முறையாக வாய்ப்பு வந்து அதனையும் பறிகொடுக்க ஒப்புக் கொண்டால், இனி அவரை அந்த ஆண்டவானாலேயே காப்பாற்ற முடியாது என்பதை #வியன் கூட நேற்று முந்தினம் எழுதியிருந்தேன். கிளிக் செய்யவும்
மக்களின் குரல் கேட்டு விட்டதோ என்னவோ!
எது எப்படியோ, நம்பிக்கைக் கூட்டணியை வழிநடத்த அன்வாருக்கு இருந்த பெரியத் தடை நீங்கியுள்ளது.
இன்றைய முடிவு இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் நேற்று மாலையே ஏறக்குறைய கணித்திருந்தார்கள்.
காரணம், அன்வார் தனது டிவிட்டர் பக்கதில் பதிவேற்றியப் படங்களும், வாசகங்களும் தான்.
" வழக்கம் போல், இன்று மாலை தோட்ட வேலையைத் தொடருகிறேன். தூய்மையான - ஒழுங்கான சூழல் நிலவுதை உறுதிச் செய்ய, எதையெல்லாம் 'கவாத்து' பண்ண வேண்டுமோ , எதையெல்லாம் சரி செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும்!" 😊
'கவாத்து' பண்ண போகிறேன் என்பதை மகாதீரைக் குறிப்பிட்டு தான் மறைமுகமாக அன்வார் சொன்னாரோ என்னவோ?
இப்படியொரு தைரியமான அன்வாரை தான் மக்கள், குறிப்பாக அவரின் உயிர் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது நீங்கள் எதிர்கட்சித் தலைவர். அதற்குண்டான Mass-சுடன் வலம் வாருங்கள். அடுத்தப் பிரதமர் வேட்பாளர் தான் என்பதை உங்களின் அதிரடி செயல்களின் மூலம் நிரூபியுங்கள். திடீர் தேர்தல் நடந்து மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்களோ இல்லையோ, உங்களின் பிரதமர் கனவு நிறைவேறுகிறதோ இல்லையோ, மகாதீரின் நிழலில் இருந்து விடுபட்டீர்கள் என்ற நிம்மதியாவது மிஞ்சும்.
இந்த சந்தடி சாக்கில், எதற்கு இருவரையும் பகைத்துக் கொள்ள வேண்டும்? என்ற ரீதியில் அவருக்கு இவர், இவருக்கு அவர் என solution Offer-களை முன் வைத்து அன்வாருக்கு அறிவிக்கப்படாத நெருக்குதல்களை அளித்து சில நாட்களாக 'பூச்சாண்டி' காட்டி வந்த கூட்டணி கட்சிகள் இப்போது என்ன reaction கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.
பார்ப்போம், பூசி மொழுக அவர்களுக்குக் காரணங்கள் கிடைக்காமலா போய் விடும்?
#வியன்
1 comment:
Aagamotham magatheerar than karma vinaigalai anubavikka todangivittar.. #kaathirupoom !
Post a Comment