அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 17 June 2020

WAR-ருக்குத் தயாரா AnWAR ?

ரசல் புரசலாக வரும் தகவல்கள் ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், எட்டாவது பிரதமர் கனவுக் கலைந்துப் போன #PKR கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிலை குறித்து #வியன் நிச்சயம் வருத்தப்படுவான்!

ஆம், ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தமாக 22 ஆண்டுகள்!

ஐந்தாவது பிரதமர் கனவுப் போய்,  பின்னர் ஆறாவது பிரதமர் கனவுப் போய், எட்டாவது பிரதமர் கனவும்  போய் இன்று எதிர்கட்சித் தலைவராக (மீண்டும்) உட்கார்ந்திருக்கிறார்.

அதுவும் எட்டாவது பிரதமராகும் வாய்ப்பு அவரின் கைக்கு எட்டாமல் போன விதம் உண்மையிலேயே பாவம் தான்.

அரசியலில் வீழ்ச்சியும் எழுச்சியும் சகஜம்; அதுவும் சிறை வரை சென்று, எல்லா அவமானங்களையும் சந்தித்த அன்வாருக்கு அதெல்லாம் மிக மிக சகஜம்.

இப்போது பிரதமர் நாற்காலி அவருக்கில்லை என்றாகி விட்டது. எதிர்கட்சித் தலைவராகத் திரும்பியிருக்கிறார்.

இதில் ஒன்றே ஒன்று வியன் சந்தோஷப்படும் விஷயம் என்னவென்றால் மகாதீர் நாடாளுமன்றத்தில் இருக்கும் போது, அவரை விட மூத்த இடத்தில் அன்வார் அமர்ந்திருப்பது இதுவே முதன் முறை.

ஆம், அன்வார் இப்போது எதிர்கட்சித் தலைவர்; ஏழாவது பிரதமரான மகாதீர் வெறும்  நாடாளுமன்ற உறுப்பினர்.

ஆக, மகாதீரை முந்தி அன்வார் இப்போது முன் வரிசைக்கு வந்திருக்கிறார்.

மகிழ்ச்சி தான், ஆனால் மகிழ்ச்சி இல்லை!

என்ன வியன் ஒரேடியாகக் குழப்புகிறானே என்கிறீர்களா? பின்னே, என்ன செய்ய சொல்கிறீர்கள்?

நடப்பதும் அப்படித் தானே இருக்கிறது!

"கட்சியை உடைத்துக்  கொண்டு போனார்கள், எதிரிகளுடன் சேர்ந்துக் கொண்டு துரோகம் செய்தார்கள், தேர்தலில் தோற்றவர்களுடன் இணைந்து கொல்லைப்புறமாக ஆட்சி அமைத்தார்கள்".... எல்லாம் சரி!

4 மாதங்கள் ஆகப் போகின்றன. அதையே மீண்டும் மீண்டும் பழைய ரெக்டார்டர் மாதிரி பேசிக் கொண்டிருப்பதால் பயனொன்றும் இல்லை.

அடுத்தக் கட்டம் என்ன என்று யோசிக்க வேண்டும்!

அதான் புத்ராஜெயாவைக் கைப்பற்றப் போகிறார்களே என்கிறீர்களா?  😁

திடீர் தேர்தலைச் சந்திக்காமல் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவது என்பது நீங்கள் எல்லாரும் நினைப்பது போல் அவ்வளவு சுலபம் இல்லை. அதற்கு பலர் மனது வைக்க வேண்டும்!

ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? முதலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை உண்டா? ஏதோ சொல்லி வைப்போம் என்பதற்காக சொல்லி வைப்பதால் ஒன்றும் நடக்கப்  போவதில்லை.

சரி , உங்கள் வழிக்கே வருகிறேன். பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அளவுக்கு உங்களுக்குப் போதிய இடங்கள் இருக்கின்றன என்றே வைத்துக்  கொள்வோம், உடனே பக்காத்தான் கூட்டணியை புதிய ஆட்சியை அமைக்க மாமன்னர் அழைக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்....

யார் அந்த ஒன்பதாவது பிரதமர்?

பதில் இருக்கிறதா ? சொல்லுங்கள்.....

ஆட்சி மாறி 3 மாதங்களைக் கடந்து விட்ட போதும், இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்ற ரீதியில் தான் போய்க் கொண்டிருக்கின்றீர்களே தவிர 'வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு' என்று இதுவரை முடிவெடுக்கப்படவில்லை.

சரி எட்டாவது பிரதமர் பதவி கனவு தான் கலைந்து விட்டது; ஒன்பதாவது பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவாவது அவர் ஏகமனதாக முன்னிறுத்தப்படுவார் என்று பார்த்தால் நாமெல்லாம் பார்த்துப் பழகிப் போன அதே முகம் மீண்டும் போட்டிக்கு வந்து நிற்கிறது.

எதிர்கட்சிக்கு அன்வார் தலைமையேற்க வந்த இந்த நேரத்திலும் இன்னொரு தடை. உண்மையிலேயே மனிதர் பாவம் தான். எனக்குத் தெரிந்து உலக அரசியல் வரலாற்றில் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு, அதற்குண்டான தகுதியிருந்தும், வாய்ப்புகள் நெருங்கியும், இவ்வளவு நீண்ட நெடிய காலமாக அது நிறைவேறாமலேயே போனவர் அன்வாராகத் தான் இருப்பார்.

இம்ரான் கான் 
பாகிஸ்தான் கிரிக்கெட் சகாப்தம் இம்ரான் கான் கூட கட்சித் தொடங்கி 22 ஆண்டுகளுக்குப் பிறகு 2018-ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமர் நாற்காலில் அமர்ந்து விட்டார். 

ஆனால், அன்வாரோ, இப்போது தான் மகாதீரின் நிழலை விட்டு விலகி தனது தலைமைத்துவத்தைக் காட்டும் வாய்ப்பையே பெற்றிருக்கிறார். இப்போதும் அதற்கு தலைவலியாக அடுத்தப் பிரதமர் யார் என்ற கேள்வியால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறது PH Plus.

PKR, DAP, AMANAH வசம் மட்டுமே 91 MP-கள் இருக்கும் நிலையில் அந்த Plus list-டில் வரும் WARISAN, மகாதீர் தரப்பு BERSATU-வின் குரலே மீண்டும் ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது.

மகாதீர் பிரதமராகவும் அன்வார் துணைப் பிரதமராகவும் நிறுத்தப்படுவார் என ஒருவழியாக இணக்கம் காணப்பட்டிருப்பதாக வெளியான அரசல் புரசல் செய்திகளும் அதனை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. 

இதைப் படிக்கவும் ⇒ மகாதீர் - அன்வார் இணை முடிவானதாமே?

பதவி ஒப்படைப்புத் தொடர்பில் காற்றில் பறந்த வாக்குறுதிகளை பக்காத்தான் (PKR, DAP, AMANAH) தலைவர்கள் மறந்து விட்டார்களோ என்னவோ? 

இப்போதும் மகாதீரை முன் நிறுத்த காரணம் என்ன? அவரில்லாமல் உங்களால் முகிதின் அரசை எதிர்கொள்ள முடியாதா? அப்படியானால் இவ்வளவு நாளாக எதற்காக அன்வார் தான் எங்களின் அடுத்தப் பிரதமர் என முழங்கினீர்கள்?

மகாதீருக்கு இந்த நாடும் நாட்டு மக்களும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றனர். அதை யாரும் மறுக்கவில்லை. 2018 பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றிக்கு, பக்காத்தானின் முகமாக அவர் ஆற்றியப் பங்கு பெரியது.

ஆனால், யாருக்கும் கிடைக்காத வகையில் தமக்கு இரண்டாவது முறையாகக் கிடைத்த வாய்ப்பை, நாற்காலியை அவரே காலி செய்யப் போய்த் தான் ஆட்சியே கவிழ்ந்தது. சரி விடுங்கள்.

நீங்கள் மீண்டும் அவரையே பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, ஆட்சியைத் தாருங்கள் என்று கேட்டால் மாமன்னர் ஒப்புக் கொள்வாரா? அன்று பதவி விலகும் முடிவை அறிவித்த போது, வேண்டாம் என கேட்டும் மகாதீர் கேட்கவில்லை, விடாப்பிடியாக இருந்தார் என்ற தகவலை மே 18 ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வின் போது மாமன்னர் சொன்னாரே ஞாபகம் இல்லையா?

இந்த அரசியல் நெருக்கடிக்கெல்லாம் பிள்ளையார் சுழிப் போட்டவரை, எதுவுமே நடக்காதது போல் மீண்டும் ஆட்சியமைக்க அழைத்து விடுவாரா? இல்லை, தான் மக்கள் தான் மகாதீரை மூன்றாவது முறையாக ஏற்றுக் கொள்வார்களா?  அப்படியே ஏற்றுக் கொண்டாலும், பிரதமர் பதவியை அன்வாரிடம் இதோ ஒப்படைக்கிறேன், அதோ ஒப்படைக்கிறேன் என்ற பழைய பஞ்சாங்கம் மீண்டும் ஜவ்வாய் இழுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். இம்முறை மகாதீர் உச்சத்தில் இருந்த போது விலகவில்லை, மாறாக மக்கள் மத்தியில் தம் மீதும் தனது அரசாங்கத்தின் மீதும் கடும் அதிருப்தி நிலவிய சமயத்தில் தான் விட்டுப் போனார். 

ஆக, வியன் சொல்ல வருவது என்னவென்றால், நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களே இப்போதாவது அன்வாரை முன் நிறுத்துங்கள். அன்வார் அவர்களே, நீங்களும் மற்றவர்  இழுத்த இழுப்புக்கெல்லாம் போகாதீர்கள்.

PH தலைவர்களை உங்கள் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வையுங்கள். அது உங்களிடம் தான் இருக்கிறது. 

திரும்பவும் மகாதீர் பிரதமர், நீங்கள் துணைப் பிரதமர் என்று போய் நின்றால், அந்த ஆண்டவே நினைத்தாலும் உங்களை இனி காப்பாற்ற முடியாது!

அதற்கு பேசாமல் நீங்கள் எதிர்கட்சித் தலைவராகவே இருந்து விட்டு போய் விடலாம். வியன் பார்வையில் அது தான் இப்போதைக்கு உத்தமம்.

நீங்கள் சொன்ன 'துரோகிகள்' போய் விட்டார்கள்; கட்சியை வலுப்படுத்துங்கள், எல்லாரையும் உங்கள் தலைமையின் கீழ் ஒன்றிணையுங்கள். கூட்டணியைச் செம்மைப்படுத்துங்கள்,  இரட்டைத் தலைமை இனியும் வேலைக்கு ஆகாது.  இனி ஒரே தலைவர் நீங்கள் தான் என்பதை புரிய வையுங்கள்.

திடீர் தேர்தலோ, அல்லது அடுத்த பொதுத் தேர்தலோ, அதற்கு பக்காத்தானைத் தயார் படுத்துங்கள். நம்பிக்கையானவர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் கொண்டுள்ள வெறுப்பைத் தணிக்கப் பாருங்கள்.


இதை விடுத்து, மீண்டும் மகாதீர் தலைமையை ஏற்றுக் கொண்டு, இரண்டாம் இடமே எனக்குப் போதும் என நீங்கள் பிடிவாதம் பிடித்தால், நாங்களும் என்ன தான் செய்ய முடியும்?

உங்களின் உயிர் தொண்டர்களே, " இனி நீங்கள் வயசுக்கு வந்தால் என்ன, வரா விட்டால் என்ன? " என்ற கவுண்டமணி-செந்தில் வசனத்தைப் பேசி விட்டு தூரப் போய் விடுவார்கள்.

20 ஆண்டு கால போராட்டம் உங்கள் ஒருவருடையது மட்டும் அல்ல, உங்களை நம்பி, இன்னனும் விட்டுக் கொடுக்காமல் உங்கள் பின்னால் உறுதியாக நிற்கும் கடைக் கோடி தொண்டர்களுக்கும் சொந்தமானது.

விவேகமான முடிவை, வேகமாக எடுங்கள்!
இல்லையென்றால் விமர்சனத்தில் #வியன் வேகமெடுத்து விடுவான்...


#அன்வார் #மகாதீர் #பக்காத்தான் #நம்பிக்கைக்கூட்டணி #PM8 #Anwar #TunM #Mahathir #AnwarIbrahim #MahathirMohamad #PHPlus

No comments: