அண்மைய மின் கட்டண அறிக்கையைப் பார்த்து நம்மில் பலருக்கு நெஞ்சு வலி வராத குறை தான்!
அந்த அளவுக்கு கட்டணம் தடாலடியாக உயர்ந்திருந்தது.
அதற்கு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை #MCO காலத்தில் நீங்கள் எல்லாரும் வீட்டிலேயே இருந்ததால் அதிக மின்சாரப் பயன்பாடு ஏற்பட்டு விட்டது என
TENAGA NASIONAL BERHAD வில்லங்கமான விளக்கத்தை அளித்து வாங்கிக் கட்டிக் கொண்டது.
காப்பிக் கடைகளில் பொது மக்கள் தொடங்கி சமூக வலைத் தளங்களில் இணையவாசிகள் வரை TNB-யை நார் நாராக கிழித்துத் தொங்க விட்டனர்.
இதற்கு அரசாங்கத்தின் பதில் என்னவாக இருக்கும் என #வியன் -னும் ஆர்வமாகத் தான் இருந்தான்.
நல்ல நாளாக பார்த்து இன்று சனிக்கிழமை ஜூன் 20-ஆம் தேதி நல்ல பதில் வந்திருக்கிறது.
அதாகப்பட்டது....
👉 ஏப்ரல் , மே, ஜூன் மாதங்களில் 300 கிலோ வாட்டுக்கும் குறைவான மின்சாரப் பயன்பாட்டுக்கு அதாவது 77 ரிங்கிட்டுக்கும் குறைவான கட்டண அறிக்கையைப் பெற்ற 40 லட்சம் வீடுகளுக்கு, அம்மூன்று மாதங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
👉 300 கிலோ வாட்டுக்கும் கூடுதலாக மின்சாரத்தைப் பயன்படுத்தியோருக்கு அதே 3 மாதங்களுக்கு 77 ரிங்கிட் கட்டணக் கழிவு வழங்கப்படும்.
👉 இதன் வழி தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 76 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் பயனடையும் என எரிசக்தி, மூலப் பொருள் அமைச்சர்
Shamsul Anuar Nasarah சற்று முன்னர் அறிவித்தார்.
👉 ஜூலை மாதத்திற்கான கட்டண அறிக்கையில் சலுகை விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
👉 கட்டண பாக்கியை வைத்திருக்கும் வீடுகளுக்கான மின்சார இணைப்பைத் துண்டிக்கும் நடவடிக்கையும் செப்டம்பர் 30 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
மக்களின் சுமையைக் குறைக்கும் வண்ணம் #BantuanPrihatinElektrik Tambahan உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கூடுதல் சலுகைக்கு பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் ஒப்புதல் அளித்துள்ளார் ( நீங்க நல்லா இருக்கோனும், நாடு முன்னேற 😅)
வாரக் கடைசி அதுவுமாக நல்ல செய்தியைத் தந்திருக்கிறீர்கள், நன்றி!
மக்களின் குறைகளைக் கேட்டு நடக்கும் அரசாக நடப்பு அரசாங்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்திருக்கிறது.
என்றாலும், TNB-யின் 'விளக்கெண்ணய்' விளக்கமும், அமைச்சரின் 'அசால்ட்' போக்கும், சம்பந்தப்பட்டோரின் 'சப்பைக் கட்டுகளும்' ஆரம்பத்திலேயே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
மக்களின் மன ஓட்டத்தை கண்டறிவதாக நினைத்து, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, கடைசியில் இது போன்ற அறிவிப்புகள் வரும் போது, 'பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவீர்கள்!' 'U-turn' போன்ற விமர்சனங்களும் வரவே செய்யும்.
சரி, மக்களுக்கு நல்லது நடந்திருக்கிறது!
வரவேற்று விடைபெறுகிறான் #வியன்
1 comment:
மூன்று மாதங்களுக்கு மின்சாரப் பயன்பாட்டுக்குக் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு சரியானது. நியாயமானது, எரிந்து கொண்டிருக்கும் மக்கள் மனதில் நீரை வார்த்தது. எல்லாம் சரி தான். ஆனால் மக்கள் கொந்தளித்ததால் தான் இந்த நியாயம் கிடைத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்ஜளுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதிகார வர்க்கம் கண்டும் காணாது போலத் தான் இருக்க வேண்டுமா? ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் பொறுமையிழந்து கொந்தளிக்கும் போது தான் நிலைமையைச் சமாளிக்க இதுபோன்ற தீர்வை எடுக்க வேண்டுமா? எத்தனை பேர் வேலை வெட்டியை விட்டு TNB நிறுவனத்துக்கு அலையாய் அலைந்திருப்பர்? என்ன கொடுமை இது... இந்த நிலை இன்னும் நீடிக்கணுமா? அதிகாரிகளுக்கு வந்தால் இரத்தம், மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
Post a Comment